ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

நர்க்கீஸின் தூறல் ஓய்ந்துவிடாத நிலையில் சீனாவை உலுக்கிச் சென்றுள்ள பூகம்பம்



உலகில் மனிதனின் இருப்பைக் கேள்விக்குறியாக்குமளவிற்கு இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்தவண்ணமிருப்பது நிச்சயமாக மனிதனின், ஏன் உலகின் இருப்பையே சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.
ஆம், அந்தளவிற்கு அண்மையில் ஆசியப் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள இரு பேரனர்த்தங்கள் அவ்வாறு சிந்திக்கத் தூண்டியுள்ளது.
உலகு கண்ட கொடூரமான இயற்கைப் பேரனர்த்தங்களில் ஒன்றாகப் பேசுமளவிற்கு கடந்த பன்னிரெண்டாம் திகதி சீனாவை உலுக்கியுள்ளது பூகம்பம்.
இது ஒருபுறமிருக்க, மியன்மாரில் தனது கைவரிசையை காட்டிச் சென்ற நர்க்கீஸ் சூறாவளியில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரையில் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, மேலும் பலரின் நிலைமை விடைபெறமுடியாத கேள்விகளாகவே உள்ளமை மேலும் அதிர்ச்சி தரும் விடயமாகவுள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலும் பெரும்பாலான மியன்மார் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கை நீட்டுகின்றபோதும் அவர்களின் கைகளிற்கு பதில் கொடுக்கவோ அல்லது பதில் கொடுக்க முன்வருபவர்களுக்கு இடமளிக்கவோ இல்லை மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள்.
இவ்வாறான நிலையிலும் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் மியன்மார் அரசால் வழங்கப்படவில்லை.
மியன்மாரில் நர்க்கீஸின் தூறல் நின்றுவிடாத நிலையில் மற்றுமொரு ஆசிய நாடான சீனாவில் பூகம்பம் தலைவிரித்தாடி குடும்பங்களை சிதைத்தும் குழந்தைகளை அநாதைகளாக்கியுமுள்ளது.
சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள சிஞ்சுவான் மாகாணத்தில் 7.8 மக்னிரியூட் அளவில் கிளம்பிய பூகம்பம் சிஞ்சுவானை அண்மித்த பகுதிகளில் ஊடுருவித் தனது பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது.
பன்னிரெண்டாம் திகதி பகல் 14.28 மணியளவில் பூகம்பம் தோன்றியதால் சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் அதிகமாகக் காணப்பட்டனர்.
அலுவலகங்களோ பாடசாலைகளோ மூடப்படாமல் கடமை நேரத்தில் இருந்தமையும் ஒரே நேரத்தில் குறிப்பிட்டதொரு இடத்திலிருந்து பெருமளவான உயிர்களை காவுகொள்வதற்கு காரணமாயிற்று.
பூகம்பம் தாக்கிய பகுதிகளிலிருந்த எட்டுப் பாடசாலைகள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படும் அதேவேளை, ஒரு சில பாடசாலைகள் முற்றாக நிலத்துள் புதைந்துவிட்டதென்றும் பாடசாலை ஒன்றிலிருந்த 900 மாணவர்களின் உயிர்களும் பறித்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 22 ஆயிரத்து அறுபத்து ஒன்பது பேரின் இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் இத்தொகை ஐம்பதாயிரமாகவோ அல்லது அதற்கு அப்பாலோ அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.
கடந்த 1976 ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றிய தங்சான் பூகம்பத்தில் இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
அதற்குப் பின்னர் அவ்வாறானதொரு தொகையைப் பலிகொண்ட பூகம்பத்தை சீனா கண்டிராவிடினும் 1947 இல் 6.4 மக்னிரியூட் அளவில் தாக்கிய பூகம்பத்தில் 50 பேர் பலியானதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தும் 1997 ஏப்ரல் 6.6 ரிச்டர் பூகம்பத்தில் 9 பேரும், 1998 ஜனவரியில் 6.2 ரிச்டரில் தோன்றிய பூகம்பத்தில் 47 பேரும், 2003 பெப்ரவரியில் 6.8 ரிச்டரில் தோன்றிய பூகம்பத்தில் 94 பேரும் பலியாகியிருந்தனர்.
ஆனால், கடந்த 2008 மார்ச்சிலும் 7.2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஒன்று சீனாவைத் தாக்கியிருந்தும் உயிரிழப்புகள் ஏற்படுமளவிற்கு அதன் தாக்கம் அமைந்திருக்கவில்லை.
