ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

தாக்கித் தகர்ப்பு

வெற்றிகரமாகத் தாக்கித் தகர்ப்பு

கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோளை அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தாக்கியுள்ள அதேவேளை அதிலிருக்கும் ஹைரொட்சின் தாங்கியையும் பூமிக்கு வந்து தாக்குவதைத் தடுக்கும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.



கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்த இச்செயற்கைக்கோளில் நச்சுவாயு இருப்பதால் பெரும் சேதங்கள் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏவுகணை கொண்டு தாக்கியழிக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ஹவாயின் மேற்குப் பகுதியிலுள்ள பசுபிக் கடற்பிராந்தியத்திலிருந்து யு.எஸ்.எஸ். எரிக் என்ற அமெரிக்க போர்க் கப்பலின் மூலம் எஸ்.எம்.-3 என்ற ஏவுகணை நேற்று இ.எஸ்.ரி. நேரப்படி 10.25க்கு ஏவப்பட்டது.

ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இவ் ஏவுகணையானது 133 கடல்மைல் (277 கி.மீ.) தொலைவிலுள்ள செயற்கைக்கோளை பத்து செக்கனில் சென்று தாக்கியழித்துள்ளது.

இச்செயற்கைக் கோளானது பூமியின் மேற்பரப்புக்குள் நுழைவதற்கு முன்னர் கோள்களின் இறுதிச் சுற்றுவட்டப் பாதையில் வைத்து தாக்கியழிக்கப்பட்டிருப்பதாக தரை வான் கடல் மற்றும் விண்வெளியைத் தளமாகக் கொண்டியங்கும் தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், அச்செயற்கைக் கோளின் ஒரு பகுதியான ஹைரொட்சின் தாங்கியானது முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதா என்பது இன்னும் 24 மணித்தியாலங்களில்தான் உறுதிப்படுத்தப்படுமென பென்டகனால் இவ் விடயம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் சிதைவுற்ற பாகங்கள் பூமிக்குள் நுழைய ஆரம்பித்துள்ளதுடன் முற்றாக எரிந்துள்ள பகுதிகள் இன்னும் ஓரிரு நாட்களில் பூமியை வந்தடைந்தாலும் ஏனைய உதிரிகளும் முற்றுமுழுதாக வந்துசேர குறைந்தது நாற்பது நாட்கள் வரையாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 டிசம்பர் 14 ஆம் திகதி தேசிய உளவு மையத்தால் ஏவப்பட்ட இச்செயற்கைக்கோள் 2,300 கிலோ நிறையுடையது.

இச்செயற்கைக்கோள் ஹைரொட்சின் வாயுவைத் தாங்கி வருவதால் இது பூமியில் விழுந்து பாரிய உயிர்ச்சேதங்களை தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா இவ்விடயம் தொடர்பில் கவனயீனமாகச் செயற்படுவதாகவும் அமெரிக்கா வெற்றிகரமாகத் தாக்கத் தவறும் பட்சத்தில் தமது படைகள் தாக்கியழிக்கும் எனத் தெரிவித்திருந்தது.

இதேவேளை, அமெரிக்காவின் ஏவுகணை இதனை தாக்கிய பின்னர் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்;

செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவுகணை கொண்டு அமெரிக்கா தாக்கியழித்தாலும் இது ஒரு புதிய விண்வெளி ஆயுதத்தின் பரிசோதனையாகவே இது அமைந்துள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இவ் ஏவுகணையானது மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே முற்றுமுழுதாக ஏவப்பட்டுள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது.