விண்வெளியில் இருக்கும் கிரகங்கள் மற்றும் ஏனைய வான் பொருட்கள் குறித்த துல்லியமான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் நகர்வுகளை பூமியிலுள்ள ஆய்வு மையத்திலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் அதிதொழில்நுட்ப உலகிற்கு, குறித்த சில பிராந்திய எல்லைக்குள் மாயமாய் மறைந்துள்ள பயணிகள் விமானம் ஒன்றை அல்லது அதன் ஒரு பகுதியை கூட சம்பவம் நடைபெற்ற 6 நாட்களுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது பாரியதொரு அவமானமாக இருக்கும். அதேவேளை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் உயர்தொழில்நுட்பத்தில் நிரப்பப்பட வேண்டிய இடைவெளி பாரியதாக அமைந்துள்ளதையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு அல்லது துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ள நாடுகளில் ஒன்றான பாரதேசத்தில் ஆட்டோக்களில் ஜி.பி.எஸ்.கருவி (எககு இருக்கும் இடத்தினை கண்டறி கருவி) பொருத்தப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகளை இலகுவாக அடையாளம் காணமுடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பூமியில் இயங்கும் வாகனத்தில் ஜி.பி.எஸ்.கருவிகள் பொருத்தப்படுவது சாதாரண செயற்பாடாகிவிட்ட நிலையில் பல்லாயிரம் அடிகளின் மேலாக பயணித்து பல மைல்களை கடக்கும் விமானத்தினை இலகுவில் அடையாளங்காண எத்துணை கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனாவிற்கான பயணத்தில் இடைநடுவில் தொலைந்துள்ள நிலையில் அவ்விமானம் இதுவரை (இக்கட்டுரை எழுதும் நேரம்) கண்டுபிடிக்கப்படாமை தொழில்நுட்ப மனிதத்தின் தோல்வி, மிகப்பெரிய தோல்வி.
06மார்ச்2014 பெய்ஜிங்கிற்கான பயணத்துக்காக இவ்வாறான ஒரு அபாயத்தை தாம் எதிர்கொள்வோம் என்பதனை அறியாத நிலையில் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறுவதற்காக பல்வேறு நோக்கங்களுடன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமக்கான பயண ஆயத்தங்கள் சோதனைகளை நிறைவுசெய்த நிலையில் சனிக்கிழமை 07ஆம் திகதி அதிகாலை 12.41இற்கு Mஏ 370 தனது பயணத்தை ஆரம்பித்தது.
இந்தப் பயணம் எந்த விதமான ஆபத்துகளுமின்றி நிறைவடைய வேண்டுமென அதில் பயணித்தவர்களும் அவர்களை வழியனுப்பியவர்களும் வருகைக்காக காத்திருந்தவர்களும் இறைவனை பிரார்த்தித்திருப்பார்கள். அந்தப் பிரார்த்தனை வீண்போனது. கடவுளின் இருப்பு குறித்த விவாதம் இங்கு தேவையற்றது. அதற்கு இப்பத்தியில் நான் முற்படவில்லை.
ஆனால், விமானப் பயணத்தை பொறுத்தவரை கண்கண்ட தெய்வம் விமானிதான். ஆபத்து நிறைந்த ஒரு பயணத்துக்கு அதிக விலை கொடுப்பது விமானத்தில் தான்.
விடுமுறையை கழித்த தம்பதியினர், சட்டவிரோத குடியேற்றவாசிகள், குழந்தைகள், சீனாவின் பிரபல ஓவியர்கள் 19 பேர், இராஜதந்திரி ஒருவர் ,நண்பர்கள் என 14 நாட்டின் பிரஜைகள் Mஏ370யில் பயணித்துள்ளனர் ஆனால், அவர்கள் தற்பொழுது...?
கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட விமானம் வியட்னாம் வான் பரப்பினுள் நுழைய முற்பட்ட நிலையில் சனிக்கிழமை அதிகாலை 01.40 ’மணியளவில் (உள்ளூர் நேரம்) Mஏ370 ராடரிலிருந்து மறைந்த அதேநேரம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினையும் துண்டித்திருந்தது.
இதுவரையிலுமான நிகழ்வுகள் வழமையானதாகவே இருந்தன. ஆனால், குறித்த நேரத்தில் வியட்னாம் வான் எல்லைக்குள் இந்த விமானம் புகுந்திருக்காத நிலையில் சனிக்கிழமை அதிகாலை 02.45 மணியளவில் இந்த Mஏ370 விமானத்தினை காணவில்லையென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விழித்துக் கொண்ட ஊடகங்கள் சமூக வலைமைப்புகளின் பயனாளர்களின் போட்டித் தன்மைகளினால் இச்சம்பவம் குறித்த செய்தி உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானத்தின் பயண வேகத்தை காட்டிலும் வேகமாக பரவியது.
