உண்ணாமல், உறங்காமல், நோயாளர்களாக, மனநோயாளர்களாக வாடிய தேகங்களுடன் காத்திருந்த உறவுகளுக்கு மலேசிய அரசாங்கம் விடுத்துள்ள செய்தி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த அறிவிப்பும் Mஏ 370 யின் முடிவும் ஏற்கனவே அனுமானிக்கப்பட்ட ஒரு துர் முடிவுதான். ஆனால், அது குறித்த இறுதி அறிவிப்பு விடுக்கப்படும் வரையில் கூட தமது உறவுகள் எங்கோ ஒரு மூலையில் உயிர்வாழ மாட்டார்களா என்ற ஏக்கம் உறவினர்கள் உள்ளிட்ட உலகத்தவர்களின் மனதில் பதிந்திருந்தது.
“ஆழ்ந்த கவலை மற்றும் மனவருத்தத்துடன் இந்தச் செய்தியை நான் உங்களிடம் கூறுகின்றேன். செய்மதி மூலமான புதிய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்வின் பெறுபேறாக Mஏ 370 விமானம் இந்து சமுத்திரத்தின் தென் பிராந்திய கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் அவ்விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டார்களென்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்கின்றேன்’ மார்ச் எட்டாம் திகதி நள்ளிரவு 12.41 மணிக்கு புறப்பட்ட Mஏ 370 விமானம் காணாமல் போய் 16 நாட்களும் சில மணித்தியாலங்களும் கடந்திருந்த நிலையில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கினால் கடந்த திங்கட்கிழமை பின்னிரவு ஊடகவியலாளர் மாநாட்டில் கூறப்பட்ட செய்தி அது.
இச்செய்தியாளர் மாநாடு இடம்பெறுவதற்கு முன்னர் இந்த அறிவிப்பு பயணிகளின் உறவினர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நற்செய்தி கிடைக்குமா என்று காத்திருந்தவர்களின் இதயங்களை நொருக்கிய அந்தச் செய்தி Mஏ 370 காணாமல்போன தகவலைக் காட்டிலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
கோலாலம்பூரிலிருந்து கடந்த எட்டாம் திகதி நள்ளிரவு 12.41 மணியளவில் 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் விமானம் சீனாவை நோக்கிப் புறப்பட்ட நிலையில் 01.21 மணியிலிருந்து அதன் சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.
அதன் தொடர்ச்சியாக விமானம் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது தொடர்பான தரவுகள் பரிமாறப்பட்டது. வியட்நாம், மலேசியா இணைந்து ஆரம்ப தேடல் பணிகளை மேற்கொண்டிருந்தன.
இந்நிலையில் விமானம் திசை திருப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. மலாக்கா நீரிணை நோக்கி விமானத்தை திசை திருப்பியிருக்கலாமென்று கூறப்பட்டது.
இதனை அடுத்து பல நாடுகள் இணைந்து இந்து சமுத்திரம், மலாக்கா நீரிணை போன்ற பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியிருந்தும் எதுவிதமான ஆக்கபூர்வமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில் மார்ச் 20ஆம் திகதியன்று அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் பேர்த்திலிருந்து தென் மேற்காக 1350 மைல் தொலைவில் இரு சிதைவுகள் உள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அபொட் தனது பாராளுமன்ற அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்விடயம் தொடர்பான அவரது அறிவிப்பினை தொடர்ந்து விமானத்தின் தேடுதல் முயற்சிகள் புதிய திருப்பத்தினை கண்டிருந்தன. அதன் விளைவாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அதி தொழில்நுட்பத் திறன் நிறைந்த விமானங்கள், கப்பல்களை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தன.
இந்நிலையில் தமது செய்மதிகளும் விமானத்தின் சிதைவுகள் குறித்த பிரதிமைகள் பதியப்பட்டுள்ளதாக சீனாவும் பிரான்ஸும் கூறியிருந்தன.
இந்நிலையில் அச்சிதைவுகள் விமானத்தின் பாகங்களாக இல்லாமல் இருக்கலாமென அவுஸ்திரேலியா கூறியிருந்தது. ஆனாலும், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இவ்வாறாக பல நாடுகளின் முயற்சியில் இந்த விமானத்தை தேடும் பணிகள் பல்வேறு அதி நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், மார்ச் 23ஆம் திகதி பின்னிரவு மலேசிய பிரதமரின் திடீர் அறிவிப்பினால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். விமானம் தென் இந்து சமுத்திரக் கடலில் மூழ்கிவிட்டது என்பதே அந்த அறிவிப்பாகும்.
