ஆசியப் பிராந்தியத்தின் மிகப் பிரமாண்டமான கடற்கரைக் கொண்டாட்டமாக அமைந்தது ஹிக்கடுவ கடற்கரை கொண்டாட்டம். 2008 இல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் விருந்தினர்களும் கலந்துகொண்டனர். மிகவும் சிறப்பான முறையில் இலங்கை சுற்றுலாத்துறையினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு இலங்கையின் முன்னணி நிறுவனங்களான ரிகோ, றியல் றேடியோ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ், சம்பத் வங்கி மற்றும் மஞ்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் அனுசரணையாளர்களாக இருந்தன.
கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வுகள் உண்மையில் மிகவும் சிறப்பானதொரு கொண்டாட்டமாகவே இருந்தன.
அதேவேளை, ஹிக்கடுவ நகரமே வண்ணமயமாகக் காணப்பட்டதுடன் புதுப்பொலிவாக தன்னை மாற்றிக்கொண்டது.
இக்கொண்டாட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் கலாசார மற்றும் மேலைத்தேய, கீழைத்தேய நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
இலங்கை சுற்றுலாத்துறையினரால் நேர்த்தியான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட இந்நிகழ்வில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆசியப் பிராந்தியத்தின் இவ்வருடத்திற்கான மிகப்பெரிய கொண்டாட்டமாக மாற்றியிருந்தன
ர்.
ஹிக்கடுவ கோரல்ஸ் கார்டன் ஹோட்டலில் ஆரம்பநாள் நிகழ்வின்போது உரையாற்றியிருந்த பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா;
ஹிக்கடுவவில் நடைபெறும் இக்கொண்டாட்டத்தின் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையையும் ஹிக்கடுவ பிரதேசத்தையும் சர்வதேசமே மெச்சும் அளவிற்கு அமையுமெனத் தெரிவித்திருந்தா
ர்.
அவரது கூற்றுக்களை மெய்ப்பிக்குமளவிற்கு அந்த ஐந்து நாட்களும் இடம்பெற்ற நிகழ்வுகள் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஓர் புதிய பரிணாமம் கிடைத்துள்ளது.
ஆரம்ப நாள் நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மேள தாள வாத்தியங்களின் அணிவகுப்புகளுடன் தேசிய நடனங்களும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அணிவகுப்புகளும் இடம்பெற்றிருந்தன.
அதேவேளை, இராமர், சீதா வரலாறு கூறும் நடனம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் அதற்கென கடலலைகள் முத்தமிடும் தரையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினில் நடைபெற்றது.
மிகவும் நேர்த்தியான ஒளி அமைப்பு அரங்கிற்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்திருந்த அதேசமயம் ஒலி அமைப்பும் துல்லியமானதாக இருந்தது.
ஒவ்வொரு நாள் இரவும் ஒன்பது மணியளவில் ஆரம்பமாகும் அரங்க நிகழ்வுகள் மறுநாள் அதிகாலை வரை நீண்டதுமுண்டு.
ஒவ்வொரு தினமும் விதம் விதமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி பகல் நேர நிகழ்வுகளாக கடற்கரை விளையாட்டுக்கள், மணற்சிற்பம் அமைத்தல், உணவு கொண்டாட்டம், கடற்கரைச் சந்தை, சிறுவர் விளையாட்டுகள், பட்டம் விடும் போட்டி, குதிரைச் சவாரி என்ற நிகழ்வுகள் ஹிக்கடுவ கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை, இந்நிகழ்வுகளின் ஓர் அங்கமாக தொங்தட்டுவ வாவியில் தனி மனிதர் ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டு நிர்வகித்துவரும் எக்கோ விலேஜில் படகு வலித்தல், படகுப் போட்டி ஆகியன நடைபெற்றிருந்தன.
திலக் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த எக்கோ விலேஜ் அருமையானதொரு இயற்கையுடன் இணைந்த சூழலில் மிகவும் வசீகரமாகக் காட்சி தருகின்றது.
சுற்றுலாத்துறையின் எதுவிதமான உதவிகளுமின்றிச் செயற்பட்டுவரும் தனது நிறுவனம் இலங்கை சுற்றுலாத்துறையின் ஓர் அங்கமாக இணைய வேண்டுமென்பதே தனது நீண்டகால அவா எனத் திலக் தெரிவித்தார்.
முதல்நாள் அரங்க நிகழ்வில் நம்நாட்டுக் கலைஞர்களின் பல்வேறு நடன நிகழ்வுகள் நடைபெற்றன.
ஒவ்வொரு நடனமும் இரசிகர்களை மாற்றுத்திசை திரும்ப முடியாதளவிற்கு சிறப்பான முறையில் நெறியாள்கை செய்யப்பட்டு உரிய கலைஞர்களால் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
பெரும்பாலும் நமது கலாசார, தேசிய விழுமியங்களுடன் அமைந்த இந்நடன நிகழ்வுகளில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் லயித்துப்போயிருந்தமை எம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் விடயமே.
