ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

கிரேக்கம் அடுத்தது என்ன‌


உலகளவிலுள்ள ஐரோப்பாவைச் சாராத நாடுகள் தமது பொருளாதார அபிவிருத்தியினை இலக்குவைத்த பயணங்களுக்கு ஐரோப்பியத்திற்குள் எப்படியாவது புகுந்து விடவேண்டுமென்ற இலக்குடனேயே உள்ளன.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கிரேக்கம் அந்த அமையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலையினை எதிர்கொண்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்
ஐரோப்பிய நாடுகளைப் பொருளாதார நெருக்கடி மிகமோசமாக பாதித்திருந்த நிலையில் கிரேக்கம் எதிர்பாராத வகையில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது.

இதன் விளைவாக பல்வேறு வங்கிகள் மூடப்பட்டிருந்ததுடன் பாரிய தொழிற்சாலைகள், நிறுவனங்களும் மூடப்படவேண்டிய நிலை உருவானது.கிரேக்க அரசாங்கத்தின் மீது அந்நாட்டு மக்களும் வெளிநாடுகளும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தன.

அதேவேளை, கிரேக்க அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி கிரேக்கத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சாதாரண பிரஜைகள்வரை கோடீஸ்வரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரது வருமானங்களிலும் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டதுடன் வேலைவாய்ப்பின்மையும் கிரேக்கத்தில் சடுதியாக அதிகரித்தது.




அத்துடன் அக்கால நெருக்கடியில் இடம்பெற்ற தேர்தல்கள், இராஜிநாமாக்கள், நியமனங்கள் காரணமாக நாட்டின் அரசியல் சுழலும் தொடர் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் நிலை உருவானது.

இவ்வாறான நிலையிலும் 2009 இல் கிரேக்கத்தில் தேர்தல்கள் இடம்பெற்றிருந்தன. நிலையான பொருளாதார வளர்ச்சியுடன் 1981 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த கிரேக்கம் சுற்றுலாத்துறை, கைத்தொழில் துறைகளில் பாரிய வளர்ச்சியும் அதிக வருமானத்தையும் கொண்டிருந்த நிலையில் சேவைத்துறையினரின் துரித வளர்ச்சி காரணமாக நாட்டின் வாழ்க்கைத் தரம் எதிர்பாராத வகையில் உயர்வடைந்த நிலையில் 2001 இல் கிரேக்கம் யூரோவை தமது நாணயமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தது.

 அதன் பின்னரான 7 வருட காலப்பகுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம் 12,400 அமெரிக்க டொலரிலிருந்து மும்மடங்காக அதிகரித்து 2008 இல் 31,700 அமெரிக்க டொலரை எட்டியது.

இந்த துரித வளர்ச்சியை அன்றைய நிலையில் பாராட்டிய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளிட்ட பிராந்திய கட்டமைப்புகள் இன்று கிரேக்கத்தின் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைக்கின்றன.

20072008 காலப்பகுதியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கிரேக்கத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 20 வீதத்தால் (2010 இல்) வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.

அதன் காரணமாக கடன்களை மீளச் செலுத்துவதற்கான அரசின் செயற்றிறனில் பாதிப்புக்கள் ஏற்பட ஆரம்பித்தன.

இவ்வாறான நிலையில் பொருளாதார நெருக்கடியினைத் தவிர்ப்பதற்கான சரியான நடவடிக்கைகளை கிரேக்க அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியமையே இன்றைய ஒட்டுமொத்த நெருக்கடிக்கும் முக்கிய காரணமாக அமைகின்றது.

பிரச்சினைகளுக்கான சரியான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேசமயம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை  அதிகரிப்பதற்கான நடவடிக்கையினையும் அன்றைய அரசாங்கம் (பிரதமர் கொஸ்டாஸ்கரமா தலைமையிலான அரசு) மேற்கொண்டிருக்கவேண்டும்.

2008 ஆம் ஆண்டின் பின்னரான 7 வருட காலப்பகுதியில் 7 தடவைகள் அங்கு ஆட்சி மாற்றமும் இடம்பெற்று, 6 பிரதமர்கள் அரசுக்குத் தலைமை தாங்கியமையும் சரியானதொரு மறுசீரமைப்பு திட்டத்தினை முன்வைப்பதற்கு தவறியதற்கான ஒரு காரணியாக இருக்கலாம்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கிரேக்கம் சம நெருக்கடியினையே எதிர்கொண்டிருந்தது. ஆனாலும் அதிலிருந்து மீள்வதற்கான சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே தவறியது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கிரேக்கம் கையிலெடுத்த ஆயுதமாக சிக்கன நடவடிக்கைகள் காணப்பட்டன. 