இதுவே, இவ்விமானத்தின் மாயத்தின் பின்னரான முன் கதைச் சுருக்கம். அதன் விரிவான பார்வை கடந்த இருவாரப் பத்திரிகைகளில் வெளிவந்த பத்திகளில் அலசப்பட்டிருந்தது. அதன் முழு வடிவத்தினை தினக்குரலின் குறித்த திகதிகளினான இபேப்பரிலும், தீதீதீ.ஞுணூச்ட்ணீத.ஞடூணிஞ்ண்ணீணிt.ஞிணிட் என்ற முகவரியிலும் பார்வையிட முடியும்.
விமானம் இந்துசமுத்திரத்தில் மூழ்கியதில் அனைவரும் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பினை விடுப்பதற்கான ஆதரமாக மலேசியப் பிரதமர் எடுத்துக்கொண்ட தரவுகள் லண்டனின் பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்றின் முடிவுகளேயாகும்.
Mஏ 370 ஐ கண்டறிவதற்காக 19ஆம் நூற்றாண்டின் கணிதவியல் மாதிரியை பயன்படுத்தி அதன் அடிப்படையிலேயே விமானம் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
விமானத்தின் சகல தொடர்புகளும் (ட்ரான்ஸ் பொன்டர், ராடர்) துண்டிக்கப்பட்ட நிலையில் அதன் நகர்வினை கறுப்பு பெட்டி, மூலமான சமிக்ஞைகளை (கடிணஞ்ண்) அடிப்படையாகக் கொண்டு கணிப்பதே அந்த கணிதவியல் மாதிரியான டொப்ளர் முறைமையாகும்.
ஒரு மணித்தியாலத்திற்கு ஒருமுறை வெளியாகும் இந்த சமிக்ஞையினை அடிப்படையாகக் கொண்டு அதன் நகர்வை கணிப்பது மிகவும் சிரமமான விடயமென பிரிட்டனின் இன்மார்ஸ்ட் செய்மதி நிறுவன உபதலைவர், கிறிஸ்மக்லோஹின் கூறியிருந்தார்.
“டொப்னர் விளைவானது சமிக்ஞை மையத்தின் பெறுகைப் புள்ளியின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு விமானத்தின் பயணப் பாதையை கண்டறிவதாகும்.
“மலேசிய விமானத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளின் பிரகாரம் அந்த விமானம் தென்திசையினை நோக்கி பயணித்துள்ளதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளோம்’ என்றும் மக்லோஹ்லின் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில் பிரிட்டனின் செய்மதி நிறுவனமான தனியாருக்கு சொந்தமான இன்மார்ஸ்ட் மற்றும் பிரிட்டனின் விமான விபத்து விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்தே மேற்கொண்டிருந்தன.
அந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் மலேசிய விமானம் குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளது. ஆனால், அந்த அறிவிப்பானது சற்று அவசரமான ஒரு அறிவிப்பாக அமைந்துவிட்டதாகவே கருத முடிகின்றது.
விமானத்தை தேடும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவ்விமானத்தில் அதிகளவில் பயணித்தவர்கள் சீனர்கள் (154 பேர்) அவர்களுக்கே அதிகளவான பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து இந்த துயரமான முடிவு சரியானதா உண்மையில் அவ்வாறு இடம்பெற்றிருக்குமா என்பதனை ஆராய்ந்து மலேசியா தனது அறிவிப்பை விடுத்திருக்கலாம்.
16 நாட்கள் கடலில் எந்த விதமான முடிவும் கிடைக்கப் பெறாத நிலையில் இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் மலேசியா இவ்வாறு ஏகமனதாக தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கலாம்.
இவ்வாறு மலேசியா செயற்படுவதற்கு இவ்விவகாரம் இராஜதந்திர உறவு தொடர்பானதா அல்லது அரசியல் சார் நிகழ்வோ அல்ல. பல்வேறு நாடுகளின் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தமான விடயம்.
இந்தத் துயரமான முடிவினை விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு தெரிவிப்பதற்கு மலேசியா குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இந்த விடயம் கூட மக்களின் சினத்தை சீண்டும் விடயமாகவே கருதப்படுகின்றது.
இந்த முடிவானது சம்பந்தப்பட்ட தரப்பினை ஓர் இடத்திற்கு அழைத்து அவர்களின் மனங்களை பக்குவப்படுத்தி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு அறிவிக்காததன் விளைவு உடனடியாக தென்பட்டிருந்தது. உறவினர்கள் சிலர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்னர். பலர் கதறி அழுதும் புலம்பியும் தமது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் சீனாவில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன்னால் கூடிய உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் மோதலிலும் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறாக மக்களின் உணர்வுகள் வெளிப்பட்டுள்ளது. எத்தனையோ பேர் இன்று மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஒவ்வொரு பயணிகளின் உறவினர்களுக்கு 5000 அமெ.டொலர் நஷ்டஈடு வழங்கப்படுமென மலேசியன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.
