ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

இந்து மதத்தில் பாலியல் அம்சங்கள் “தி ஹிண்டுஸ்’ மூடப்பட்ட புத்தகம்.


 "குந்தி சூரியன் உறவில் கர்ணன்பிறந்தது தவறான உறவுமுறைஎன்றால் மரியாள் இறைவன்உறவில் யேசுநாதரின்பிறப்பு?..."

ஒரு குழந்தையை பிரசவத்தின் பின்னர் கொன்று விடுமாறு உத்தரவிடுவதற்கு சமமானதே ஒரு படைப்பிலக்கியத்தினையோ அல்லது வேறெந்த வெளியீடுகளையோ முடக்குமாறு உத்தரவிடுவதாகும்.
ஒரு குழந்தையினை பிரசவிப்பதற்கு,  கருத்தரிப்பின் பின்னர் ஆகக் கூடியது 10 மாதங்கள் போதுமானதாகும். ஆனால், ஒரு நூலையோ அல்லது திரைப்படத்தினையோ வெளியிடுவதற்குரிய காலத்தேவை, சில சந்தர்ப்பங்களில் தசாப்தங்களாகக் கூட இருக்கலாம்.
இவ்வாறான நீண்ட காத்திருப்புடன் உருவாக்கப்படும் படைப்புக்கள் சிதறாமலும் முடக்கப்படாமலும் இருக்கக் கூடியவாறு பொறுப்புணர்வுடன் உருவாக்கவேண்டியதும் படைப்பாளர்களின் கடமை. கர்ப்ப காலத்தில் சிசுவின் மீது நாம் கொள்ளும் அக்கறை போலவே படைப்புக்கள் மீதும் அக்கறை கொள்ளவேண்டும்.
இந்த அடிப்படையில் தற்பொழுது சர்ச்சைக்குள் சிக்கியிருக்கும் நூல் அமெரிக்க எழுத்தாளர் பென்டி டொனிகரால் எழுதப்பெற்ற ஹிண்டுஸ்; அன் ஆல்டநேற்றிவ் ஹிஸ்ட்ரி இந்துக்கள்; ஒரு மாற்று வரலாற்று (The Hindus : An Alternative History) என்ற ஆங்கில நூலாகும்.
நூல் இந்தியாவில் வெளியிடப்பட்டு 5 வருடங்கள் கழிந்திருக்கும் நிலையில் அதன் சகல பிரதிகளையும் அழித்துவிடுவதற்கு அதன் பதிப்பகத்தாரான பென்ங்குயின் நிறுவனம் புதுடில்லி நீதிமன்றில் கடந்த செவ்வாய்க் கிழமை இணங்கியுள்ளது.
இந்த இணக்கப்பாடே இந்நூலை வாசிப்பதற்கும் அதனை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குமான எண்ணத்தை தோற்றுவித்துள்ளது. அத்துடன் இதன்மூலமே இவ்வாறானதொரு நூல் எழுதப்பட்டது அதன் சரத்துக்கள் என்ன என்பவை உள்ளிட்டவற்றை நான்  உட்பட பலர் அறியமுடிந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லி நீதிமன்றம் ஒன்றில் இந்த நூல் தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டதன் விளைவினை இணையத் தளங்களிலும் சமூக வலையமைப்புக்களிலும் வெகுவாக காண முடிந்தது.
 வெளியீட்டுக்கு முன்னரான நேர்மறை விமர்சன பிரசாரத்தினை கையாண்டு வெற்றி கொள்ளும் யுக்தியினை குறிப்பாக தமிழ் சினிமாவில் நாம் கண்டிருக்கின்றோம். போய்ஸ், விஸ்வரூபம் போன்ற திரைப்படங்கள் இவ்வாறான பல்வேறு சர்ச்சைகளின் அடிப்படையில் உதித்தவை.
ஒரு விடயத்தினது உண்மைத் தன்மையினை ஆராயாது அந்த விடயத்தையோ அல்லது ஒரு வெளியீட்டினையே தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையினை கிடுக்குப்பிடியாக கொண்டு அவற்றிற்கு எதிர்ப்பினை முன்வைப்பவர்கள் அவற்றிற்கு அதீத விளம்பரத்தினை முன்வைக்கின்றனர்.
