ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

ஒபாமா

ஒபாமா வெற்றிக்கு வாழ்த்துக்கள்
அது அவருக்கு உரிய வெற்றியல்ல ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி

வாழ்க ஓபாமா அவர்தம் பணி

ஹிக்கடுவ பீச் பெஸ்டிவல்

வீதியெங்கும் விழாக்கோலம் பூண்டு, கடற்கரை நெடுக வண்ணமயக் கொடிகள் வானவில்லாய் காட்சி தர வானைத்தொடும் ஹோட்டல்களும் விடுதிகளும் கம்பீரமாய் எழுந்து நிற்கும் ஹிக்கடுவ நகரில் ஹிக்கடுவ பீச் பெஸ்டிவல் 2008 வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஆசியப் பிராந்தியத்தின் மிகப் பிரமாண்டமான கடற்கரைக் கொண்டாட்டமாக அமைந்தது ஹிக்கடுவ கடற்கரை கொண்டாட்டம். 2008 இல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் விருந்தினர்களும் கலந்துகொண்டனர். மிகவும் சிறப்பான முறையில் இலங்கை சுற்றுலாத்துறையினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு இலங்கையின் முன்னணி நிறுவனங்களான ரிகோ, றியல் றேடியோ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ், சம்பத் வங்கி மற்றும் மஞ்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் அனுசரணையாளர்களாக இருந்தன.

கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வுகள் உண்மையில் மிகவும் சிறப்பானதொரு கொண்டாட்டமாகவே இருந்தன.
அதேவேளை, ஹிக்கடுவ நகரமே வண்ணமயமாகக் காணப்பட்டதுடன் புதுப்பொலிவாக தன்னை மாற்றிக்கொண்டது.

இக்கொண்டாட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் கலாசார மற்றும் மேலைத்தேய, கீழைத்தேய நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
இலங்கை சுற்றுலாத்துறையினரால் நேர்த்தியான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட இந்நிகழ்வில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆசியப் பிராந்தியத்தின் இவ்வருடத்திற்கான மிகப்பெரிய கொண்டாட்டமாக மாற்றியிருந்தன
ர்.
ஹிக்கடுவ கோரல்ஸ் கார்டன் ஹோட்டலில் ஆரம்பநாள் நிகழ்வின்போது உரையாற்றியிருந்த பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா;
ஹிக்கடுவவில் நடைபெறும் இக்கொண்டாட்டத்தின் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையையும் ஹிக்கடுவ பிரதேசத்தையும் சர்வதேசமே மெச்சும் அளவிற்கு அமையுமெனத் தெரிவித்திருந்தா
ர்.
அவரது கூற்றுக்களை மெய்ப்பிக்குமளவிற்கு அந்த ஐந்து நாட்களும் இடம்பெற்ற நிகழ்வுகள் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஓர் புதிய பரிணாமம் கிடைத்துள்ளது.

ஆரம்ப நாள் நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மேள தாள வாத்தியங்களின் அணிவகுப்புகளுடன் தேசிய நடனங்களும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அணிவகுப்புகளும் இடம்பெற்றிருந்தன.

அதேவேளை, இராமர், சீதா வரலாறு கூறும் நடனம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் அதற்கென கடலலைகள் முத்தமிடும் தரையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினில் நடைபெற்றது.

மிகவும் நேர்த்தியான ஒளி அமைப்பு அரங்கிற்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்திருந்த அதேசமயம் ஒலி அமைப்பும் துல்லியமானதாக இருந்தது.

ஒவ்வொரு நாள் இரவும் ஒன்பது மணியளவில் ஆரம்பமாகும் அரங்க நிகழ்வுகள் மறுநாள் அதிகாலை வரை நீண்டதுமுண்டு.
ஒவ்வொரு தினமும் விதம் விதமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி பகல் நேர நிகழ்வுகளாக கடற்கரை விளையாட்டுக்கள், மணற்சிற்பம் அமைத்தல், உணவு கொண்டாட்டம், கடற்கரைச் சந்தை, சிறுவர் விளையாட்டுகள், பட்டம் விடும் போட்டி, குதிரைச் சவாரி என்ற நிகழ்வுகள் ஹிக்கடுவ கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, இந்நிகழ்வுகளின் ஓர் அங்கமாக தொங்தட்டுவ வாவியில் தனி மனிதர் ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டு நிர்வகித்துவரும் எக்கோ விலேஜில் படகு வலித்தல், படகுப் போட்டி ஆகியன நடைபெற்றிருந்தன.

திலக் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த எக்கோ விலேஜ் அருமையானதொரு இயற்கையுடன் இணைந்த சூழலில் மிகவும் வசீகரமாகக் காட்சி தருகின்றது.

சுற்றுலாத்துறையின் எதுவிதமான உதவிகளுமின்றிச் செயற்பட்டுவரும் தனது நிறுவனம் இலங்கை சுற்றுலாத்துறையின் ஓர் அங்கமாக இணைய வேண்டுமென்பதே தனது நீண்டகால அவா எனத் திலக் தெரிவித்தார்.
முதல்நாள் அரங்க நிகழ்வில் நம்நாட்டுக் கலைஞர்களின் பல்வேறு நடன நிகழ்வுகள் நடைபெற்றன.

ஒவ்வொரு நடனமும் இரசிகர்களை மாற்றுத்திசை திரும்ப முடியாதளவிற்கு சிறப்பான முறையில் நெறியாள்கை செய்யப்பட்டு உரிய கலைஞர்களால் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.

பெரும்பாலும் நமது கலாசார, தேசிய விழுமியங்களுடன் அமைந்த இந்நடன நிகழ்வுகளில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் லயித்துப்போயிருந்தமை எம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் விடயமே.

இரண்டாம் நாள் அரங்க நிகழ்வு ட்ரம் வாத்தியத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் புகழ்பூத்த ட்ரம் வாத்தியக் கலைஞர்களான நேசன் தியாகராஜா, ரவிபந்து வித்தியாபதி உள்ளிட்ட பிரபல கலைஞர்களின் குழுக்கள் ட்ரம் வாத்திய நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியிருந்தன.

இந்த ட்ரம் வாத்திய இசை நிகழ்வுகளை மேலும் மெருகூட்டும் வகையில் புகழ்பூத்த புல்லாங்குழல் கலைஞர் பிக்ரம்ஜித் சிங்கின் புல்லாங்குழல் இசை அனைவரினதும் உள்ளங்களைத் தழுவிச் செல்லுமளவிற்கு அமைந்திருந்தது.
அதேவேளை, ஹிக்கடுவையில் தோன்றி வளக்கின்ற எலிபன்ட் புட் ட்ரம் வாத்தியக் குழுவினரின் நிகழ்வு மிகவும் சிறப்பானதும் வித்தியாசமானதுமொரு நிகழ்வாக அன்றைய அரங்கை அலங்கரித்த அதேவேளை நின்றவர்களையும் துள்ளவைத்துக் கொண்டிருந்தது.

இவ்வாறான நிகழ்ச்சிகளை வழங்கக்கூடிய நமது கலைஞர்கள் இருக்கின்றார்கள் என்பதை வெளி உலகிற்கும் ஏன் நம்நாட்டுக்குமே வெளிக்கொண்டுவந்த பெருமை இலங்கை சுற்றுலாத்துறையினரையே சாரும்.

பகல் நேர நிகழ்வுகளாக இடம்பெற்ற கரையோர விளையாட்டுகளில் பீச் றகர், பீச் கரப்பந்தாட்டம் போன்றவை நடைபெற்றிருந்தன.

இவ்விளையாட்டுகளில் பல்வேறு பாடசாலைகள், கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.

அதேவேளை, மணற்சிற்பம் தீட்டும் நிகழ்வில் சிறுவர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர். வெளிநாட்டுச் சிறுவர்களும் தமது பெற்றோருடன் இணைந்து சிற்பங்களை அமைத்து தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமையைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மூன்றாம் நாள் அரங்க நிகழ்வின்போது ஸ்கொட்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார் டிஜே இசை வல்லுநர் லீசா லிட்டில்.
டிஜே இசைக்கலைத்துறையில் உலகளவில் முதற் பெண்மணி என்ற பெருமைக்குரிய இவர் சர்வதேச டிஜே கலைஞர்களுடனான தரப்படுத்தலில் மூன்றாமிடத்தில் உள்ளார்.