இதனை அடுத்தே Mஏ370 இற்கு என்ன நடந்ததென்பது தொடர்பாக பலரும் பலகோணங்களில் தமது எதிர்வு கூறல்களை வைக்க அது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தோல்வியையே சந்தித்தன.
விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா, நடுவானில் வெடித்து சிதறியதா, கடலினுள் விழுந்ததா, தொழில்நுட்பக் கோளாறா, விமானி தற்கொலையா இவ்வாறானா பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் பலகோணங்களிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு தேடுதல் பணிகளும் ஆரம்பித்தன.
சனிக்கிழமை காலை முதல் வியட்னாம்மலேசியா இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தன. அன்று மாலை வியட்னாம் கடற்படையினரால் எண்ணெய் கசிவு மீட்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் எண்ணெய் கசிவு மட்டுமே வலுவான ஒரு ஆதாரமாக இருந்துள்ளது. சீனக்கடலில் இந்த எண்ணெய் கசிவு மீட்கப்பட்ட நிலையில் அங்கு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிதைவுகள் எதுவும் மீட்கப்படவில்லை.
குறித்த பகுதியில் விமானம் விழுந்திருந்தால் அங்கு சிதைவுகள் மீட்கப்பட்டிருக்க வேண்டும் அவையும் கிடைத்திருக்கவில்லை.
இந்நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, 40 கப்பல்களும் 20 விமானங்களும் வியட்னாம் கடற்பரப்பில் தேடுதலை மேற்கொண்டிருந்த நிலையில் வியட்னாம் கடற்படையினரால் கடற்பகுதியில் பொருள் ஒன்று அடையாளங் காணப்பட்டது.
அப்பொருளும், எண்ணெய் கசிவும் விமானத்தினுடையதல்லவென உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் இவ்விமானம் திசை திரும்பியிருக்கலாமென மலேசிய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதனை நிரூபிப்பதற்கான எந்தவிதமான அத்தாட்சிகளையும் மலேசியா முன்வைக்காத நிலையில் இந்த கூற்றையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
திங்கட்கிழமையன்று மேற்கு மலேசியர்கள் இருவர் பாரிய ஒளி கீழியறங்கியதாக கூறுகின்றனர். அவர்களது சாட்சியம் பதியப்பட்டுள்ளதுடன் அன்றயை தினம் விமானம் திசை திரும்பியதாக கூறப்பட்ட தாய்லாந்து குடாவில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் கிட்டத்தட்ட 100 கடல் மைலுக்கு தேடுதல் எல்லை விஸ்தரிக்கப்பட்டது. தாய்லாந்து கடலின் ஆழம் 30 முதல் 50 மீற்றர் வரையானது. இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் விரைவில் தெளிவான முடிவுகளை பெற்றிருக்கலாம். ஆனால், அன்றைய தினமும் எந்தவிதமான தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை.
மறுநாள் போலிக்கடவுச் சீட்டில் பயணித்தவர்கள் இருவரும் பயங்கரவாதத்துடன் எந்தவிதமான தொடர்பினையும் கொண்டிருக்கவில்லையெனவும் அவர்கள் இருவரும் ஐரோப்பாவுக்கான குடியேற்றவாசிகள் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் சில பயணிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பினை மேற்கொள்ள முடிவதாக உறவினர்கள் கூறினர். ஆனால், எவரும் பதிலளிக்கவில்லையென கூறப்பட்டது. 11 பேரது தொலைபேசிகள் இயங்கியதாக கூறப்பட்டது. ஆனால், தாம் அழைத்தபோது அந்த இலக்கங்கள் இயங்கவில்லையென மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை பாரிய வெளிச்சம் ஒன்று விழுந்ததை தான் கண்டதாக தென்சீன கடலில் எண்ணெய் கிணற்றில் பணியாற்றும் ஒருவர் இமெயில் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று மலாக்கா நீரிணை வரையான எல்லை நீடிக்கப்பட்டு 27 ஆயிரம் சதுர கடல் மையில் தேடுதல் நடவடிக்கையில் 12 நாடுகளின் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டன. விமானம் திரும்பியதாக கூறப்பட்ட கருத்தினை மலேசியா மறுத்துள்ளது.