புதுடில்லி நீதிமன்றில் பென்குயின் பதிப்பகத்தினால் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதென கூறினால் இவர்கள் யாரால் எதிர்க்கப்பட்டார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இந்த நூலினை முடக்கவேண்டுமென எதிர்த்தவர்கள் இந்துப் புலமையாளர்களை கொண்ட ஒரு குழுவான சிக்ஷா பச்சோ அன்டொலன் கொமிட்டி.

வெண்டி டொனிகர் இந்து தத்துவத்தினை தவறாக பிரதி நிதித்துவப்படுத்துவதாகவும் நூலின் சில பகுதிகளில் உண்மைக்கு புறம்பான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும்  முறைப்பாட்டாளர்களான சிக்ஷா பச்சோ அன்டொலன் குழு கூறியுள்ளது.
அத்துடன்,  இந்த எழுத்தாளர் இந்துமதம் மீது குறிப்பிட்ட ஒரு தெரிவு அணுகு முறையினை கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
74 வயதுடைய வென்டி டொனிகர் மத வரலாற்றுப் பேராசிரியராக சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். இந்து மதம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பால்; பாலியல் மற்றும் அடையாளம் என்பவற்றினூடு இந்துமதத்தின் மீதான தனது நோக்கினை பல்வேறு நூல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இப்புலமையாளரான எழுத்தாளரால் எழுதப்பட்டு இந்தியாவின் பென்ங்குயின் நிறுவனம் இணைந்து வெளியிட்ட நூலே திஹிண்டுஸ் ; அன் ஆல்டநேட்டிவ் வரலாறு என்பதாகும்.
2009 ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. ஹிண்டுஸ் என்ற இந்நூல் வெளியிடப்பட்ட சிறிது காலத்திலேயே இந்நூல் தொடர்பான சாதகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. லைப்ரரி ஜேர்ணல் ரைம்ஸ் லிட்டெரரி,  நியூயோர்க் ரிவியூ, நியூயோர்க் ரைம்ஸ் மற்றும் ஹிந்து ஆகியன இந்நூல் தொடர்பான சாதகமான விமர்சனங்களை முன்வைத்திருந்த அதேவேளை,  2009 இல் இந்தியாவில் ஆகக் கூடுதல் விற்பனையினை சந்தித்திருந்ததும் இந்நூலாகும்.
இவ்வாறான சாதகத்தன்மைகள் கொண்டிருந்ததி ஹிண்டுஸ்நூலுக்கு இந்துமதம் தொடர்பான சில கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத குழுவினர் எதிர்ப்பலைகளை வெளிப்படுத்தினர். அதன் விளைவு சிக்ஷா பச்சோ அன்டலன் குழுவினர் நீதிமன்றம் வரை இந்த நூலுக்கு எதிரான மனுவுடன் சென்றிருந்தனர்.
அந்த மனுவில் இந்து மதத்திற்கு அபகீர்த்தி ஏற்டுத்தும் விடயங்கள்,  இந்து மதத்துடன் எழுத்தாளர் முரண்படும் நிலை, இந்து மதம் குறித்த பொய்களை அவர்கள் பட்டியலிட்டிருந்தனர்.
இந்து மதத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அதன் தத்துவங்களை ஏளனம் செய்திருப்பதாகவும், பாலியல் மற்றும் காமம் போன்ற விடயங்கள் அதிகப் பிரசங்கத்தனமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50 சரத்துக்களை கொண்ட மனுவில் மனுதாரரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நோக்குவோம்.
நூலின் அட்டையில் நிர்வாணமான பெண்கள் மத்தியில் உள்ள ஒரு நிர்வாணப் பெண்ணின் பிட்டப் பகுதியில் கிருஷ்ண பரமாத்மா அமர்ந்திருப்பதனை போன்று ஒவியம் வரையப்பட்டுள்ளது.