லீசாவின் கைவண்ணத்துடனும் டிஜே தொழில்நுட்பத்துடனும் இணைந்து பிறந்த மேலைத்தேய இசைக் கலவைக்கு நடனமிட பிரிட்டனிலிருந்து வந்த ஆறு நடன மாதர்கள் அரைகுறை நிர்வாணத்தில் அரங்கினில் நடனமிடும் அதேசமயம் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருமே தம்மையறியாமல் ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர்.

இதேவேளை, நம்நாட்டுக் கலைஞரான அல்ஸ்ரொன் கொச்சும் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்து சில பாடல்களை பாடி மகிழ்வித்திருந்தார்.

அரைகுறை ஆடை நடன மாதர்களை தமது புகைப்படக் கருவிக்குள்ளோ அல்லது கையடக்கத்தொலைபேசிகளுக்குள்ளோ பதிவுசெய்து விட வேண்டும் என்ற அவாவுடன் அரங்கின் முன்னால் ஒரு கூட்டம் அலைமோதியது.
எவர் என்னதைச் செய்தாலும் நமக்கென்ன என்ற எண்ணத்துடனும் தாராள மயக் கொள்கையுடனும் ஆறு நடன மாதர்களும் நடனமிட்டுக்கொண்டிருந்தனர்.
இவ்வாறாக இரவைப் பகலாக்கிய மின்னொளியில் அதிகாலை வரை நடன மாதர்களின் நடன நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இரண்டாயிரம் ரூபா செலுத்தி அனுமதிச் சீட்டினைப் பெற்று இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தவர்களில் அநேகரின் கைகளிலும் ஒருவகை மதுபானமும் ஆறாம் விரலாக சிகரட்டும் விடியும் வரை நழுவாதிருந்ததைக் காண முடிந்தது.

இவ்வாறாக பல்வேறுபட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் ஜூலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரை களைகட்டியிருந்தது ஹிக்கடுவ நகரம்.

இலங்கை சுற்றுலாத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கொண்டாட்டத்தின் மூலம் சுற்றுலாத்துறை வரலாற்றில் இலங்கை புதியதொரு காலடி வைத்துள்ளது.

வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையே முற்றாக இலக்காகக் கொண்டுள்ள எமது சுற்றுலாத்துறைக்கு இந்நிகழ்வு நிச்சயமாக வெற்றிப்பாதையையே காட்டும்.



யோ.நிமல்ராஜ்
நன்றி தினக்குரல் புதன் வசந்தம்

ஹிலாரியின் பிரசாரப் பின்னடைவில் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி

கடந்த ஐந்து மாதங்களாக உலகின் கவனத்தை தன்வசப்படுத்தியிருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வுக்களம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பாளர் தேர்வில் பராக் ஒபாமா ஈட்டியுள்ள வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவுசெய்வதில் அமெரிக்கா கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்ததுடன் இத்தேர்தல் களம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் அநேகமான தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அரிசோனா மாநில செனட்டரான ஜோன் மெக் கெய்ன் தெரிவாகி இருந்தார்.

ஆனால், ஜனநாயகக் கட்சியின் தேர்தல் களமோ இறுதிவரை இவர்தான் வேட்பாளர் என்பதனைத் தீர்மானிக்க முடியாத நிலையில் ஒபாமாவும் ஹிலாரி கிளின்டனும் மாறி மாறி பெற்ற வெற்றிகள் அனைவரினதும் எதிர்ப்பார்ப்புகளை ஏமாற்றிக் கொண்டிருந்தன.

இல்லினொய் செனட்டரும் கறுப்பின வம்சாவளி இனத்தவருமான பராக் ஒபாமா, கென்யாவைச் சேர்ந்த கறுப்பினத் தந்தைக்கும் கன்சாளைச் சேர்ந்த வெள்ளையினத் தாய்க்கும் பிறந்தவர்.

இருவடன் போட்டிக் களத்தில் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையைத் தனதாக்கிக் கொள்வதற்காக ஹிலாரி கிளின்டன் தீவிர பிரசாரத்தில் குடும்பத்துடன் ஈடுபட்டுவந்தார்.

கணவன் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என்ற பின்னணியை தன்னகத்தே கொண்டிருந்த ஹிலாரிக்கு அரசியல் பின்னணி, உயர்மட்ட செல்வாக்கு, முக்கியமான மாநிலங்களில் பெற்றுக் கொண்ட வெற்றிகள் மேலும் உறுதுணையாக இருந்தன.

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராவதற்கு 2025 பேராளர்களை திரட்ட வேண்டிய நிலையில் இருவரும் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, 1191 பேராளர்களை வெற்றிகொண்டால். வேட்பாளராகலாம் என்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களில் 1232 பேராளர்களை தன்வசப் படுத்தியதன் மூலம் குடியரசுக் கட்சியின் வேட்பாளரானார் மெக்கெய்ன்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின்படி 2154 பேராளர்களையும் 389 சிறப்பு பேராளர்களையும் பராக் ஒபாமா பெற்றுள்ள அதேவேளை 1919 பேராளர்களையும் 282 சிறப்புப் பேராளர்களையும் பெற்றுள்ளார் ஹிலாரி கிளின்டன்.

இப் பேரளார்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் ஹிலாரிக்கும் ஒபாமாவுக்கும் இடையில் பேராளர்களிலும் சரி சிறப்புப் பேராளர்களிலும் சரி பாரியதொரு தொகைமாற்றத்தினை காணக்கூடியதாக இல்லை.

இருந்தாலும் இருவரினதும் பிரசார அணிகளில் பாரிய வித்தியாசமொன்று காணப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

பராக் ஒபாமாவைப் பொறுத்தவரையில் தனது பிரச்சாரக் குழுவில் எந்தவொரு முரண்பாடுகளையோ அல்லது நிதிப் பற்றாக் குறையையோ சந்தித்திருக்கவில்லை.

ஆனால், ஹிலாரியின் பிரசாரக் குழு இக்குறிப்பிட்டதொரு காலத்தில் பாரிய மாற்றங்களைச் சந்தித்திருந்தது.
அதாவது, பிரசாரச் செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்பட்டுக் கொண்டும் பதவி விலகிக் கொண்டும் இருந்தனர்.
இருந்தாலும் தான் ஒபாமாவை விட எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தனது கணவன், மகள் ஆகியோரை ஆயுதங்களாகக் கொண்டு புதிய பரிணாமத்தில் பிரசாரப்போரை முன்னெடுத்திருந்தார்.

கணவன் கிளின்டன் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அகில அமெரிக்காவின் ஆதரவைப் பெறலாமென்றதொரு நோக்குடன் ஹிலாரி செயற்பட்டிருக்கலாம்.

இருந்தாலும் பில்கிளின்டன் ஜனாதிபதியாக இருந்தபோது செங்கோல் செலுத்தியிருந்தாலும் தனது பதவிக்காலத்தில் புரிந்த காதல் லீலைகள் அம்பலமாகியிருந்தமை கிளின்டனின் செல்வாக்கில் கறைபடிந்த விடயமாகியது.

இருப்பினும் கிளின்டன் பிரசாரப் பணியில் மனைவிக்காக தளராத வேகத்துடன் ஈடுபட்டு வந்தார்.
அத்தோடு ஹிலாரியின் மகள் பல்கலைக்கழக மாணவியாக இருந்து பல்கலைக்கழக மாணவர்களிடம் மட்டுமல்லாது ஏனைய இளம் மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டுவதில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறாக பல்வேறு முகங்களில் ஹிலாரி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் நிதி நெருக்கடி அவரது பிரசார போருக்கு பாரிய தடையாக இருந்தது.

ஏனெனில் தேர்தலுக்கான நிதி சேகரிப்பு விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே பராக் ஒபாமாதான் முன்னணியில் இருந்தார்.
இந்நிலையிலும், தொடர்ந்து ஒபாமாவுக்கு எதிரான போட்டியில் ஹிலாரி ஓடிக்கொண்டே இருந்தார்.

ஒபாமாவின் பிரசாரத்தை பொறுத்தவரையில் தானும் தனது குடும்பத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் ஒபாமாவின் பிரசார அணியில் எதுவிதமான குழப்பங்களும் மாற்றங்களும் இடம்பெறவில்லை.

ஆரம்பத்தில் ஒபாமாவுக்கு கறுப்பினத்தவர் என்ற ரீதியில் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும் நாளடைவில் அது மறைந்து போயுள்ளதென்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்கொணர்ந்துள்ளன.

அத்துடன் அமெரிக்காவின் பிரதான கட்சியொன்றின் ஜனாதிபதி வேட்பாளராக கறுப்பினத்தவர் ஒருவர் நியமனம் பெறுவது தொடர்பாகக் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மையை தனது வெற்றிவாகை மூலம் முறியடித்து வரலாறு படைத்துள்ளார் பராக் ஒபாமா.

இதேவேளை, அமெரிக்க வரலாற்றில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முதலாவதாக நியமிக்கப்படும் ஆபிரிக்க அமெரிக்கர் என்ற பெருமைக்குரியவராக பராக் ஒபாமா விளங்குகின்றார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா தெரிவாகியுள்ள நிலையில் ஒபாமாவுடன் இணைந்து துணை ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி போட்டியிடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வேட்பாளர் தெரிவில் வெற்றியீட்டியிருக்கும் ஒபாமா, கடந்த சில மாதங்களாக சிதறுண்டிருக்கும் கட்சியை ஐக்கியப்படுத்தி அரசியல் எதிரியான குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மெக் கெய்னுடனான போட்டியிலும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதில் உறுதியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறந்த மனோ தைரியமும் முற்போக்குக் கொள்கைகளையும் கொண்ட ஒபாமா அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.
அத்துடன், பிரசார நடவடிக்கைகளில் அந்நியோன்யம், எளிமை போன்றனவும் ஒபாமாவுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விடயமாக இருந்துள்ளது.

ஹிலாரியின் பிரசாரங்களில் ஈடுபடுவதில் தான் பெருமையடைவதாக பில் கிளின்டன் கூறியிருந்தாலும் தனது பதவிக்கால வாழ்வுகண்ட காதல் அத்தியாயத்தால் அவ்வளவான ஆதரவாளர்களை கிளின்டன் திரட்ட முடியவில்லை.

இதேவேளை, இத்தேர்தல் போட்டியில் ஹிலாரி சரித்திரம் படைத்திருக்கிறாரென்றும் பெண் என்ற ரீதியில் மட்டுமல்லாது இதுவரை எந்தவொரு பெண்களும் செய்திராத அளவுக்கு தனது அறுபதாவது வயதிலும் சாதனை படைத்து பல இலட்சக் கணக்கான அமெரிக்கர்களின் ஆதரவை பெற்றுள்ளாரெனவும் ஒபாமா பாராட்டியுள்ளார்.

இதேவேளை, துணை ஜனாதிபதிகளான பட்டியலில் செனட்டர் சுக் ஹாஜில் மற்றும் நியூயோர்க் மேஜர் மைக் புளும்போ போன்றோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளமையால் துணை ஜனாதிபதித் தெரிவில் ஒபாமா எத்தகைய முடிவை மேற்கொள்ளவுள்ளாரென்பதை எதிர்வு கூறமுடியாதுள்ளது.

இவ்வாறாக ஹிலாரி கண்ட நிதி நெருக்கடியிலும் பிரசாரப் பிரிவு கண்ட பின்னடைவுகளிலும் ஒபாமாவின் வெற்றி மலர்ந்துள்ளது.
ஒபாமாவேட்பாளரானாலும் ஜனாதிபதித் தேர்தலிலும் வெள்ளை, கறுப்பு என்ற இனப் போராட்டம் மீண்டும் நவம்பரில் தொடரவுள்ள நிலையில் அமெரிக்கர்களின் தெரிவு எவ்வாறாக அமையுமென்பதை உலகமே ஆவலுடன் உற்று நோக்கியுள்ளது.
சர்வதேச விவகாரங்களில், எதுவிதமான அழைப்புகளுமின்றி களமிறங்கும் அமெரிக்காவின் புஷ் நிர்வாகத்தின் போர் வெறியாலும் ஆக்கிரமிப்பு அராஜக் கொள்கைகளாலும் வெறுப்புற்றிருக்கும் அமெரிக்கர்களும் அனைத்துலக நாடுகளும் சர்வதேச ரீதியிலான அமைதி பேணும் தலைமைத்துவ மாற்றமொன்றிற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகியுள்ள ஒபாமா ஜனாதிபதியானால் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவாரென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யோ. நிமல்ராஜ்
நன்றிஞாயிறு தினக்குரல்

நர்க்கீஸின் தூறல் ஓய்ந்துவிடாத நிலையில் சீனாவை உலுக்கிச் சென்றுள்ள பூகம்பம்



உலகில் மனிதனின் இருப்பைக் கேள்விக்குறியாக்குமளவிற்கு இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்தவண்ணமிருப்பது நிச்சயமாக மனிதனின், ஏன் உலகின் இருப்பையே சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.
ஆம், அந்தளவிற்கு அண்மையில் ஆசியப் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள இரு பேரனர்த்தங்கள் அவ்வாறு சிந்திக்கத் தூண்டியுள்ளது.
உலகு கண்ட கொடூரமான இயற்கைப் பேரனர்த்தங்களில் ஒன்றாகப் பேசுமளவிற்கு கடந்த பன்னிரெண்டாம் திகதி சீனாவை உலுக்கியுள்ளது பூகம்பம்.
இது ஒருபுறமிருக்க, மியன்மாரில் தனது கைவரிசையை காட்டிச் சென்ற நர்க்கீஸ் சூறாவளியில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரையில் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, மேலும் பலரின் நிலைமை விடைபெறமுடியாத கேள்விகளாகவே உள்ளமை மேலும் அதிர்ச்சி தரும் விடயமாகவுள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலும் பெரும்பாலான மியன்மார் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கை நீட்டுகின்றபோதும் அவர்களின் கைகளிற்கு பதில் கொடுக்கவோ அல்லது பதில் கொடுக்க முன்வருபவர்களுக்கு இடமளிக்கவோ இல்லை மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள்.
இவ்வாறான நிலையிலும் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் மியன்மார் அரசால் வழங்கப்படவில்லை.
மியன்மாரில் நர்க்கீஸின் தூறல் நின்றுவிடாத நிலையில் மற்றுமொரு ஆசிய நாடான சீனாவில் பூகம்பம் தலைவிரித்தாடி குடும்பங்களை சிதைத்தும் குழந்தைகளை அநாதைகளாக்கியுமுள்ளது.
சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள சிஞ்சுவான் மாகாணத்தில் 7.8 மக்னிரியூட் அளவில் கிளம்பிய பூகம்பம் சிஞ்சுவானை அண்மித்த பகுதிகளில் ஊடுருவித் தனது பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது.
பன்னிரெண்டாம் திகதி பகல் 14.28 மணியளவில் பூகம்பம் தோன்றியதால் சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் அதிகமாகக் காணப்பட்டனர்.
அலுவலகங்களோ பாடசாலைகளோ மூடப்படாமல் கடமை நேரத்தில் இருந்தமையும் ஒரே நேரத்தில் குறிப்பிட்டதொரு இடத்திலிருந்து பெருமளவான உயிர்களை காவுகொள்வதற்கு காரணமாயிற்று.
பூகம்பம் தாக்கிய பகுதிகளிலிருந்த எட்டுப் பாடசாலைகள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படும் அதேவேளை, ஒரு சில பாடசாலைகள் முற்றாக நிலத்துள் புதைந்துவிட்டதென்றும் பாடசாலை ஒன்றிலிருந்த 900 மாணவர்களின் உயிர்களும் பறித்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 22 ஆயிரத்து அறுபத்து ஒன்பது பேரின் இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் இத்தொகை ஐம்பதாயிரமாகவோ அல்லது அதற்கு அப்பாலோ அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.
கடந்த 1976 ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றிய தங்சான் பூகம்பத்தில் இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
அதற்குப் பின்னர் அவ்வாறானதொரு தொகையைப் பலிகொண்ட பூகம்பத்தை சீனா கண்டிராவிடினும் 1947 இல் 6.4 மக்னிரியூட் அளவில் தாக்கிய பூகம்பத்தில் 50 பேர் பலியானதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தும் 1997 ஏப்ரல் 6.6 ரிச்டர் பூகம்பத்தில் 9 பேரும், 1998 ஜனவரியில் 6.2 ரிச்டரில் தோன்றிய பூகம்பத்தில் 47 பேரும், 2003 பெப்ரவரியில் 6.8 ரிச்டரில் தோன்றிய பூகம்பத்தில் 94 பேரும் பலியாகியிருந்தனர்.
ஆனால், கடந்த 2008 மார்ச்சிலும் 7.2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஒன்று சீனாவைத் தாக்கியிருந்தும் உயிரிழப்புகள் ஏற்படுமளவிற்கு அதன் தாக்கம் அமைந்திருக்கவில்லை.
அத்துடன், கட்டிடத்தின் சேதங்களும் மிகவும் குறைவாகவே இருந்தமை, இன்றைய மற்றும் முன்னைய காலங்களில் தோன்றிய பூகம்பங்களின் அளவுகளுடன் ஒப்பிடுகையில் அதிசயிக்கத்தக்கதாகின்றது.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி 7.8 ரிச்டர் அளவில் முதலாவது பூகம்பமும் சற்றுப் பின்னர் 5.9 ரிச்டர் அளவில் இரண்டாவதும் தோன்றியிருந்தது.
முதலாவதில்தான் பாரிய அனர்த்தங்கள், கட்டிட அழிவுகள் ஏற்பட்டிருந்தாலும் இரண்டாவதில் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு என்பன மட்டுமே பாதிக்கப்பட்டது.
இப்பூகம்பத்தின் தாக்கத்தினால் 4.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக புகலிடங்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சீன ஜனாதிபதி ஹுஜிந்தாவோ சேதங்கள் ஏற்பட்ட இடத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டுள்ளமை, அந்நாட்டில் மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலிருக்கும் அந்நியோன்யத்தை வெளிக்காட்டியுள்ளது.
பாடசாலைக் கட்டிடங்களின் இடர்பாடுகளுக்குள் கிட்டத்தட்ட 1,700 மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
சிஞ்சுவான் மாகாணத்தில் மாத்திரம் இரண்டு லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
எப்பகுதியைத் தோண்டினாலும் உடல்களே வந்து வந்து குவிகின்றன.
பாடசாலைக் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து தமது பிள்ளைகளோ சகோதரர்களோ திரும்பி வருவார்களாவென எதிர்பார்த்தபடி பெற்றோர்களும் உறவினர்களும் இன்னமும் காத்திருக்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சீனா வெளிநாட்டு உதவிகளுக்கோ ஊடகங்களுக்கோ எந்தவிதமான மறுப்புகளையும் வெளிப்படுத்தாமல் அங்கு என்ன நடக்கின்றதென்பதை வெளி உலகிற்கு காட்டுகின்றது.
அத்துடன், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மியன்மாருடன் ஒப்பிடுகையில் சீனா இவ் அனர்த்தத்தின்போது கையாண்ட அணுகுமுறை வித்தியாசமானதாகவே உள்ளது.
பிறநாடுகளிலிருந்து அவசர உதவிகளும் மீட்புப் பணியாளர்களும் சீனாவுக்கு வந்துள்ள அதேசமயம், காயமடைந்த மக்களுக்கு தேவையான இரத்தமும் வெளிநாட்டு நலன்விரும்பிகளால் வழங்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
தாய்வானிலிருந்து மாத்திரம் 150 தொன் உதவிப் பொருட்கள் இரண்டு சரக்கு விமானங்களில் சீனாவை வந்தடைந்துள்ளன.
அவசர உதவிகள் நேரடியாகவே மக்களைச் சென்றடையும் வகையில் சீன அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பொருளாதார ரீதியாகவும் சீனாவில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ள அதேசமயம், அநாதைகள் ஆக்கப்பட்டுள்ள பலரின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.
பெற்றோர்களைத் தேடும் பிள்ளையும் பிள்ளையைத் தேடும் பெற்றோருமாக எங்கும் அழுகுரல்களே கேட்ட வண்ணமிருக்கின்றன.
எவருமே எவருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் நடைப்பிணங்களாய் தமது உறவுகள் வருவார்களா என கட்டிட இடிபாடுகளை நோக்கியும் இறந்தவர்களின் உடல்களை திறந்து பார்க்கத் தெரியாதவர்களாகவும் அலைந்து திரியும் கோரக்காட்சிகள்....
ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பிஞ்சுகள் பிணங்களாக பெற்றோர்களின் கைகளில்.
பள்ளிக்குச் சென்ற பிள்ளை பிணமாகத் திரும்புமென எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
இன்னமும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தைகளை மீட்புப் பணியாளர்கள் தம்முயிரை பணயமாக வைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக வெளி உலகமே சீனாவை உற்றுநோக்கிக் கொண்டிருந்தவேளை தற்பொழுது அனைத்துத் தரப்பினரின் பார்வையை மேலும் வலுவடையச் செய்திருக்கின்றது சீனாவில் ஏற்பட்டுள்ள இப்பூகம்பம்.
இவ்வாறான இயற்கைப் பேரழிவுகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொள்வது அதிகரித்திருப்பது நிச்சயமாக உலகின் இருப்பை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளமையை எவராலும் மறுக்க முடியாது.

நன்றிஞாயிறு தினக்குரல்

யோ.நிமல்ராஜ்

மியன்மாரில் கோரத்தாண்டவமாடிய நர்க்கீஸ் சூறாவளியும் உலக சந்தையில் அரிசியின் தட்டுப்பாடும்?



இராணுவ ஆட்சியின் இரும்புப் பிடியில் சிக்கித் தவிக்கும் மியன்மாரை கோரத்தாண்டவமாடி சின்னாபின்னமாக்கி சிதறடித்துச் சென்றுள்ளது நர்க்கீஸ் சூறாவளி என்று கூறுமளவிற்கு நர்க்கீஸின் தாக்கம் அந்நாட்டில் ஊன்றிப் பதிந்துள்ளது.

உலகளவில் எந்தளவிற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றதோ இல்லையோ இயற்கை, செயற்கை ஆகிய இரண்டும் இணைந்து, மனிதப் படுகொலைகளையும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த 2004 ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் கடல்கோள் அனர்த்தத்தின் மூலம் இந்து சமுத்திரத்தை அண்மித்த பல நாடுகளிலிருந்து இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொள்ளப் பட்டு அதன் வடுக்கள் இன்னமும் அழிந்தும் அழியாத நிலையிலுள்ளன.

இதேவேளை இக்கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேசத்திலிருந்து நிவாரண உதவிகள் அந்தந்த அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டும் இன்னமும் உரியவர்களுக்கு போய்ச் சேராமல் இடைத்தரகர்களின் கைகளில் அகப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்தவாரம் சூறாவளியும் பெரும் புயல் காற்றும் மியன்மாரில் கோரத்தாண்டவமாடியதில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் வரை பலியாகி இருக்கலாமென அஞ்சப்படுவதுடன், மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமலும் போயுள்ளனர்.

உலகின் மிகமிக மோசமான பேரனர்த்தங்களில் ஒன்றாக கருதப்படும் இச்சூறாவளியில் மியன்மாரின் பல நகரங்கள் அழிந்துள்ளமையாலும் மீட்புப் பணிகள் சற்றுத் தாமதமாகவேனும் தொடர்ந்து நடைபெறுவதாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையோ அல்லது காணாமல் போயிருப்பவர்களின் எண்ணிக்கையையோ சரியாகவும் உறுதியாகவும் கூறமுடியவில்லை.

இதேவேளை பலியானவர்களில் பெரும்பாலான எண்ணிக்கையில் சிறுவர்கள்தான் அடங்குகின்றனரென்பது மற்றுமொரு அனர்த்தமாகவுள்ளது.