2010 பெப்ரவரியில் முதலாவது சிக்கன நடவடிக்கை கிரேக்க பாராளுமன்றினால் அறிவிக்கப்பட்டது.தொடர்ச்சியாக மேலும் இரண்டு சிக்கன நடவடிக்கைத் திட்டங்கள் அதே ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் அரச ஊழியர்களின் சம்பளக் குறைப்பு, மேலதிக கடமைநேர கொடுப்பனவு குறைப்பு, வரி அதிகரிப்பு, செலவீனக் குறைப்பு உள்ளிட்ட திட்டங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. 


இவ்வாறான திட்டங்கள் பொதுமக்களின் எதிர்ப்புக்குள்ளாகியிருந்தும் அரச ஆதரவு குழுவினர் இத்திட்டங்களை ஆதரித்திருந்தனர்.

இருந்தபோதும் இவ்வாறான திட்டங்கள் மூலமும் கிரேக்கம் எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகள் வெற்றிகொள்ளப்பட்டிருக்காத நிலையில் சர்வதேச கடனுதவிக்கான சிந்தனைகள் முளைவிட ஆரம்பித்திருந்தன.

இது தொடர்பான வாதங்களின் பலனாக 110 பில்லியன் யூரோ நிதியினை முதலாவது மீட்பு நிதி திட்டமாகப் பெறுவதற்கு கிரேக்கம் தீர்மானித்த நிலையில் அதற்கு யூரோ வலய நாடுகளும் இணங்கியிருந்தன.

 இக்கடனை மூன்று வருடகாலத்தில் திருப்பி வழங்கவேண்டுமென்று அவகாசமும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் காரணமாக பொருளாதார நிலை மேலும் மோசமடைந்தது. இவ்வாறான நிலையில் பொதுமக்களின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்களின் ஆலோசனையுடன் முன்வைக்கப்பட்டது. 

இதன் பின்னரும் மேலும் இரு சிக்கன பொதிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது மீட்பு நிதிப் பொதி தீர்மானிக்கப்பட்டு 2016 ஐ மீளச் செலுத்தும் அவகாசமாக கொண்டு 246 பில்லியன் யூரோவை சர்வதேச நாணய நிதியமும் யூரோ வலய நாடுகளும் வழங்கின.

இவ்வாறான நிலையிலும் பல்வேறு மறுசீரமைப்பு திட்டத்துடன் கிரேக்கம் தமது பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தும் சரியான முறையில் அவை அமுல்படுத்தப்படாததுடன் எதிர்பார்த்த பெறுபேறுகளும் கிடைக்கப்பெறவில்லை.

இதன் காரணமாக 2015 இல் செலுத்தவேண்டிய கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இக்கடனை எவ்வாறு செலுத்துவதென்பது தொடர்பாக பரவலாக ஆலோசிக்கப்பட்ட நிலையில் யூரோ குழுமத்துடன் 4 மாதத்திற்கு கடன் நீடிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் தவணைக் கொடுப்பனவை ஜூலை 4 ஆம் திகதி 2015 இல் செலுத்தவேண்டுமென இணக்கம் காணப்பட்டும் கிரேக்கத்தினால் அந்த தொகையினை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

உலகளாவிய ரீதியில் இவ்விவகாரம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. கடன் வழங்கிய சர்வதேச நாணய நிதியமும் யூரோ குழுமமும் இக்கடனை எவ்வாறு மீளப்பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக பல கோணங்களிலும் யோசித்திருந்தன.

கிரேக்கத்திடமிருந்து கடனை மீளப்பெறத் தவறினால் அல்லது கடன் தவணையை மீண்டும் நீடித்தால் கடன்பெற்ற ஏனைய நாடுகளும் இந்த நிலையினை எதிர்பார்க்கலாம் என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடனான மீட்பு நிதித் திட்டம் ஒன்றை சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்வைத்தன. 

கிரேக்கத்தின் நிதி முறைமைக்கான திரவத் தன்மையினைப் பெறுதல், பொருளாதார வளர்ச்சிக்கான திடமான திட்டம், குறைந்தளவான தாக்கங்களுடனான நம்பத்தகுந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள், கடனை மீள வடிவமைத்தல், ஓய்வூதிய வயதெல்லை குறைப்பு உள்ளிட்ட நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பாகவே கிரேக்க அரசுக்கும் மக்களுக்கும் மத்தியில் பாரிய குழப்பங்களும் இரு நிலையான உணர்வுகளும் ஏற்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் இந்த நிபந்தனைகளை நிராகரிக்குமாறு மக்களை கோரியிருந்த அதேவேளை எதிரணியினர் இதனை நிராகரித்தால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்திருந்தன.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், யூரோ வலயம் போன்ற வலயங்களிலிருந்து கிரேக்கம் வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகுமென எதிரணியினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

கிரேக்கத்தின் கடன் நெருக்கடியினைத் தீர்ப்பதனைக் காட்டிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது மிக மோசமான எதிர்மறை விளைவுகளை தோற்றுவிக்கும்.