அவ்வாறெனில், மனித உயிர் ஒன்றுக்கு குறிக்கப்பட்ட விலை அதுவா. மனித உயிர் விலைமதிப்பற்ற ஒரு உயர்வான பொருள். பணத்தின் மூலம் அதனை ஈடுசெய்ய முடியாது.
ஆழமான வடுக்களை கொண்டிருக்கும் அந்த உறவினர்களின் மனங்களை இதயங்களிற்கு களிம்பு போடவேண்டியதே இன்றைய தேவை. அவர்கள் மனநிலை பாதிக்கப்படாத வகையில் கவனிக்கப்பட வேண்டும். அதுவே, உண்மையான குணப்படுத்தலாக அமையும்.
மலேசிய அரசின் அறிவிப்பின் பிரகாரம் விமானம் கிட்டத்தட்ட 4860 மைல் தொலைவில் பயணித்து விழுந்துள்ளது. குறிப்பாக விமானம் திசை திரும்பியதாக கூறப்படும் இடத்திலிருந்தே அந்த தூரம் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தூரத்தில்தான் விமானம் விழுந்துள்ளது எனில், பல்வேறு வினாக்கள் எழுகின்றன. அவ்வளவு தூரம் விமானத்தினால் பயணித்திருக்க முடியுமெனில் அந்த விமானத்தினை ஏன் மலேசியாவிலுள்ள இரு விமான நிலையங்களிலும் அதனை தரையிறக்கி இருக்க முடியாது.
மலேசியாவையும் கடந்து அதிகளவான தூரம் இந்த விமானம் பயணித்துள்ளதனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விழுந்திருந்தால் அதன் தொடர்பாடல் சாதனங்கள் சடுதியாக ஏன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் உள்ளது. வழமைக்கு மாறான முறையில் கட்டுப்பாட்டு அறைக்கு விமானியால் கூறப்பட்ட “குட் நைட்’ போன்ற விடயங்கள் இவ்விமானத்தின் துயரமான அந்தத்துக்கு விமானியை நோக்கியேவிரல்கள் நீள்கின்றன.
இரு பிள்ளைகளின் தந்தையான விமானி ஷகாரி அஃமட் ஹாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவரது மனைவி ஷகாரியை பிரிந்து தனியாக வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னால் ஷகாரிக்கு பெண் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்றும் விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின் புலத்தில் தனது நண்பர் ஷகாரி விமானம் ஒன்றை செலுத்துவதற்கான மனோ நிலையை கொண்டிருக்கவில்லையென அவரது நண்பரான விமானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விமானமானது 43000 முதல் 45000 அடி வரையான உயரத்திற்கு பறந்திருப்பதற்கு சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த உயரத்தில் பறக்கும் நிலையில் அழுத்தக் குறைவு காரணமாக ஒட்சிசன் தேவைப்பட்டிருக்குமென கூறப்பட்டுள்ளது. குறித்த உயரத்தில் 23 நிமிடம் விமானம் பயணித்துள்ளது. இதில் 12 நிமிடங்களுக்கே விமானத்திலுள்ள ஒட்சிசனை பயன்படுத்த முடியும்.
மீதி நேரத்திற்குள் விமானம் மீண்டும் 35000 அடிக்கு தாழிறங்காது விடில் விமானத்திலிருந்த அனைவரும் மயக்க நிலையை அடைந்திருப்பர்
இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இடம்பெற்றிருந்தால் இறுதித்துளி எரிபொருள் உள்ளவரை விமானம் குறித்த ஒரு நேர்கோட்டில் பயணித்து முடிவில் விழுந்துவிடுமென மத்திய குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழக விமானத்துறை பேராசிரியர் ரொன் பிஹப் கூறியுள்ளார்.
விமானத்தில் இயந்திரக்கோளாறு மற்றும் பயங்கர வாதத் தொடர்புகள் இவ்விமானத்தின் மறைவுக்கான காரணமல்லவென கூறப்பட்ட நிலையில் விமானத்தின் மறைவுக்கு விமானியின் தான்தோன்றித்தனமான செயற்பாடே காரணமென கூறப்பட்டுள்ளது.
விமானத்தை இவ்வாறான அபாயகரமான வழியில் கப்டன் செலுத்தியிருந்தால் அதனை துணை விமானி ஏன் தடுக்கவில்லை என்ற விடயம் எழுகின்றது.