புயல் சூறாவளி என்பவைதான் மியன்மாரைத் தாக்கியிருந்தாலும் நகருக்குள் புகுந்த கடல்நீர்தான் பெரும்பாலானவர்களை இழுத்துச் சென்றுள்ளதென்றும் கூறப்படுகின்றது.
இதற்கு ஆதாரமாக கரையோர நகரொன்றில் வாழும் இருநூறோ அல்லது அதற்கு அண்மையிலமைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் முற்றாக கடல் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
சுமார் பதின்மூன்று அடி உயரத்துக்கும் மேலாக எழுந்த கடலலைகள் கரையோரப் பிரதேசங்களில் இருநூறு மீற்றர் தூரம்வரை உட்சென்று தாக்கியுள்ளது.
மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கிய இப்புயலினால் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பத்து இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக 1.5 மில்லியன் மக்கள் இச்சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ளனரெனில் மியன்மாரின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது ஏழில் ஒரு வீதமாகும்.
அதேவேளை வரலாறு காணாத இச்சூறாவளி மற்றும் புயலினால் ஏற்பட்ட மரணங்களால் சனத்தொகையில் சடுதியானதொரு இறக்கத்தையும் அவதானிக்க முடிகின்றது.

இக்கடும் சூறாவளி மற்றும் புயல் தாக்கியதைத் தொடர்ந்து நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் மியன்மாரின் பல இலட்சக்கணக்கான மக்கள் பசியாலும், தொற்று நோய்களாலும் அவதிப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.நாட்டின் பெரும்பாலான குடிநீர் ஊற்றுக்கள் பாவனைக்கு உதவாத வகையில் அசுத்தமாக்கப்பட்டுள்ளன.

குடிப்பதற்கு நீரோ உண்பதற்கு உணவோ இன்றித்திண்டாடும் அந்நாட்டு மக்களுக்கு அனைத்து வகையான அவசர உதவிகளையும் வழங்குவதற்கு சர்வதேச உதவி அமைப்புகளும், உலக நாடுகளும் மியன்மாரை நோக்கிய அனுதாப உதவிப் பயணத்தை மேற்கொண்டிருந்தன.

இருந்தாலும் உதவிப் பொருட்களுடன் விமானங்கள் நடுவானில் திருப்பப்பட்டு இராணுவ அரசின் அநீதியான கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து திரும்பிச் சென்றுள்ளன.
இந்நிலையில் சர்வதேச உதவிப் பணியாளர்களையும் நிவாரண உதவிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை மியன்மார் அரசை வலியுறுத்தியிருந்தது.
ஆனால் சர்வதேச உதவிப் பணியாளர்களையும் நிவாரணப் பொருட்களையும் பர்மா இராணுவ அரசு ஏற்க மறுத்தது.

இதேவேளை வெளிநாட்டு உதவிகளை தாம் ஏற்கத் தயாரென்றும் அதன் விநியோகத்தை தமது கைகளிலேயே வைத்துக் கொள்வதென்றும் பர்மா அறிவித்தது.

ஆனால் வெளிநாட்டு உதவிகளை பெற்று அதனை தேவையான இடத்துக்குச் சென்று விநியோகிக்கக் கூடிய வலுவை பர்மா இராணுவம் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறான காரணங்களினால் பெருமளவிலான நிவாரணப் பொருட்கள் திரும்பிச் சென்றுள்ளமை கவலைதரும் விடயமாகும்.
மேலும் உதவிப் பணியாளர்களை பர்மாவுக்குள் அனுமதிக்க உடனடியாக விசாவினை பர்மா வழங்க வேண்டுமென்று ஐ.நா.வால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் உதவிப் பணியாளர்களை அனுமதிப்பதற்கு மியன்மார் இராணுவ அரசு எளிதில் சம்மதிக்காதென உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

மனிதநேயப் பணியாளர்களை தனது நாட்டுக்குள் வரவேண்டாமென இதுவரை எவரும் தடுத்ததில்லை. வரலாற்றில் முதற்றடவையாக மியன்மார் அரசால் பணியாளர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டும் நிவாரண உதவிகளும் மறுக்கப்பட்டுள்ளன.

உண்பதற்கு உணவின்றியும் குடிப்பதற்கு நீர் இன்றியும் தவிக்கும் தன்நாட்டு மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் மியன்மார் அரசு ஏனைய நாடுகளின் உதவியை வரவேற்றிருக்க வேண்டும்.

இருபது இலட்சம் மக்களுக்கு உடனடியாக அவசர உதவி தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை ஒரு இலட்சம் மக்களே உதவியைப் பெற்றுள்ளனர்.

தற்காலிக புகலிடங்களில் மக்கள் வசித்துவருகின்ற அதேநேரம் அங்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் தோன்றியுள்ளது.
உலக சந்தையைப் பொறுத்தவரையில் அரிசியின் சந்தைப்படுத்தலில் மியன்மாரின் பங்கு இன்றியமையாத தொன்றாக இருந்து வந்தது.

ஏனெனில் விற்பனைக்குத் தேவையான பெரும்பாலான அரிசியை மியன்மார் தொடர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டே இருந்தது.
ஆனால் இச்சூறாவளி மூலம் மியன்மாரிலுள்ள பெரும்பாலான வயல் நிலங்கள் நெற்பயிர்ச்செய்கையை குறிப்பிட்டதொரு காலத்திற்கு மேற்கொள்ள முடியாதளவிற்கு சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் என்றுமில்லாதவாறு தனக்குத் தேவையான அரிசியையே வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை மியன்மாருக்கு ஏற்பட்டுள்ளமை வருந்தத்தக்கதொரு விடயமாகும்.

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதில் ஈடுபட்ட ஆசிய நாடுகளே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை ஆசியப் பிராந்தியத்தில் ஏற்கனவே இருந்துவரும் உணவுத் தட்டுப்பாட்டுடன் மியன்மாரின் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டமையும் இணைந்து உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை, ஆசியப் பிராந்தியத்தில் 1.5 பில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது.
மியன்மாரைத் தாக்கிய சூறாவளியினால் மியன்மார் மட்டுமன்றி அதனைச் சார்ந்திருந்த நாடுகளும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.

மியன்மாரைச் சூறாவளி தாக்கிய ஐந்து தினங்களிலேயே உலக சந்தையில் அரிசியின் விலையில் சடுதியான ஏற்றமும் தட்டுப்பாடும் நிலவியுள்ளது.

கடந்த 1991 இல் பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் 143,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதை தொடர்ந்து மியன்மாரில் தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அடுத்தபடியாக உள்ளது.

ஒருபுறம் இராணுவ அரசின் கொடுங்கோல் ஆட்சியும் அதனை எதிர்த்து பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டமும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டிருக்கும் இராணுவ அரசின் தாக்குதலில் பலியானவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் இன்னமும் அத்துயரிலிருந்து மீளாதவர்களாய் காணப்படுகின்ற நிலையில் இச்சூறாவளி அந்நாட்டில் தனது கைவரிசையையும் வெகுவாகக் காட்டியுள்ளது.

தொடர்ந்தும் உலக நாடுகள் இவ்வாறான இயற்கையின் சீற்றங்களை முற்கூட்டியே அறிந்து கொள்ளக் கூடிய கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

வரலாறு காணாதளவிற்கு தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காணப்படும் நிலையில் இயற்கை அனர்த்தங்கள் நிகழப்போகிறதென்பதை முற்கூட்டியே உணரக்கூடிய கருவிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

அவற்றின் மூலம் உடனடியாக அவ் இயற்கை அனர்த்தம் தாக்கப்போகும் பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதி மக்கள் இயலுமானவரை வேறு பிரதேசங்களுக்குச் சென்றோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றோ தமதுயிரை பாதுகாக்க முடியும்.

ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படுவது தொடர்பாக அறியக்கூடிய சாதனங்கள் தற்பொழுதும் இருக்கின்றனதான். ஆனால், அதன்மூலம் சமிக்ஞைகள் பெறப்பட்டாலும் மக்கள் எவ்வளவு தூரம் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இயற்கை அழிவு ஒன்று ஏற்படப்போகிறதெனில் அது தொடர்பான எச்சரிக்கை அனைவருக்கும் உடனடியாக செல்லக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இவ்வாறான இயற்கையின் சீற்றங்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உறுதியானதொரு நிலைப்பாட்டினை அனைத்துலக நாடுகளும் கொண்டிருப்பதன் மூலம் உயிரழிவுகளிலிருந்து பாதுகாக்கலாம்.

நன்றி
ஞாயிறு தினக்குரல்

அந்தார்ட்டிக்காவில் உருகும் பனிமலைகள்

உலகெங்கிலும் இடம்பெறும் பரவலான வன்முறைகளால் உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, இயற்கையின் சீற்றங்களுக்கும் உலக மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்தும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, சூறாவளி, புயல், எரிமலைச் சீற்றம், மண்சரிவென வழமையான இயற்கைச் சீற்றங்கள் ஒருபுறமிருக்க பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட கடல்கோள் அனர்த்தத்தின் வடுக்கள் இன்னமும் அழியாத நிலையில் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி சகல ஊடகங்கள் மற்றும் அவதானிகளின் கவனத்தை தன்னகத்தே திருப்பியுள்ளது. அந்தாட்டிக்காவில் உடையும் பனிமலைகள்.
காலநிலை மாற்றத்தின் விளைவான வெப்பநிலை உயர்வால் அந்தாட்டிக்காவின் பிரதேசங்களிலுள்ள பாரிய பனிமலைகள் உடைந்து உருகி கடல் நீருடன் சேர்வதால் கடல் மட்டம் அதிகரித்து பல தீவுகள் முற்றாக கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து முழுவதும் பனிப்படலத்தால் போர்த்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதன் 30 சதவீத பனி உருகி கடலுக்குள் சேர்ந்துள்ளது. மேலும், இந்தக் கோடை காலம் நிறைவுறுவதற்கு முன்னர் இன்னமும் ஏராளமான பனிக்கட்டிகள் உருகி கடலுக்குள் சென்று விடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 16,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலை ஒன்று உடைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறை என்பவற்றால் தெற்காசியாவில் சுமார் 125 மில்லியன் மக்கள் இந்நூற்றாண்டிற்குள் இடம்பெயர நேரிடுமென சூழலியல் அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், காலநிலை மாற்றம் பருவ மழைக் காலங்களிலும் பெரிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்தும் அதேநேரம் இது விவசாய உற்பத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இறக்கத்தை ஏற்படுத்தி உலக உணவுத் தேவையை பெரிதும் பாதிக்கும் அபாயமும் உள்ளதென உலக சூழலியல் அமைப்பான "கிறீன் பீஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு தாக்கத்தை காலநிலை மாற்றம் விவசாய உற்பத்திகளில் ஏற்படுத்துமானால் தமது வாழ்க்கையின் மூலாதாரத் தொழிலாக விவசாயத்தைக் கொண்டு சீவிக்கும் மக்களே நேரடியான பாதிப்புக்கு உள்ளாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், விவசாய உற்பத்திகள் முடக்கப்படுமிடத்து வளர்ந்துவரும் நாடுகளும் ஏழை நாடுகளுமே இதனால் அதிகளவு பாதிப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அந்தாட்டிக்கா மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளைச் சேர்த்து 77 சதவீதம் உப்புக்கரிக்காத தண்ணீர் உள்ளது.

இதனால், ஏனைய 23 சதவீதமான நல்லதண்ணீர் ஏனைய மக்களின் தேவையை எந்தளவிற்கு பூர்த்தி செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகின் மொத்த பனிமலைகளில் தொண்ணூறு வீதமானவற்றை இந்த அந்தாட்டிக்கா கொண்டுள்ளது.

இத்தொகையில் எந்தவொரு பகுதியுமாவது கரைந்து கடலில் சேர ஆரம்பித்தால் கடல் மட்டம் நிச்சயமாக அதிகரித்தே தீரும்.அப்பகுதியினுள் நானூறுக்கும் அதிகமான மலைகளில் 75 சதவீதமானவை உடைந்து உருகத் தொடங்கியுள்ளன.

தென் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் 1600 கிலோமீற்றர் தூரத்தில் அந்தாட்டிக்காவின் தென்மேற்கில் வில்கின்ஸ் எனும் நிரந்தரமாக மிதந்து கொண்டிருக்கும் பனிப்பாறை உள்ளது.
வில்கின்ஸ் பனிப்பாறை எனப்படும் இப்பனிப்பாறை 41 கிலோமீற்றர் நீளத்தையும் 2.5 கிலோமீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளதுடன் பதினாறாயிரம் சதுர மீற்றர் பரப்பளவுமுடையது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் உடைய ஆரம்பித்துள்ள இப்பனிப்பாறையில் இதுவரை 570 சதுர கிலோமீற்றர் சிதைவடைந்து நீராக கடலுடன் சேர்ந்துள்ளது.
அந்தாட்டிக்கா வளைகுடா கடந்த 50 வருடங்களாக வெப்பநிலை அதிகரிப்பு அனுபவத்தைப் பெற்றுள்ளது. பத்தாண்டுகளுக்கு 0.5 சதம் பாகை வெப்பநிலை அதிகரிப்பு பூமியில் ஏற்பட்டிருப்பதை அந்தாட்டிக்காவில் உணர முடிந்துள்ளது.

இப்பனிப்பாறை உடைய ஆரம்பிப்பதை அடையாளம் கண்ட அமெரிக்க விஞ்ஞானியான ரெட் ஸ்காம் பொஸ், வில்கின்ஸ் பனிப்பாறைகள் சில நூற்றாண்டு காலத்திற்கு ஓரிடத்தில் இருக்குமென்றே நம்பினோம். ஆனால், காலநிலை மாற்றம் பிறப்பித்த அனல் காற்றும் சமுத்திர அலைகளும் அதனை உடைப்பதற்கு ஏதுவான காரணங்கள் ஆகிவிட்டன என்று கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளின் நிலை பற்றி அறிய கடந்த டிசம்பரில் நாசா அனுப்பிய ஐஸ்சாட் எனும் செயற்கைக் கோளின் தரவுகளின்படி அந்தாட்டிக்கா பதினேழு இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பும் ஐஸ்லாந்தில் ஒரு கோடியே 37 இலட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பும் பனிப்படுக்கைகள் உள்ளது.

இப்படுக்கைகளின் சராசரிக் கனம் எட்டாயிரம் அடி ஆகும். இவையின் மொத்தப் பரப்பு உலகப் பரப்பளவின் 10 சதவீதமாகும்.1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதிகளில் 7 பாகை பரனைட் வெப்பநிலை அதிகரிப்பால் பனி உருகத் தொடங்கியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த பனிக்கட்டியும் நகரத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு நகர்வதற்கு முக்கிய காரணமாக உருகிய பனியிலிருந்து வழிந்தோடும் நீர் கடலில் சென்று சேருதலே ஆகும்.பனிப்படுக்கைகளின் அடிப்பகுதியாலேயே இந்நீர் கடலில் சென்று கலப்பதாலேயே மொத்தப் பனிக்கட்டிகளும் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்துப் பனிக்கட்டிகள் உருகி கடலுடன் சேர்ந்தால் கடல் மட்டம் 23 அடி உயரத்துக்கு உயர்ந்து உலகளவில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்.

அத்துடன், தீவுகள் கடலில் மூழ்கும் அதேசமயம், பருவ நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அந்தாட்டிக்காவின் மொத்த பனிப்படுக்கைகளும் உருகிக் கடலுக்குள் சென்றால் கடல்மட்டம் 225 அடி உயருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறெனில் 23 அடி கடல்மட்டம் உயரும் பட்சத்திலேயே விளைவுகள் மிக மோசமானதாக இருக்குமென எச்சரித்துள்ள நிலையில் 225 அடி உயரத்திற்கு கடல்மட்டம் அதிகரிப்பதன் விளைவுகள் எவ்வாறிருக்கும்?இவ்வாறான காலநிலை மாற்றங்கள் உலக வெப்பமயமாதலே பிரதான காரணமெனக் கூறி அவ்விடயம் தொடர்பில் சர்வதேச அளவில் மாநாடுகளும் விழிப்புணர்வும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்மைய ஆண்டுகளில் எட்டு அல்லது ஒன்பது வீத பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள இந்தியா சூழலை அதிகளவு மாசுபடுத்தும் நாடாக உள்ளது.
அதன் எரிபொருள் நுகர்வின் அதிகரிப்பின் விளைவாக நாலு சதவீத பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்திற்கு காரணமாகவுள்ளது.

உலக வெப்பமயமாதலுக்கு நாமே பிரதான காரணமாக இருக்கின்றோம். அதாவது, வளிமாசடைதல், புவி வெப்பமடைதல் போன்றவற்றிற்கு எமது அன்றாடத் தேவைகளின் போது வெளியிடும் கழிவுகள், சத்தங்கள் உள்ளிட்ட காரணிகள் பிரதானமாகின்றன.
இதன் தாக்கமே பனிமலைகள் உருகி கடலுக்குள் சேரும் அபாயத்தை தோற்றுவித்து பல தீவுகளின் நிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் மட்டும் கடல் மட்டத்திலிருந்து பத்து மீற்றருக்கும் குறைவான தூரத்தில் 130 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். எனில், உலகளவில் அத்தொகை எவ்வாறான தொகை மாற்றத்தைக் கொண்டிருக்கும்?

இவ்வாறான இயற்கையின் சீற்றங்களை தடுப்பதற்காக சர்வதேச அளவில் காலநிலை மாற்றங்கள், உலக வெப்பமயமாதல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தும் இன்றைய அவசர உலகில் காலநிலை மாற்றங்களை தடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை நாம் எந்தளவிற்கு முன்னெடுத்துள்ளோம் என்பது திருப்திப்படக்கூடியதாகவில்லை.

யோ. நிமல்ராஜ்
நன்றி தினக்குரல் புதன் வசந்தம்

மலேசியாவின் அரசியல் மாற்றம்




யோ.நிமல்ராஜ்-
நன்றி : ஞாயிறு தினக்குரல் 16.03.2008

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்






-யோ.நிமல்ராஜ்-
நன்றி : ஞாயிறு தினக்குரல் 09.03.2008

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு வழிகோலுமா?

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு வழிகோலுமா?

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக பல நூற்றுக்கணக்கான உயிர்களை பலியாகக் கொடுத்து நடைபெற்று முடிந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளமை அங்கு மீண்டும் ஜனநாயக ஆட்சி பரிணமிக்குமா என்ற கேள்வியைப் பிறப்பித்துள்ளது.


கடந்த ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவிருந்த இப்பொதுத் தேர்தல் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மறைவைத் தொடர்ந்து அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பெப்ரவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது.

பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் எட்டுவருட அஞ்ஞாதவாச நிறைவில் நாடு திரும்பிய பெனாசிர் பூட்டோவின் வரவேற்பு ஊர்வலத்தில் நடந்த குண்டு வெடிப்பின் போதே 165 க்கும் அதிகமானோர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்நிலையிலும் பாகிஸ்தானில் மக்களாட்சி மலர வேண்டுமென்பதற்காக தனது இறுதி மூச்சுவரை தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார் பெனாசிர் பூட்டோ.

மறுபுறம் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் நாடு திருப்பமும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறாக பாகிஸ்தான் நீதிமன்றங்களால் விடுக்கப்பட்ட தடைகளும் தடை நீக்கங்களும் .

இடையில் பாகிஸ்தானில் அவசரகால நிலையைப் பிறப்பித்து தனக்கெதிராக செயற்பட்டவர்களையோ அல்லது கருத்துக் கூறியவர்களையோ வீட்டுக்காவலிலோ சிறைகளிலோ இராணுவக் கரம் கொண்டு அடைத்தார் ஜனாதிபதி முஷாரப்.

இதேவேளை , உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிநீக்கமும் நடைபெறத் தவறவில்லை.

பதவியிலிருந்த நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுத் தனக்கு ஆதரவானவர்கள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதி முஷாரப்பின் இச்செயற்பாடுகளுக்கு சில உலகநாடுகளும் தமது ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டிருந்தமை ஜனாதிபதி முஷாரப்பிற்கு மேலும் மேலும் தனது செயற்பாடுகளை தீவிரப்படுத்த ஏதுவான காரணமாயிற்று.

இந்நிலையிலும், அவசரகாலநிலையை இரத்துச் செய்யக்கோரும் அழுத்தம் பொருந்திய கடிதங்களை சில நாடுகள் அனுப்பினாலும் அவை கானல் கடிதங்களாகவே அமைந்தன.

பாகிஸ்தான் இராணுவ அரசின் இச்செயற்பாட்டின் காரணமாக பொதுநலவாய அமைப்புகளிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டமை தான் இராணுவ ஆட்சிக்குக் கிடைத்த விருதாகும்.

பெனாசிரின் மறைவினைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக அவரது மகன் பிலாவல் பூட்டோவும் இணைத் தலைவராக அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியும் நியமிக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் தொடர்ந்தன.

பெனாசிர் பூட்டோவின் படுகொலை அதையடுத்து நடந்த வன்முறைகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் போன்றவற்றால் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மந்தமாக இருந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பெரும்பாலும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத் தள சேவைகள் போன்றவற்றாலேயே நிகழ்த்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

இதேநேரம், தேர்தல் நீதியாகவும், சுயாதீனமாகவும் நடத்தப்படுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் இடையிடையே உறுதி அளித்துக் கொண்டிருந்தாலும் தேர்தல் வாக்களிப்பின் போது மோசடி , கள்ளவாக்குகள் இடம்பெறுமென மக்கள் எதிர்பார்த்தனர்.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் கடந்த 18 ஆம் திகதி வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் நடந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மக்கள் கட்சியும் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களில் வெற்றியீட்டியுள்ள அதேவேளை ஜனாதிபதி முஷாரபின் ஆளுங்கட்சி மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.

இவ்விரு கட்சிகளினதும் பெருவெற்றியானது ஒரு சில வல்லரசு நாடுகளின் மிக நெருங்கிய நண்பனான முஷாரபின் எட்டு வருட இராணுவ ஆட்சிக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பெனாசிர் பூட்டோவின் கணவர் சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஷ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி ஆகியன இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்காக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு இவ்விரு கட்சிகளும் தொடர்ந்து முஷாரப் அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இவ்விரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டால் முஷாரப்புக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படலாமென பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலும் இத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத முஷாரப்பால் மீளவும் ஒரு தேர்தல் நடத்தலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், வாக்குப்பதிவு குறைவாக இருக்கின்ற காரணத்தைக் கொண்டு இத்தேர்தலை செல்லாது என்று அறிவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் மறுதேர்தலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் காஜி முஹம்மது பாருக் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் நாட்டுக்கு வெளியே வாழும் பெனாசிர் மற்றும் அவரது கணவர் சர்தாரி ஆகியோர் பாகிஸ்தான் திரும்பினால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென்று முஷாரப்பால் கூறப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இத்தகைய பொதுமன்னிப்பு பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. ஆனால் இதேபோன்று குற்றச்சாட்டுகளில் சிக்கிய நவாஷ் ஷெரீப்புக்கு இத்தகைய பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பாகிஸ்தான் மக்கள் கட்சி புறக்கணிக்கவில்லை.

இதன் மூலம் முஷாரப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையை பாகிஸ்தான் மக்கள் கட்சி மறைமுகமாக அங்கீகரித்தது.

இந்நிலையில் பொதுமன்னிப்பு வழங்குவதாக முஷாரப் பிறப்பித்த ஆணை கடந்த மாதத்துடன் காலாவதியாவிட்டது.

இந்நிலையிலும் முஷாரப் பிறப்பித்த ஆணைகள் காலாவதியாகவில்லை என்றும் பாகிஸ்தான் காபந்து அரசு தெரிவித்துள்ளது.