கிருஷ்ணனை இவ்வாறான இழிவான தோற்றத்தில் காண்பிக்க முயன்றமை இந்து மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
"காமப்பசி கொண்ட ஒரு பெண்ணின்இந்துமதம் மீதான நோக்கு" - இந்து ஆர்வலர்
அத்துடன், இந்து உருவங்களை பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் இருப்பதாக வெண்டி வேரில்கள் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு இடங்களில் இந்து மதத்தின் தத்துவங்களை பாலியல் உணர்வுடன் ஊடுருவி நோக்கிய எழுத்தாளர் காமப் பசி கொண்ட ஒரு பெண்ணாக இந்து மதத்தை அணுகியுள்ளாரென புதுடில்லி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த மனுவில் குறித்த மனுதாரர் கூறியுள்ளனர்.
இந்து மதத்தில் லிங்கமானது சிவனின் குறியீட்டு வடிவமாக வணங்கப்படுகிறதே தவிர அதில் எதுவிதமான பாலியல் அம்சங்களும் கலந்திருக்கவில்லை. ஆனால் நூலாசிரியர் லிங்கத்தை ஆணுறுப்புக்கு ஒப்பிட்டுள்ளார். இந்துமதம் தொடர்பாக மிகவும் தாழ்ந்த அறிவையும் மூர்க்கத்தனத்தையும் நூலாசிரியர் கொண்டிருப்பதாக மனுதாரர் கூறியுள்ளனர்.
இந்துக்கள் தமக்குரிய கோட்பாட்டு நூல்களை கொண்டிருக்கவில்லையென நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். ஆனால் வேதங்களை இந்துக்கள் தமது புனித நூலாக கொண்டுள்ளனர்.
கிறிஸ்தவம் தொடர்பான சகல நூல்களையும் நான் பைபிளுடன் ஒப்பிட முடியாது. அதேபோல் சகல சமஸ்கிருத நூல்களையும் வேதங்களுடன் ஒப்பிடமுடியாது. அதேபோல் இந்துகளின் இதிகாசங்களில் ஒன்றாகிய இராமாயணத்தை மனிதர்களால் உருவாக்கப்பட்ட நாவல் என நூலாசிரியர் கூறுகின்றார்.
நூலின் ஒரு கட்டத்தில் இந்துக் கடவுள்கள் சாதி அடிப்படையிலானவை எனக் கூறும் நாவலாசிரியர் இந்து கடவுள்கள் சாதியை அடிப்படையாகக் கொண்டவை அல்ல எனக் கூறுகின்றார். இந்த முரண்பாட்டு நிலைமை இவர் உண்மைக்கு புறம்பான ஒன்றினை கூற முற்படுகின்றதனை வெளிக்காட்டுகின்றது.
சிவனும் கிருஷ்ணாவும் மேல்சாதி இந்துத் தெய்வங்களென நூலாசிரியர் கூறுகின்றார். அவ்வாறெனில் யாதவ குலத்தில் கருமையான நிறத்துடன் பிறந்த கிருஷ்ணா எவ்வாறு உயர்ந்த சாதிக்குரிய தெய்வமாக முடியுமென மனுதாரர் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் குறைபாடுகளை முன்வைத்த இந்த எழுத்தாளர் குந்திதேவியாரையும் விட்டு வைக்கவில்லை. குந்தி சூரியனால் பாலியல் வல்லுறவாக்கப்பட்டாரென அவர் கூறுகின்றார்.
ஆனால் குந்திதேவியார் திருமணமாகாத நிலையில் இரகசியமான முறையில் மகனை பெற்றுள்ளார். குந்தி தனது இளவயதில் மந்திரம் ஒன்றை வெறுமனே உச்சரித்ததன் விளைவே கடவுள் சூரியன், குந்தியின் எதிர்ப்புக்கு மத்தியிலும் குந்தியுடன் உல்லாசம் கழித்துள்ளார். குந்தியுடனான உடலுறவின் பின்னர் குந்திக்கு கன்னித்தன்மையை மீண்டும் வழங்கிவிட்டு சென்றார் சூரியன். கர்ணன் பிறந்தான்என தனது நூலின் 295 ஆம் பக்கத்தில் நூலாசிரியர் கூறியுள்ளார்.
ஆனால், கிறிஸ்தவத்தில் கூட இறையருள் காரணமாகவே கன்னி மரியாளின் வயிற்றில் யேசுநாதர் பிறந்ததாக நம்பப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் மேரியை இறைவன் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார் என்று கூறமுடியுமா? இதனை இந்நூலாசிரியர் ஏற்றுக்கொள்வாரா?