அத்துடன், கட்டிடத்தின் சேதங்களும் மிகவும் குறைவாகவே இருந்தமை, இன்றைய மற்றும் முன்னைய காலங்களில் தோன்றிய பூகம்பங்களின் அளவுகளுடன் ஒப்பிடுகையில் அதிசயிக்கத்தக்கதாகின்றது.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி 7.8 ரிச்டர் அளவில் முதலாவது பூகம்பமும் சற்றுப் பின்னர் 5.9 ரிச்டர் அளவில் இரண்டாவதும் தோன்றியிருந்தது.
முதலாவதில்தான் பாரிய அனர்த்தங்கள், கட்டிட அழிவுகள் ஏற்பட்டிருந்தாலும் இரண்டாவதில் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு என்பன மட்டுமே பாதிக்கப்பட்டது.
இப்பூகம்பத்தின் தாக்கத்தினால் 4.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக புகலிடங்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சீன ஜனாதிபதி ஹுஜிந்தாவோ சேதங்கள் ஏற்பட்ட இடத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டுள்ளமை, அந்நாட்டில் மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலிருக்கும் அந்நியோன்யத்தை வெளிக்காட்டியுள்ளது.
பாடசாலைக் கட்டிடங்களின் இடர்பாடுகளுக்குள் கிட்டத்தட்ட 1,700 மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
சிஞ்சுவான் மாகாணத்தில் மாத்திரம் இரண்டு லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
எப்பகுதியைத் தோண்டினாலும் உடல்களே வந்து வந்து குவிகின்றன.
பாடசாலைக் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து தமது பிள்ளைகளோ சகோதரர்களோ திரும்பி வருவார்களாவென எதிர்பார்த்தபடி பெற்றோர்களும் உறவினர்களும் இன்னமும் காத்திருக்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சீனா வெளிநாட்டு உதவிகளுக்கோ ஊடகங்களுக்கோ எந்தவிதமான மறுப்புகளையும் வெளிப்படுத்தாமல் அங்கு என்ன நடக்கின்றதென்பதை வெளி உலகிற்கு காட்டுகின்றது.
அத்துடன், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மியன்மாருடன் ஒப்பிடுகையில் சீனா இவ் அனர்த்தத்தின்போது கையாண்ட அணுகுமுறை வித்தியாசமானதாகவே உள்ளது.
பிறநாடுகளிலிருந்து அவசர உதவிகளும் மீட்புப் பணியாளர்களும் சீனாவுக்கு வந்துள்ள அதேசமயம், காயமடைந்த மக்களுக்கு தேவையான இரத்தமும் வெளிநாட்டு நலன்விரும்பிகளால் வழங்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
தாய்வானிலிருந்து மாத்திரம் 150 தொன் உதவிப் பொருட்கள் இரண்டு சரக்கு விமானங்களில் சீனாவை வந்தடைந்துள்ளன.
அவசர உதவிகள் நேரடியாகவே மக்களைச் சென்றடையும் வகையில் சீன அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பொருளாதார ரீதியாகவும் சீனாவில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ள அதேசமயம், அநாதைகள் ஆக்கப்பட்டுள்ள பலரின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.
பெற்றோர்களைத் தேடும் பிள்ளையும் பிள்ளையைத் தேடும் பெற்றோருமாக எங்கும் அழுகுரல்களே கேட்ட வண்ணமிருக்கின்றன.
எவருமே எவருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் நடைப்பிணங்களாய் தமது உறவுகள் வருவார்களா என கட்டிட இடிபாடுகளை நோக்கியும் இறந்தவர்களின் உடல்களை திறந்து பார்க்கத் தெரியாதவர்களாகவும் அலைந்து திரியும் கோரக்காட்சிகள்....
ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பிஞ்சுகள் பிணங்களாக பெற்றோர்களின் கைகளில்.
பள்ளிக்குச் சென்ற பிள்ளை பிணமாகத் திரும்புமென எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
இன்னமும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தைகளை மீட்புப் பணியாளர்கள் தம்முயிரை பணயமாக வைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக வெளி உலகமே சீனாவை உற்றுநோக்கிக் கொண்டிருந்தவேளை தற்பொழுது அனைத்துத் தரப்பினரின் பார்வையை மேலும் வலுவடையச் செய்திருக்கின்றது சீனாவில் ஏற்பட்டுள்ள இப்பூகம்பம்.
இவ்வாறான இயற்கைப் பேரழிவுகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொள்வது அதிகரித்திருப்பது நிச்சயமாக உலகின் இருப்பை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளமையை எவராலும் மறுக்க முடியாது.

நன்றிஞாயிறு தினக்குரல்

யோ.நிமல்ராஜ்

மியன்மாரில் கோரத்தாண்டவமாடிய நர்க்கீஸ் சூறாவளியும் உலக சந்தையில் அரிசியின் தட்டுப்பாடும்?



இராணுவ ஆட்சியின் இரும்புப் பிடியில் சிக்கித் தவிக்கும் மியன்மாரை கோரத்தாண்டவமாடி சின்னாபின்னமாக்கி சிதறடித்துச் சென்றுள்ளது நர்க்கீஸ் சூறாவளி என்று கூறுமளவிற்கு நர்க்கீஸின் தாக்கம் அந்நாட்டில் ஊன்றிப் பதிந்துள்ளது.

உலகளவில் எந்தளவிற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றதோ இல்லையோ இயற்கை, செயற்கை ஆகிய இரண்டும் இணைந்து, மனிதப் படுகொலைகளையும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த 2004 ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் கடல்கோள் அனர்த்தத்தின் மூலம் இந்து சமுத்திரத்தை அண்மித்த பல நாடுகளிலிருந்து இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொள்ளப் பட்டு அதன் வடுக்கள் இன்னமும் அழிந்தும் அழியாத நிலையிலுள்ளன.

இதேவேளை இக்கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேசத்திலிருந்து நிவாரண உதவிகள் அந்தந்த அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டும் இன்னமும் உரியவர்களுக்கு போய்ச் சேராமல் இடைத்தரகர்களின் கைகளில் அகப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்தவாரம் சூறாவளியும் பெரும் புயல் காற்றும் மியன்மாரில் கோரத்தாண்டவமாடியதில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் வரை பலியாகி இருக்கலாமென அஞ்சப்படுவதுடன், மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமலும் போயுள்ளனர்.

உலகின் மிகமிக மோசமான பேரனர்த்தங்களில் ஒன்றாக கருதப்படும் இச்சூறாவளியில் மியன்மாரின் பல நகரங்கள் அழிந்துள்ளமையாலும் மீட்புப் பணிகள் சற்றுத் தாமதமாகவேனும் தொடர்ந்து நடைபெறுவதாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையோ அல்லது காணாமல் போயிருப்பவர்களின் எண்ணிக்கையையோ சரியாகவும் உறுதியாகவும் கூறமுடியவில்லை.

இதேவேளை பலியானவர்களில் பெரும்பாலான எண்ணிக்கையில் சிறுவர்கள்தான் அடங்குகின்றனரென்பது மற்றுமொரு அனர்த்தமாகவுள்ளது.

