ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

அந்தார்ட்டிக்காவில் உருகும் பனிமலைகள்

உலகெங்கிலும் இடம்பெறும் பரவலான வன்முறைகளால் உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, இயற்கையின் சீற்றங்களுக்கும் உலக மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்தும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, சூறாவளி, புயல், எரிமலைச் சீற்றம், மண்சரிவென வழமையான இயற்கைச் சீற்றங்கள் ஒருபுறமிருக்க பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட கடல்கோள் அனர்த்தத்தின் வடுக்கள் இன்னமும் அழியாத நிலையில் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி சகல ஊடகங்கள் மற்றும் அவதானிகளின் கவனத்தை தன்னகத்தே திருப்பியுள்ளது. அந்தாட்டிக்காவில் உடையும் பனிமலைகள்.
காலநிலை மாற்றத்தின் விளைவான வெப்பநிலை உயர்வால் அந்தாட்டிக்காவின் பிரதேசங்களிலுள்ள பாரிய பனிமலைகள் உடைந்து உருகி கடல் நீருடன் சேர்வதால் கடல் மட்டம் அதிகரித்து பல தீவுகள் முற்றாக கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து முழுவதும் பனிப்படலத்தால் போர்த்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதன் 30 சதவீத பனி உருகி கடலுக்குள் சேர்ந்துள்ளது. மேலும், இந்தக் கோடை காலம் நிறைவுறுவதற்கு முன்னர் இன்னமும் ஏராளமான பனிக்கட்டிகள் உருகி கடலுக்குள் சென்று விடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 16,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலை ஒன்று உடைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறை என்பவற்றால் தெற்காசியாவில் சுமார் 125 மில்லியன் மக்கள் இந்நூற்றாண்டிற்குள் இடம்பெயர நேரிடுமென சூழலியல் அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், காலநிலை மாற்றம் பருவ மழைக் காலங்களிலும் பெரிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்தும் அதேநேரம் இது விவசாய உற்பத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இறக்கத்தை ஏற்படுத்தி உலக உணவுத் தேவையை பெரிதும் பாதிக்கும் அபாயமும் உள்ளதென உலக சூழலியல் அமைப்பான "கிறீன் பீஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு தாக்கத்தை காலநிலை மாற்றம் விவசாய உற்பத்திகளில் ஏற்படுத்துமானால் தமது வாழ்க்கையின் மூலாதாரத் தொழிலாக விவசாயத்தைக் கொண்டு சீவிக்கும் மக்களே நேரடியான பாதிப்புக்கு உள்ளாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், விவசாய உற்பத்திகள் முடக்கப்படுமிடத்து வளர்ந்துவரும் நாடுகளும் ஏழை நாடுகளுமே இதனால் அதிகளவு பாதிப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அந்தாட்டிக்கா மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளைச் சேர்த்து 77 சதவீதம் உப்புக்கரிக்காத தண்ணீர் உள்ளது.

இதனால், ஏனைய 23 சதவீதமான நல்லதண்ணீர் ஏனைய மக்களின் தேவையை எந்தளவிற்கு பூர்த்தி செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகின் மொத்த பனிமலைகளில் தொண்ணூறு வீதமானவற்றை இந்த அந்தாட்டிக்கா கொண்டுள்ளது.

இத்தொகையில் எந்தவொரு பகுதியுமாவது கரைந்து கடலில் சேர ஆரம்பித்தால் கடல் மட்டம் நிச்சயமாக அதிகரித்தே தீரும்.அப்பகுதியினுள் நானூறுக்கும் அதிகமான மலைகளில் 75 சதவீதமானவை உடைந்து உருகத் தொடங்கியுள்ளன.

தென் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் 1600 கிலோமீற்றர் தூரத்தில் அந்தாட்டிக்காவின் தென்மேற்கில் வில்கின்ஸ் எனும் நிரந்தரமாக மிதந்து கொண்டிருக்கும் பனிப்பாறை உள்ளது.
வில்கின்ஸ் பனிப்பாறை எனப்படும் இப்பனிப்பாறை 41 கிலோமீற்றர் நீளத்தையும் 2.5 கிலோமீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளதுடன் பதினாறாயிரம் சதுர மீற்றர் பரப்பளவுமுடையது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் உடைய ஆரம்பித்துள்ள இப்பனிப்பாறையில் இதுவரை 570 சதுர கிலோமீற்றர் சிதைவடைந்து நீராக கடலுடன் சேர்ந்துள்ளது.
அந்தாட்டிக்கா வளைகுடா கடந்த 50 வருடங்களாக வெப்பநிலை அதிகரிப்பு அனுபவத்தைப் பெற்றுள்ளது. பத்தாண்டுகளுக்கு 0.5 சதம் பாகை வெப்பநிலை அதிகரிப்பு பூமியில் ஏற்பட்டிருப்பதை அந்தாட்டிக்காவில் உணர முடிந்துள்ளது.

இப்பனிப்பாறை உடைய ஆரம்பிப்பதை அடையாளம் கண்ட அமெரிக்க விஞ்ஞானியான ரெட் ஸ்காம் பொஸ், வில்கின்ஸ் பனிப்பாறைகள் சில நூற்றாண்டு காலத்திற்கு ஓரிடத்தில் இருக்குமென்றே நம்பினோம். ஆனால், காலநிலை மாற்றம் பிறப்பித்த அனல் காற்றும் சமுத்திர அலைகளும் அதனை உடைப்பதற்கு ஏதுவான காரணங்கள் ஆகிவிட்டன என்று கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளின் நிலை பற்றி அறிய கடந்த டிசம்பரில் நாசா அனுப்பிய ஐஸ்சாட் எனும் செயற்கைக் கோளின் தரவுகளின்படி அந்தாட்டிக்கா பதினேழு இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பும் ஐஸ்லாந்தில் ஒரு கோடியே 37 இலட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பும் பனிப்படுக்கைகள் உள்ளது.

இப்படுக்கைகளின் சராசரிக் கனம் எட்டாயிரம் அடி ஆகும். இவையின் மொத்தப் பரப்பு உலகப் பரப்பளவின் 10 சதவீதமாகும்.1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதிகளில் 7 பாகை பரனைட் வெப்பநிலை அதிகரிப்பால் பனி உருகத் தொடங்கியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த பனிக்கட்டியும் நகரத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு நகர்வதற்கு முக்கிய காரணமாக உருகிய பனியிலிருந்து வழிந்தோடும் நீர் கடலில் சென்று சேருதலே ஆகும்.பனிப்படுக்கைகளின் அடிப்பகுதியாலேயே இந்நீர் கடலில் சென்று கலப்பதாலேயே மொத்தப் பனிக்கட்டிகளும் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்துப் பனிக்கட்டிகள் உருகி கடலுடன் சேர்ந்தால் கடல் மட்டம் 23 அடி உயரத்துக்கு உயர்ந்து உலகளவில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்.

அத்துடன், தீவுகள் கடலில் மூழ்கும் அதேசமயம், பருவ நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அந்தாட்டிக்காவின் மொத்த பனிப்படுக்கைகளும் உருகிக் கடலுக்குள் சென்றால் கடல்மட்டம் 225 அடி உயருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறெனில் 23 அடி கடல்மட்டம் உயரும் பட்சத்திலேயே விளைவுகள் மிக மோசமானதாக இருக்குமென எச்சரித்துள்ள நிலையில் 225 அடி உயரத்திற்கு கடல்மட்டம் அதிகரிப்பதன் விளைவுகள் எவ்வாறிருக்கும்?இவ்வாறான காலநிலை மாற்றங்கள் உலக வெப்பமயமாதலே பிரதான காரணமெனக் கூறி அவ்விடயம் தொடர்பில் சர்வதேச அளவில் மாநாடுகளும் விழிப்புணர்வும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்மைய ஆண்டுகளில் எட்டு அல்லது ஒன்பது வீத பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள இந்தியா சூழலை அதிகளவு மாசுபடுத்தும் நாடாக உள்ளது.
அதன் எரிபொருள் நுகர்வின் அதிகரிப்பின் விளைவாக நாலு சதவீத பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்திற்கு காரணமாகவுள்ளது.

உலக வெப்பமயமாதலுக்கு நாமே பிரதான காரணமாக இருக்கின்றோம். அதாவது, வளிமாசடைதல், புவி வெப்பமடைதல் போன்றவற்றிற்கு எமது அன்றாடத் தேவைகளின் போது வெளியிடும் கழிவுகள், சத்தங்கள் உள்ளிட்ட காரணிகள் பிரதானமாகின்றன.
இதன் தாக்கமே பனிமலைகள் உருகி கடலுக்குள் சேரும் அபாயத்தை தோற்றுவித்து பல தீவுகளின் நிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் மட்டும் கடல் மட்டத்திலிருந்து பத்து மீற்றருக்கும் குறைவான தூரத்தில் 130 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். எனில், உலகளவில் அத்தொகை எவ்வாறான தொகை மாற்றத்தைக் கொண்டிருக்கும்?

இவ்வாறான இயற்கையின் சீற்றங்களை தடுப்பதற்காக சர்வதேச அளவில் காலநிலை மாற்றங்கள், உலக வெப்பமயமாதல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தும் இன்றைய அவசர உலகில் காலநிலை மாற்றங்களை தடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை நாம் எந்தளவிற்கு முன்னெடுத்துள்ளோம் என்பது திருப்திப்படக்கூடியதாகவில்லை.

யோ. நிமல்ராஜ்
நன்றி தினக்குரல் புதன் வசந்தம்