இருந்தாலும் முஷாரப்பை பதவிவிலகக்கோரி நவாஷ் ஷரீப் திட்டவட்டமாக வலியுறுத்தினாலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதனை அவ்வளவாக வற்புறுத்தாமல் உள்ள நிலைமை அவர்களும் முஷாரப்பின் பிடிக்குள் சோடை போய்விட்டார்களாவென எண்ணத்தோன்றுகின்றது.

ஆனால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சியின் கீழ்தான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்பதனை சந்தேகிக்க வைக்கின்றது.

இதேவேளை முஷாரப்பின் மிகநெருங்கிய நண்பரும் தற்போதைய பாகிஸ்தான் இராணுவத் தளபதியுமான கியானி, பாகிஸ்தானின் அரசிலிருந்து அந்நாட்டு இராணுவம் பிரிந்து தனியாகச் செயல்படவேண்டுமென தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்திலிருந்து நிர்வாகக் கடமைகளிற்குச் சென்ற இராணுவ அதிகாரிகளையும் உடனடியாக அவற்றிலிருந்து விலகி மீண்டும் இராணுவத்திற்கு வரவேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் தனது நெருங்கிய நண்பனும் கடந்த ஆண்டு அவசரகால நிலையின்போது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட கியானியும் தனக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது முஷாரப்பை மேலும் சோதனைக்குரிய காலமாக்கிவிட்டது.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில முஷாரப் பதவி விலகி அங்கு ஜனநாயக ஆட்சி மலர வழிவிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையின் அமெரிக்க உளவுத்துறையின் கருத்துப்படி முஷாரப் பதவி விலகுவதே நல்லதென அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் ஜனாதிபதி பதவியிலிருந்து முஷாரப் பதவி விலகினால் மட்டுமே புதிய அமைச்சரவையில் சேருவேன் என்றும் பாகிஸ்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்த புதிய ஜனாதிபதி தேவை என்றும் நீதிபதிகளை பணியிருந்து நீக்கியும் அவசர காலநிலையின் கீழ் முக்கியமான அரசியல் பிரமுகர்களை வீட்டுக்காவலில் வைத்தவருமான முஷாரப் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசில் இடம்பெறுவது முறையல்லவெனத் தெரிவித்துள்ளார், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷரீப்.

முஷாரப்பின் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வரப்போகின்றதென்பது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் வரவேற்பு ஊர்வலத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்தபோதே நிச்சயமாகிவிட்டதெனலாம்.

ஆனாலும் நடைபெற்று முடிந்த தேர்தலில் முஷாரப் கண்ட பெருந்தோல்வி சர்வதேச நாடுகளின் அழுத்தம் போன்ற காரணங்களால் செய்வதறியாது தடுமாறுகின்றார் முஷாரப்.

இவ்வேளையிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி முஷாரப்பிற்கு எதிராக பலத்த கண்டனங்களையோ எதிர்ப்பார்ப்புகளையோ வெளிக்காட்டுவதாக இல்லை.

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அந்நாட்டின் அரசியல் வாதிகளால் இருபதாயிரம் கோடி ரூபா தேர்தல் நடவடிக்கைகளின் போது செலவிடப்பட்டுள்ளதுடன் இவை அனைத்திற்கும் எந்தவிதமான கணக்குகளும் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது.

தனது அறுபது ஆண்டுகால சுதந்திரப் பயணத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே ஜனநாயகப் பாதையில் நடந்த பாகிஸ்தானிற்கு தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலும், அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றுள்ள வெற்றியும், பாகிஸ்தான் ஜனநாயகத்திற்காக தம்முயிரை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் பூட்டோ குடும்பத்தின் ஜனநாயகக் கனவுகளும் பலித்து பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் ஜனநாயகப் பாதையில் அந்நாடு காலடி எடுத்து வைக்குமா?

-யோ.நிமல்ராஜ்-
நன்றி : ஞாயிறு தினக்குரல் 02.03.2008

சுஜாதாவின் மறைவு


எழுத்தாளர் சுஜாதா காலமானார் அன்னாரின் இழப்பு பதிப்பாளர் உலகில் என்றுமே ஈடு செய்ய முடியாது.

தாக்கித் தகர்ப்பு

வெற்றிகரமாகத் தாக்கித் தகர்ப்பு

கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோளை அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தாக்கியுள்ள அதேவேளை அதிலிருக்கும் ஹைரொட்சின் தாங்கியையும் பூமிக்கு வந்து தாக்குவதைத் தடுக்கும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.



கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்த இச்செயற்கைக்கோளில் நச்சுவாயு இருப்பதால் பெரும் சேதங்கள் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏவுகணை கொண்டு தாக்கியழிக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ஹவாயின் மேற்குப் பகுதியிலுள்ள பசுபிக் கடற்பிராந்தியத்திலிருந்து யு.எஸ்.எஸ். எரிக் என்ற அமெரிக்க போர்க் கப்பலின் மூலம் எஸ்.எம்.-3 என்ற ஏவுகணை நேற்று இ.எஸ்.ரி. நேரப்படி 10.25க்கு ஏவப்பட்டது.

ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இவ் ஏவுகணையானது 133 கடல்மைல் (277 கி.மீ.) தொலைவிலுள்ள செயற்கைக்கோளை பத்து செக்கனில் சென்று தாக்கியழித்துள்ளது.

இச்செயற்கைக் கோளானது பூமியின் மேற்பரப்புக்குள் நுழைவதற்கு முன்னர் கோள்களின் இறுதிச் சுற்றுவட்டப் பாதையில் வைத்து தாக்கியழிக்கப்பட்டிருப்பதாக தரை வான் கடல் மற்றும் விண்வெளியைத் தளமாகக் கொண்டியங்கும் தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், அச்செயற்கைக் கோளின் ஒரு பகுதியான ஹைரொட்சின் தாங்கியானது முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதா என்பது இன்னும் 24 மணித்தியாலங்களில்தான் உறுதிப்படுத்தப்படுமென பென்டகனால் இவ் விடயம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் சிதைவுற்ற பாகங்கள் பூமிக்குள் நுழைய ஆரம்பித்துள்ளதுடன் முற்றாக எரிந்துள்ள பகுதிகள் இன்னும் ஓரிரு நாட்களில் பூமியை வந்தடைந்தாலும் ஏனைய உதிரிகளும் முற்றுமுழுதாக வந்துசேர குறைந்தது நாற்பது நாட்கள் வரையாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 டிசம்பர் 14 ஆம் திகதி தேசிய உளவு மையத்தால் ஏவப்பட்ட இச்செயற்கைக்கோள் 2,300 கிலோ நிறையுடையது.

இச்செயற்கைக்கோள் ஹைரொட்சின் வாயுவைத் தாங்கி வருவதால் இது பூமியில் விழுந்து பாரிய உயிர்ச்சேதங்களை தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா இவ்விடயம் தொடர்பில் கவனயீனமாகச் செயற்படுவதாகவும் அமெரிக்கா வெற்றிகரமாகத் தாக்கத் தவறும் பட்சத்தில் தமது படைகள் தாக்கியழிக்கும் எனத் தெரிவித்திருந்தது.

இதேவேளை, அமெரிக்காவின் ஏவுகணை இதனை தாக்கிய பின்னர் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்;

செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவுகணை கொண்டு அமெரிக்கா தாக்கியழித்தாலும் இது ஒரு புதிய விண்வெளி ஆயுதத்தின் பரிசோதனையாகவே இது அமைந்துள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இவ் ஏவுகணையானது மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே முற்றுமுழுதாக ஏவப்பட்டுள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

புவியை நோக்கிவந்த பேரழிவு





நன்றி: தினக்குரல் புதன் வசந்தம்

தனக்கென ஒரு தடத்தைப் பதித்துச் சென்ற ஆமெங்




நன்றி : ஞாயிறு தினக்குரல்

அறிமுகம்

அனைத்து வலையுலக வாசகர்களுக்கும் எனது வணக்கம்.
முதல் முறையாக வலையுலகில் கால்பதிக்கும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்விர்கள் என நினைக்கின்றேன்.

அத்துடன் எனக்கு வழிகாட்டி என்னை ஊக்கப்படுத்துவதும் உங்கள் கடமையாகும்,

இவண்
ஏரம்பன்