பைபிளின் பிரகாரம் எலிசபெத், கருவுற இயலாதவர் என்று கூறப்படுகின்றார். முதிர்ந்த வயதில் அவர் ஒரு மகனை தனது வயிற்றில் சுமக்கின்றார். (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு,லூக் 1:7, 1:13)இதனை எலிசபெத் இறைவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவரென கூறலாமா? பரிசோதனைக் குழாய் குழந்தைகள் எதுவிதமான வல்லுறவுமின்றி பிறக்கின்றன என மனுதாரர் சுட்டிக் காட்டுகின்றார்.
இத்தருணத்தில் மரியைபெண்களுள் ஆசி பெற்றவர், உன் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதென  எலிசபெத் கூறுகின்றார்.அது அவ்வாறெனில் குந்திதேவியார் ஏன் ஆசிபெற்றவராக இருக்க முடியாது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
மனுதாரர்கள் இந்த நூலினை மிகவும் அழமாக வாசித்துத்தான் தமது நிலைப்பாடுகளை தெளிவாக முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, புலமையாளர்கள் பலர் பென்குயின் நிறுவனம் இணக்கப்பாடு எட்டியமைக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
உலகளவிலான மதங்களில் சகிப்புத் தன்மைக்கு பெயர்போன இந்துமதம் இதனை எதிர்த்திருப்பது துரதிஷ்டவசமானதென ஜூட் தயில் என்பவர் கூறியுள்ளார். கருத்து  சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் இந்தியாவில் இந்த நூலுக்கு தடை விதிக்கப்பட்டமை கவலைக்குரியதென நீதிமன்ற சட்டதரணி ஒருவர் கூறுகின்றார்.

"உங்களை அச்சுறுத்தியவிடயம் என்னநூலை ஏன் வாபஸ் பெறவேண்டும்" - அருந்ததி ரோய்
இதேவேளைஉங்களை அச்சுறுத்திய விடயம் என்னவென நீங்கள் எமக்கு கூறவேண்டுமெனமற்றொரு பிரபல எழுத்தாளர் அருந்ததி ரோய் பென்குயின் நிறுவனத்துக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் பென்குயின் நிறுவனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நூலை வாபஸ் பெற்றமையை அருந்ததி ரோய் மிகவும் கடுமையான வார்த்தைகளில் சாடியுள்ளார்.
இந்து தத்துவம் தொடர்பான நூல்களை சாதகமான பார்வையில் எழுதினால் மட்டும்தான் அவற்றை வெளியிட முடியுமா என்றும் அருந்ததி ரோய் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
இச்சர்ச்சை தொடர்பாக ஐரோப்பாவிலுள்ள சுயாதீன ஊடகவியலாளரான .சஜிதரன்; ஒரு படைப்பினை தமக்கு உடன்பட்டதாக அல்லது உவப்பற்றதாக இருக்கின்ற காரணத்தால் அதனை தடைசெய்ய வேண்டுமென கோருபவர்கள் அதற்குரிய அதீத விளம்பரத்தினை உருவாக்கி அதன் வெற்றிக்கு வழிவகுக்கின்றனர்.
இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு என்ற நூல் குறித்து தற்பொழுது எழுந்துள்ள சர்ச்சையானது அந்நூலினை வாசிக்கவேண்டுமென்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது. எல்லா மனித இனங்களையும் போல இந்துக்களின் வாழ்வியலிலும் நூல்களிலும் பாலியல் பேசப்பட்டுள்ளது என்பதனை எதிர்கொள்வதில் என்ன சிக்கல்? என பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்நிலைப்பாடு யதார்த்தமானதாக இருக்கலாம்.
ஆனால், மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய விடயங்களை கையாளும்போது படைப்பாளர்கள், அது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய விடயம் என்பதனை புரிந்துணரவேண்டும்.