இதேவேளை, சீனாவில் இடம்பெற்ற உறவினர்களுடனான சந்திப்பில் அதிகாரிகள் மீது தண்ணீர் போத்தல் வீசப்பட்டுள்ளது. இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போதும் மலாக்கா நீரிணையில் ஒரு பொருள் அடையாளங் காணப்பட்டபோதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான நிலையில் வியாழக்கிழமையன்று தென்சீனக் கடலில் சீன செய்மதி மூலம் மற்றொரு பொருள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேற்கூறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால், முதலில் விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு பற்றி நோக்க வேண்டும்.
இந்தத் தொடர்பானது இயந்திரங்கள் கோளாறடைந்தாலும் 20 நிமிடத்திற்கு நீடிக்கக் கூடியது. ஆனாலும், இயந்திரக் கோளாறு தொடர்பான தகவலை விமானி உடனடியாகவே வழங்கியிருக்க முடியும் . இது நடைபெறாது இருக்காவிடில், விமானியை எவராவது அச்சுறுத்தியிருக்க வேண்டும் அல்லது விமானம் நடுவானில் வெடித்து சிதறியிருக்க வேண்டும். இது இயந்திரகோளாறினால் அல்லது குண்டுத் தாக்குதல் மூலம் நிகழ்த்தப்பட வேண்டும்.
இதில் வெடித்துச் சிதறும் சந்தர்ப்பம் நிச்சயமாக இல்லை. ஏனெனில், விமானத்தின் சிதைவுகள் எதனையும் இதுவரை மீட்கமுடியவில்லை.
அல்லது ட்ரான்ஸ்பொண்டரை விமானியோ அல்லது வேறு நபரோ நிறுத்தியிருந்தால் தகவல் துண்டிப்பு இடம்பெறும். விமானி தற்கொலைக்கு முயற்சித்திருந்தால் இதனை செய்திருக்கலாம்.
ஆனால், இதே பாதையில் வந்த வியட்னாம் விமானம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 01.39 மணிநேரத்தில் இந்த விமானத்துடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ள போதும், மறுமுனையிலிருந்து தெளிவான உரையாடல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்த அடிப்படையில் ஒன்றில் விமானத்தை எவராவது துப்பாக்கி முனையில் கடத்தி எங்காவது தரையிறக்கியிருக்க வேண்டும் அல்லது விமானி வேண்டுமென்றே விமானத்தின் முழு இயக்கத்தையும் நிறுத்தி கடலில் வீழ்த்தியிருக்க வேண்டும்.
இதில் விமானம் கடத்தப்படுவதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் வரை விமானம் பறப்பதற்கான சாத்தியமுள்ளதென கூறி கடத்தல் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கின்றது.
அவ்வாறு கடத்தப்பட்டால் அந்த விமானத்தை தரையிறக்குவதற்கான இரகசியமான பாரிய ஓடுதளம் எங்கு உள்ளது. அவ்வாறு தரையிறக்கப்பட்டாலும் பயணிகள் எப்படியாவது தொடர்புகொள்ள முயற்சித்திருப்பர். அல்லது கடத்தியவர்கள் சரி தமது கோரிக்கைகளை முன்வைத்திருப்பார்கள். இது நிகழாத நிலையில் விமானம் வேறெங்கும் தரையிறக்கப்பட்டிருக்கலாமா என்பது சந்தேகம் நிறைந்த ஒன்றாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சி நிகழாது விடில் அந்த விமானம் ஏதோ ஒரு விதத்தில் கடலிலோ தரையிலோ தான் விழுந்திருக்கும். பெரும்பாலும் கடலில் விழும் சாத்தியமே கூடுதலாக உள்ளது. ஒன்றில் விமானம் வெடிக்காமல் விழுந்திருக்க வேண்டும் அல்லது கடலின் அடியில் சென்று வெடித்திருக்க வேண்டும்.
நிலைக்குத்தாக இவ்விமானம் கடலில் விழுந்திருந்தால் அது வெடிக்காமல் ஆழ்கடலுக்குள் சென்றிருப்பதற்கான சாத்தியம் உண்டு. கிடையாக விழுந்திருக்குமானால் சிறகுகள் வெடிக்கும் சாத்தியம் உள்ளது. அவ்வாறு இருந்திருந்தால் பாரிய சிதைவுகள் மீட்கப்பட்டிருக்கும். ஆனால், சிதைவுகள் இதுவரை மீட்கப்பட்டிருக்கவில்லை.