மேலே கூறப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விமானம் உயரப் பறந்த நிலையில் (4300045000 அடியில்) அனைவரும் மூச்சுத் திணறி இறந்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
அத்துடன், பேராசிரியரின் கூற்றின் அடிப்படையில் விமானம் அதன் எரிபொருள் முடியும்வரை பயணிக்கும் என பேராசிரியர் பிஷப் கூறியுள்ளது விமானம் மலேசியாவின எல்லையில் தென்சீன கடல் வான் பரப்பில் நுழைந்த பின்னர் அது திரும்பியதாக கருதப்படும் புள்ளியிலிருந்து தற்சமயம் சிதைவுகள் உள்ளதாக கூறப்பட்ட அவுஸ்திரேலிய பேர்த் கடற்பிராந்தியம் வரையான தூரம் 4860 மைல்கள் (அண்ணளவாக) விமானத்தின் எரிபொருள் இருப்பு 29335 கலன்கள்.
இந்த எரிபொருள் இருப்புடன் விமானம் அவுஸ்திரேலியா வரை பயணித்திருக்க முடியும். அதாவது மலேசியாவிலிருந்து புறப்பட்டு அது திரும்பிய இடத்திலிருந்து பேர்த் சிதைவுகள் வரையான மொத்த தூரம்.
பேராசிரியரின் கூற்று, எரிபொருள் இருப்பு விமானியின் மனநிலை இம்மூன்றினதும் அடிப்படையில் விமானம் தற்போது அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் சிதைவு (பேர்த்) பகுதிவரை பயணித்து விழுந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இதேவேளை மலேசிய அரசு எந்தவிதமான உருவக அத்தாட்சியுமின்றி விமானம் இந்து சமுத்திரத்தில் விழுந்துள்ளதாக லண்டன் செய்மதி நிறுவன தரவுகளின் அடிப்படையில் கூறுகின்றது.
மேற்கூறப்பட்ட இரு பந்திகளின் தரவுகளின் அடிப்படையில் விமானம் கூறப்பட்ட விதத்தில் விழுந்துள்ளதென்ற முடிவு சாத்தியமானதே.
தனி ஒரு மனிதனின் விருப்பு வெறுப்புக்களால் ஏற்பட்ட விளைவு உலகளாவிய விமானப் பயணத்திற்குக் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது. எதிர்காலத்திலும் விமானிகள் தமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயற்பட்டால் விளைவு?
ஒரு பெண்ணினால் விமானி இந்த முடிவினை மேற்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தால் அவர் ஏனைய மனித உயிர்கள் மீது இரக்கமற்றவராகவே நடந்துள்ளார் என்பது கண்கூடு.
இறுதிநேரத்தில் விமானிக்கு அழைப்புவிடுத்த அந்தப் பெண்ணை கண்டுபிடித்து விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் உண்மையில் விமானியின் பயணத்தின் முன்னரான இறுதி தருணத்தில் ஏற்பட்ட பிரச்சினையினை அறிந்து கொள்ளலாம்.
ஆனாலும், இவ்விவகாரத்திற்காக 238 பேரை தன்னுடன் சேர்த்து அபத்தமான ஒரு முடிவுக்கு கொண்டு சென்றமை அரக்கத்தனம் நிறைந்த ஒரு செயல்.
இதேவேளை மலேசியா இந்த முடிவினை முன்னரே அளித்திருந்தால் 16 நாட்களை வீணடிக்காது பேர்த் பகுதியில் விரிவான தேடுதலை மேற்கொண்டு விரைவான ஒரு முடிவு கிடைக்கப்பெற்றிருக்கும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் விவாதம்.
ஆனால், இந்த விமானத்தை கண்டறிவதில் எமது தொழில்நுட்ப உலகம் தோற்றுவிட்டதென்பதே உண்மை.
கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்கு சிலவேளைகளில் வருடங்கள் கூட ஆகலாமெனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படும்போது அந்த விமானத்தின் இருப்பிடத்தினை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையிலான சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விமானத்துடன் பொருத்தப்பட்டாலே இதனை ஒத்த பிரச்சினைகளில் உடனடி தீர்வு கிடைக்கும்.
அத்துடன் கறுப்புப் பெட்டியினை எவ்வாறு விமாயினால் கட்டுப்படுத்த முடியாதோ, அது எவ்வாறு அழிவுகளுக்கு அப்பாற்பட்டதோ அதனை ஒத்த வசதிகளுடன் விமானத்தின் இருப்பிடத்தை தெரிவிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதனை உருவாக்க வேண்டியது நமது தொழில்நுட்ப உலகின் கைகளில் உள்ளது.
இதேவேளை, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அவுஸ்திரேலியா தேடுதல் முயற்சியில் மீண்டும் களமிறங்கியுள்ளது.
கறுப்புப் பெட்டி கிடைத்தாலும் விமானம் ஏன் திசை திருப்பப்பட்டது என்ற கேள்விக்கான விடை கிடைப்பது கடினம். இந்த நிலையில் தொடர்கிறது கறுப்புப் பெட்டிக்கான காத்திருப்பு...
நன்றி தினக்குரல்
















.jpg)