புயல் சூறாவளி என்பவைதான் மியன்மாரைத் தாக்கியிருந்தாலும் நகருக்குள் புகுந்த கடல்நீர்தான் பெரும்பாலானவர்களை இழுத்துச் சென்றுள்ளதென்றும் கூறப்படுகின்றது.
இதற்கு ஆதாரமாக கரையோர நகரொன்றில் வாழும் இருநூறோ அல்லது அதற்கு அண்மையிலமைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் முற்றாக கடல் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
சுமார் பதின்மூன்று அடி உயரத்துக்கும் மேலாக எழுந்த கடலலைகள் கரையோரப் பிரதேசங்களில் இருநூறு மீற்றர் தூரம்வரை உட்சென்று தாக்கியுள்ளது.
மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கிய இப்புயலினால் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பத்து இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக 1.5 மில்லியன் மக்கள் இச்சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ளனரெனில் மியன்மாரின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது ஏழில் ஒரு வீதமாகும்.
அதேவேளை வரலாறு காணாத இச்சூறாவளி மற்றும் புயலினால் ஏற்பட்ட மரணங்களால் சனத்தொகையில் சடுதியானதொரு இறக்கத்தையும் அவதானிக்க முடிகின்றது.

இக்கடும் சூறாவளி மற்றும் புயல் தாக்கியதைத் தொடர்ந்து நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் மியன்மாரின் பல இலட்சக்கணக்கான மக்கள் பசியாலும், தொற்று நோய்களாலும் அவதிப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.நாட்டின் பெரும்பாலான குடிநீர் ஊற்றுக்கள் பாவனைக்கு உதவாத வகையில் அசுத்தமாக்கப்பட்டுள்ளன.

குடிப்பதற்கு நீரோ உண்பதற்கு உணவோ இன்றித்திண்டாடும் அந்நாட்டு மக்களுக்கு அனைத்து வகையான அவசர உதவிகளையும் வழங்குவதற்கு சர்வதேச உதவி அமைப்புகளும், உலக நாடுகளும் மியன்மாரை நோக்கிய அனுதாப உதவிப் பயணத்தை மேற்கொண்டிருந்தன.

இருந்தாலும் உதவிப் பொருட்களுடன் விமானங்கள் நடுவானில் திருப்பப்பட்டு இராணுவ அரசின் அநீதியான கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து திரும்பிச் சென்றுள்ளன.
இந்நிலையில் சர்வதேச உதவிப் பணியாளர்களையும் நிவாரண உதவிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை மியன்மார் அரசை வலியுறுத்தியிருந்தது.
ஆனால் சர்வதேச உதவிப் பணியாளர்களையும் நிவாரணப் பொருட்களையும் பர்மா இராணுவ அரசு ஏற்க மறுத்தது.

இதேவேளை வெளிநாட்டு உதவிகளை தாம் ஏற்கத் தயாரென்றும் அதன் விநியோகத்தை தமது கைகளிலேயே வைத்துக் கொள்வதென்றும் பர்மா அறிவித்தது.

ஆனால் வெளிநாட்டு உதவிகளை பெற்று அதனை தேவையான இடத்துக்குச் சென்று விநியோகிக்கக் கூடிய வலுவை பர்மா இராணுவம் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறான காரணங்களினால் பெருமளவிலான நிவாரணப் பொருட்கள் திரும்பிச் சென்றுள்ளமை கவலைதரும் விடயமாகும்.
மேலும் உதவிப் பணியாளர்களை பர்மாவுக்குள் அனுமதிக்க உடனடியாக விசாவினை பர்மா வழங்க வேண்டுமென்று ஐ.நா.வால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் உதவிப் பணியாளர்களை அனுமதிப்பதற்கு மியன்மார் இராணுவ அரசு எளிதில் சம்மதிக்காதென உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

மனிதநேயப் பணியாளர்களை தனது நாட்டுக்குள் வரவேண்டாமென இதுவரை எவரும் தடுத்ததில்லை. வரலாற்றில் முதற்றடவையாக மியன்மார் அரசால் பணியாளர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டும் நிவாரண உதவிகளும் மறுக்கப்பட்டுள்ளன.

உண்பதற்கு உணவின்றியும் குடிப்பதற்கு நீர் இன்றியும் தவிக்கும் தன்நாட்டு மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் மியன்மார் அரசு ஏனைய நாடுகளின் உதவியை வரவேற்றிருக்க வேண்டும்.

இருபது இலட்சம் மக்களுக்கு உடனடியாக அவசர உதவி தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை ஒரு இலட்சம் மக்களே உதவியைப் பெற்றுள்ளனர்.