அவ்வாறெனில் இவ்விமானம் நிலைக்குத்தாக கடல் அடிவரை சென்று வெடிக்காமல் இருக்க வேண்டும். இந்நிலையில் பயணிகள் உயிருடன் இருந்திருந்தால் எவராவது கதவினை திறந்து வெளியேற முயற்சித்திருப்பர். அதன் பயனாக சிலர் நீந்திக் கரைசேர்ந்திருக்கலாம் அல்லது உயிர்காக்கும் அங்கிகளுடன் மிதந்திருக்கலாம். விமானத்தினுள் நீர் புகுவதற்கான சாத்தியங்கள் இல்லை. சில வேளைகளில் உடல்கள் கூட மிதந்திருக்கும். இவை நடைபெறாத நிலையில் விமானம் கடலில் விழுந்திருந்தால் அது வெடிக்காமலேயே இருக்க வேண்டும்.
இதுதவிர விமானத்தின் கறுப்பு பெட்டியானது 30 நாட்களுக்கு மட்டுமே தனது சமிக்ஞையினை வெளிக்காட்டும். அதற்குள் அதனை மீட்காதுவிடில் பின்னர் கடினமாகிவிடும்.
இதேவேளை பாரிய வெளிச்சம் கீழிறங்கியதாக சிலர் சாட்சியமளித்துள்ளனர். அவர்கள் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் சரியான இடத்தை கணித்தும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. பலன் இல்லை. அவ்வாறு விமானம் விழுந்திருந்தால் அதன் சிதைவுகள் கூட மீட்கப்பட்டிருக்கும். ஏன் அவை மீட்கப்படவில்லை.
இவ்வாறான பலகேள்விகளுக்கு விமானத்தின் கறுப்புபெட்டி மற்றும் கொக்பிட்குரல் பதிவுப்பெட்டி என்பன மீட்கப்பட்டாலே இதற்கான விடைகள் கிடைக்கும்.
விமானம் கீழே பாரிய வெளிச்சத்துடன் விழுந்திருந்ததை பலர் கண்டது உண்மையாக இருந்தால் அவ்விமானம் வெடிக்காமல் கடலினுள் உள்ளதென்பதே சாத்திய நிகழ்வு. ஏனெனில், அதனை தரையிறக்கினால் அது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாமல் இருக்கப் போவதில்லை.
இது இவ்வாறிருக்க பாரிய தாக்கத்திற்கு உள்ளாக்கியிருப்பவர்கள் பயணிகளின் உறவினர்கள். தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறியாமல் தவிக்கின்றார்கள்.
அவர்களின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இறந்துவிட்டார்களா உயிருடன் இருக்கின்றனரா என்ற கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.
உண்ணாமலும் உறங்காமலும் நடைபிணங்களாகத் திரியும் உறவினர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டும். இவர்களை பராமரிப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை நிவர்த்தி செய்ய முடியாது.
எமது உறவினர் ஒருவர் அதில் சிக்கியிருந்தால் இந்த பத்தியினை எழுதும் நிலையில் நானோ அல்லது வாசிக்கும் நிலையில் நீங்களோ இருந்திருக்கப் போவதில்லை.
2009இல் எயர் பிரான்ஸ் உள்ளிட்ட பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றிலும் சில விமானங்கள் மீட்கப்பட்டது, சில மீட்கப்படவில்லை இன்றும் மாயமாகவே உள்ளது. பேர்முடா முக்கோண மர்மம் எவ்வாறு இன்னமும் அறியப்படவில்லையோ அதனைப் போலவே சில விமான விபத்துகளின் முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை. இலங்கையின் பிரபல வர்த்தகர் உபாலி விஜேவர்த்தனவின் விமானத்திற்கு என்ன நடந்ததென்பதும் கண்டுபிடிக்கப்படாத ஒன்று.
விமான விபத்துகளில் தீர்வு காணப்படாத மர்மங்கள் கடந்தகால வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. ஆனால், இன்றைய அதிதொழில்நுட்ப உலகில் ஒரு விமானம் மாயமாகியுள்ள நிலையில் அதற்கு என்ன நடந்ததென்பதனை கண்டறியாமல் ஒரு வாரம் கடந்திருப்பது இந்த உலகின் மீதான மாபெரும் அவமானம்.
தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியில் பாரிய வெற்றிடம் உள்ளமையை இவ்விமானத்தை கண்டுபிடிப்பதில் உள்ள தோல்வி வெளிக்காட்டுகின்றது.
Mஏ370 என்ற விமானத்தின் மாயத்தினை நீக்குவதில் இன்றைய உலகம் தோற்றுவிட்டது என்பதே உண்மை. சில வேளைகளில் எதிர்வரும் நாட்களில் இவ்விமானம் கண்டறியப்படலாம் ஆனாலும், ஒரு வாரகாலத்தினுள் விமானம் குறித்த ஒரு சிறு தரவினை கூட பெறமுடியாதது உலகின் மாபெரும் தோல்வி அல்லவா.
நன்றி தினக்குரல்
யோ.நிமல்ராஜ்





.jpg)