இரண்டாம் நாள் அரங்க நிகழ்வு ட்ரம் வாத்தியத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் புகழ்பூத்த ட்ரம் வாத்தியக் கலைஞர்களான நேசன் தியாகராஜா, ரவிபந்து வித்தியாபதி உள்ளிட்ட பிரபல கலைஞர்களின் குழுக்கள் ட்ரம் வாத்திய நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியிருந்தன.
இந்த ட்ரம் வாத்திய இசை நிகழ்வுகளை மேலும் மெருகூட்டும் வகையில் புகழ்பூத்த புல்லாங்குழல் கலைஞர் பிக்ரம்ஜித் சிங்கின் புல்லாங்குழல் இசை அனைவரினதும் உள்ளங்களைத் தழுவிச் செல்லுமளவிற்கு அமைந்திருந்தது.
அதேவேளை, ஹிக்கடுவையில் தோன்றி வளக்கின்ற எலிபன்ட் புட் ட்ரம் வாத்தியக் குழுவினரின் நிகழ்வு மிகவும் சிறப்பானதும் வித்தியாசமானதுமொரு நிகழ்வாக அன்றைய அரங்கை அலங்கரித்த அதேவேளை நின்றவர்களையும் துள்ளவைத்துக் கொண்டிருந்தது.
இவ்வாறான நிகழ்ச்சிகளை வழங்கக்கூடிய நமது கலைஞர்கள் இருக்கின்றார்கள் என்பதை வெளி உலகிற்கும் ஏன் நம்நாட்டுக்குமே வெளிக்கொண்டுவந்த பெருமை இலங்கை சுற்றுலாத்துறையினரையே சாரும்.
பகல் நேர நிகழ்வுகளாக இடம்பெற்ற கரையோர விளையாட்டுகளில் பீச் றகர், பீச் கரப்பந்தாட்டம் போன்றவை நடைபெற்றிருந்தன.
இவ்விளையாட்டுகளில் பல்வேறு பாடசாலைகள், கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.
அதேவேளை, மணற்சிற்பம் தீட்டும் நிகழ்வில் சிறுவர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர். வெளிநாட்டுச் சிறுவர்களும் தமது பெற்றோருடன் இணைந்து சிற்பங்களை அமைத்து தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமையைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மூன்றாம் நாள் அரங்க நிகழ்வின்போது ஸ்கொட்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார் டிஜே இசை வல்லுநர் லீசா லிட்டில்.
டிஜே இசைக்கலைத்துறையில் உலகளவில் முதற் பெண்மணி என்ற பெருமைக்குரிய இவர் சர்வதேச டிஜே கலைஞர்களுடனான தரப்படுத்தலில் மூன்றாமிடத்தில் உள்ளார்.
லீசாவின் கைவண்ணத்துடனும் டிஜே தொழில்நுட்பத்துடனும் இணைந்து பிறந்த மேலைத்தேய இசைக் கலவைக்கு நடனமிட பிரிட்டனிலிருந்து வந்த ஆறு நடன மாதர்கள் அரைகுறை நிர்வாணத்தில் அரங்கினில் நடனமிடும் அதேசமயம் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருமே தம்மையறியாமல் ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர்.
இதேவேளை, நம்நாட்டுக் கலைஞரான அல்ஸ்ரொன் கொச்சும் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்து சில பாடல்களை பாடி மகிழ்வித்திருந்தார்.
அரைகுறை ஆடை நடன மாதர்களை தமது புகைப்படக் கருவிக்குள்ளோ அல்லது கையடக்கத்தொலைபேசிகளுக்குள்ளோ பதிவுசெய்து விட வேண்டும் என்ற அவாவுடன் அரங்கின் முன்னால் ஒரு கூட்டம் அலைமோதியது.
எவர் என்னதைச் செய்தாலும் நமக்கென்ன என்ற எண்ணத்துடனும் தாராள மயக் கொள்கையுடனும் ஆறு நடன மாதர்களும் நடனமிட்டுக்கொண்டிருந்தனர்.
இவ்வாறாக இரவைப் பகலாக்கிய மின்னொளியில் அதிகாலை வரை நடன மாதர்களின் நடன நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
இரண்டாயிரம் ரூபா செலுத்தி அனுமதிச் சீட்டினைப் பெற்று இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தவர்களில் அநேகரின் கைகளிலும் ஒருவகை மதுபானமும் ஆறாம் விரலாக சிகரட்டும் விடியும் வரை நழுவாதிருந்ததைக் காண முடிந்தது.
இவ்வாறாக பல்வேறுபட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் ஜூலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரை களைகட்டியிருந்தது ஹிக்கடுவ நகரம்.
இலங்கை சுற்றுலாத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கொண்டாட்டத்தின் மூலம் சுற்றுலாத்துறை வரலாற்றில் இலங்கை புதியதொரு காலடி வைத்துள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையே முற்றாக இலக்காகக் கொண்டுள்ள எமது சுற்றுலாத்துறைக்கு இந்நிகழ்வு நிச்சயமாக வெற்றிப்பாதையையே காட்டும்.










யோ.நிமல்ராஜ்
நன்றி தினக்குரல் புதன் வசந்தம்