"50 வருடங்களாக இந்துமதத்தை கற்றுவரும் நான்சில தவறான விடயங்களில மௌனம்சாதிக்க முடியாது"  - வென்டி டொனிகர்
இந்துமதம் தொடர்பான மிகவும் ஆழமான கருத்துக்களை நூலாசிரியர் அறிந்துள்ளார். பிற மதம் சார்ந்த ஒருவர் தனது புலமைக்காக இந்துமதம் சார்ந்த கருத்துக்களை அறிந்துள்ளார் என்பது பெருமைக்குரிய விடயம்.
இந்நூலினை வெளியிடும் வரை அவர் இந்துமதம் தொடர்பான பல்வேறு நூல்களை வாசித்து அதன்மூலம் கருத்துக்களை முன்வைத்திருக்கலாம்.
இந்துமதம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார் என்பதும் உண்மை. இந்துக்களில் சிலரைக் காட்டிலும் இந்துமதம் தொடர்பில்  அவர் ஆழமான அறிவினைக் கொண்டிருக்கின்றார்.
இப்பொழுது இந்தப் புத்தகம். பின்னர் இன்னும் பல வெளியாகலாம். இந்துமதம் தொடர்பாக 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்றுவரும் நான் சில கூழ் முட்டைகள் தொடர்பாக அமைதியாக இருக்கவேண்டிய தேவையில்லைஎன டொனிகர் தனது நிலைப்பாட்டினை பதிவு செய்கின்றார்.
இதேவேளை, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மற்றுமொரு நூல் சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் (The Satanic Versas).2012 இல் இந்த நூல் தொடர்பிலான சர்ச்சையால் இன்று தனது சொந்த நாட்டுக்கே திரும்ப முடியாத நிலையில் உள்ளார் சல்மான் ருஷ்டி.
இவ்வாறான சம்பவங்கள் மூலம் படைப்பாளர்கள் மக்களின் குறிப்பாக மதங்களின் உணர்வுகளை கையாளும்போது தமது படைப்புக்கள் முடக்கப்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.
இந்து மதத்தின் பாலியல் தொடர்பான கருத்துகளை பேசியதாக சிறியளவில் அறியப்பட்ட குழுவின் எதிர்ப்பே இந்த நூலின் தடைக்கு காரணம். ஆனால், இந்து மதத்தின் சிற்பக் கலையில் கவர்ச்சியான ஆண், பெண் உருவங்கள் இன்றும் வடிவமைக்கப்படுகின்றன.
ஆலயத்தின் கோபுரங்கள், தேர் போன்றவற்றிலும் மாமல்லபுர சிற்பங்களிலும் கவர்ச்சிக்கு எவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் அறிகின்றோம்.
அதேவேளை, இந்து மதம் சம்பந்தமான நூல்களிலும் இத்தகைய வடிவங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு அவை விமர்சிக்கப்படவில்லை.
இவ்வாறான விடயங்களில் கவர்ச்சி வடிவங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதனை இந்துமத ஆர்வலர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர்? ஏன் அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இந்த பத்தியை வாசிக்கும் நீங்கள் சிலவேளைகளில் இந்த நூலினை வாசிப்பதற்குரிய மனநிலையினையும் ஆர்வத்தினையும் கொண்டிருப்பீர்கள். ஆனால், அந்த நூலினை கடைகளில் இனி பெறமுடியாது. சில இணையத்தளங்களில் அதன் இபதிவுகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
நூல் வெளியிட்டு விற்பனை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதேசமயம், இந்நூலினை வைத்திருக்கும் ஒருவர் இனிமேல் அதனை இரகசியமாக வைத்திருக்கவே விரும்புவார்.
இந்நிலையில் தாராளவாத நாடொன்றில் ஒரு நூலுக்கு கிளம்பிய எதிர்ப்பு அந்த நூலை தடை செய்யும் தீர்ப்பில் நிறைவடைந்துள்ளது.
ஆனால், இந்துக்கள் வாழும் தாராளவாத நாடுகள் மடியும் நிலையில் இந்து சமயத்தின் இருப்புக்கும் அச்சுறுத்தல் காணப்படும் என்பது உலகின் பாரிய மதங்களில் ஒன்றான இந்து மதத்திற்கு அச்சுறுத்தலான செய்தி.

 நன்றி தினக்குரல்