இதனைக் கருதில்கொள்ளவேண்டியதுதான் மக்களின் முதலாவது பணியாக இருந்திருக்கும். பிராந்தியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதானது ஒரு நாட்டிற்கு அதிகளவில் பாதகமான விளைவுகளையே கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கம் வெளியேறினால் எதிர்காலத்தில் கிரேக்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எந்தத் தரப்பினர் உதவ முன்வருவார்கள்?

ஒரு குடும்பத்திற்குள் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் அவை அந்த உயர்மட்டத்தில் தீர்க்கப்படுமானால் அது ஒரு வெற்றியாகவே கருதப்படும்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கம் வெளியேறுவதற்கு குடும்ப உறுப்பினர்களாகிய நாம் அனுமதிக்கப்போவதில்லையென ஜேர்மனி கூறியுள்ளது.

ஜேர்மனியைத் தவிர்ந்த நாடுகளும் கிரேக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டினை வெளிக்காட்டியிருக்கவில்லை. ஆனாலும் உண்மையில் ஜேர்மனி, கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடும்பத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது என்பது தொடர்பாக தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. 

சில தடவைகளில் கிரேக்கம் வெளியேற வேண்டுமென்ற உறுதியில் காணப்படும் அதேவேளை, வேறு சில சந்தர்ப்பங்களில் கிரேக்கத்துக்கு ஆதரவான நிலையினை கொண்டுள்ளது. நிபந்தனைகளை நிராகரிக்க விரும்பும் சிப்ராஸ் அரசு, சர்வஜன வாக்கெடுப்பினை நடத்தாமல் நிராகரிப்பினை அறிவித்திருக்கலாம். தற்பொழுது மக்கள் மத்தியில் பழியைச் சுமத்தி இலகுவாக தப்பித்துக்கொண்டுள்ளது அரசாங்கம்.

இந்நிலையில் கிரேக்கம் மீட்பு நிதி தொடர்பான புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் காலக்கெடு விதித்துள்ளது.இதற்கு பதிலளித்திருக்கும் கிரேக்க பிரதமர், ஐரோப்பிய ஒன்றியம் சீர்குலைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லையென கூறியுள்ளார்.

இந்நிலையில் உலகின் ஒரு கோடியில் என்ன நடக்கின்றதென்பதனை உற்றுநோக்கும் ஏனைய நாடுகளின் பார்வைகள் மட்டுமே தொடர்ந்தும் விழித்துக்கொண்டுள்ளன. அடுத்து என்ன நடக்கப்போகின்றதென்ற அங்கலாய்ப்புடன் உலக நாடுகள் கிரேக்கத்தை நோக்கியவாறு திகைப்பில் உள்ளன.

இந்த எதிர்பார்ப்புகளிலான விடையின் ஒரு பகுதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வியன்னாவில் இடம்பெறும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மாநாட்டில் கிடைக்குமென நம்பப்படுகின்றது.

அரசியல் இலாபங்களுக்காக நாட்டின் நிதி நிலைமை தொடர்பாக அக்கறைகொள்ளாது மக்களைத் திருப்திப்படுத்த சலுகைகளையும் மானியங்களையும் கிரேக்க அரசு வாரி வழங்கியதன் விளைவுதான் கிரேக்கம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கும் அவலம்.

அதேவேளை கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மீள்வதும் கடன் தொகையினை மீளச் செலுத்துவதும் மிகவும் கடினமென்பது யதார்த்த உண்மை.

இதேவேளை கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் பல சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் சீர்குலைந்துவிடும் என்ற அச்சமும் உறுப்பு நாடுகளுக்கு உள்ளது.

இதேவேளை மற்றொரு புறம் ஈரானின் அணு உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கான காலக்கெடுவும் முடிவடைந்துள்ளது. ஆனால் இந்த விடயத்தைக் கவனிப்பார் குறைவாகவே உள்ளது.உலக அரசியல் அரங்கில் கிரேக்கம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் ஏனைய விடயங்கள் வெறுமனே தேடுவாரற்ற பிரச்சினையாகியுள்ளன.


எவ்வாறான சந்தர்ப்பத்திலும் கிரேக்கத்தின் உறுப்புரிமையை ஐரோப்பிய ஒன்றியத்தில் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்பதே அந்நாட்டு மக்களின் விருப்பமாகும்.
நன்றி  புதிய பண்பாடு