தற்காலிக புகலிடங்களில் மக்கள் வசித்துவருகின்ற அதேநேரம் அங்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் தோன்றியுள்ளது.
உலக சந்தையைப் பொறுத்தவரையில் அரிசியின் சந்தைப்படுத்தலில் மியன்மாரின் பங்கு இன்றியமையாத தொன்றாக இருந்து வந்தது.

ஏனெனில் விற்பனைக்குத் தேவையான பெரும்பாலான அரிசியை மியன்மார் தொடர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டே இருந்தது.
ஆனால் இச்சூறாவளி மூலம் மியன்மாரிலுள்ள பெரும்பாலான வயல் நிலங்கள் நெற்பயிர்ச்செய்கையை குறிப்பிட்டதொரு காலத்திற்கு மேற்கொள்ள முடியாதளவிற்கு சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் என்றுமில்லாதவாறு தனக்குத் தேவையான அரிசியையே வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை மியன்மாருக்கு ஏற்பட்டுள்ளமை வருந்தத்தக்கதொரு விடயமாகும்.

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதில் ஈடுபட்ட ஆசிய நாடுகளே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை ஆசியப் பிராந்தியத்தில் ஏற்கனவே இருந்துவரும் உணவுத் தட்டுப்பாட்டுடன் மியன்மாரின் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டமையும் இணைந்து உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை, ஆசியப் பிராந்தியத்தில் 1.5 பில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது.
மியன்மாரைத் தாக்கிய சூறாவளியினால் மியன்மார் மட்டுமன்றி அதனைச் சார்ந்திருந்த நாடுகளும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.

மியன்மாரைச் சூறாவளி தாக்கிய ஐந்து தினங்களிலேயே உலக சந்தையில் அரிசியின் விலையில் சடுதியான ஏற்றமும் தட்டுப்பாடும் நிலவியுள்ளது.

கடந்த 1991 இல் பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் 143,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதை தொடர்ந்து மியன்மாரில் தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அடுத்தபடியாக உள்ளது.

ஒருபுறம் இராணுவ அரசின் கொடுங்கோல் ஆட்சியும் அதனை எதிர்த்து பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டமும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டிருக்கும் இராணுவ அரசின் தாக்குதலில் பலியானவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் இன்னமும் அத்துயரிலிருந்து மீளாதவர்களாய் காணப்படுகின்ற நிலையில் இச்சூறாவளி அந்நாட்டில் தனது கைவரிசையையும் வெகுவாகக் காட்டியுள்ளது.

தொடர்ந்தும் உலக நாடுகள் இவ்வாறான இயற்கையின் சீற்றங்களை முற்கூட்டியே அறிந்து கொள்ளக் கூடிய கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

வரலாறு காணாதளவிற்கு தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காணப்படும் நிலையில் இயற்கை அனர்த்தங்கள் நிகழப்போகிறதென்பதை முற்கூட்டியே உணரக்கூடிய கருவிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

அவற்றின் மூலம் உடனடியாக அவ் இயற்கை அனர்த்தம் தாக்கப்போகும் பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதி மக்கள் இயலுமானவரை வேறு பிரதேசங்களுக்குச் சென்றோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றோ தமதுயிரை பாதுகாக்க முடியும்.

ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படுவது தொடர்பாக அறியக்கூடிய சாதனங்கள் தற்பொழுதும் இருக்கின்றனதான். ஆனால், அதன்மூலம் சமிக்ஞைகள் பெறப்பட்டாலும் மக்கள் எவ்வளவு தூரம் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இயற்கை அழிவு ஒன்று ஏற்படப்போகிறதெனில் அது தொடர்பான எச்சரிக்கை அனைவருக்கும் உடனடியாக செல்லக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இவ்வாறான இயற்கையின் சீற்றங்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உறுதியானதொரு நிலைப்பாட்டினை அனைத்துலக நாடுகளும் கொண்டிருப்பதன் மூலம் உயிரழிவுகளிலிருந்து பாதுகாக்கலாம்.

நன்றி
ஞாயிறு தினக்குரல்