ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் ஐ.நா வத்திக்கான் முரண்பாடும்


கத்தோலிக்க திருச்சபைகளில் இடம்பெறும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இன்னமும் முற்றுப்புள்ளி இடப்படவில்லை.

உலகளவில் பல்வேறு மதங்களினதும் உயர்ஸ்தானங்களில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழமையானதொன்றாக இருந்தாலும், கத்தோலிக்க திருச்சபைகளிலும் அதனோடிணைந்த நிறுவனங்களிலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அதிகமானவையாகவே காணப்படுகின்றன.

மதமும் அதன் தலைவர்களும் அம்மதத்தினை பின்பற்றும் சமூகத்தினரால் உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் மதத் தலைவர்கள் இவ்வாறான கீழ்மட்டமான செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.
மதத் தலைவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையில் மக்கள் அல்லது மதப்பற்றாளர்கள் வைத்திருக்கும் நிலையில் அவர்கள் தமது புனிதத் தன்மையினை  இழக்காது காக்கவேண்டிய பொறுப்பினை உடையவர்கள்.
சிறுவர்கள் மிதான பாலியல் துஷ்பிரயோகமானது 1970இற்கு முன்னர் வெளிப்படையாக பேசப்பட்டமை மிகவும் அரிதானதாகும்.

ஆனால் 1980களில் முதற்தடவையாக கனடாவிலும் அமெரிக்காவிலும் பாதிரியார்களால் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

அமெரிக்க பாதிரியாரான ஜோன் ஜோகன் பாலியல் துன்புறுத்தல் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் சககைதி ஒருவரால் அவர் கொல்லப்பட்டார்.

கத்தோலிக்க திருச்சபைகள் மீது அதிகளவு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமைக்கு அதனுடனிணைந்துள்ள கட்டமைப்பு முறைமையினை காரணமாக கூறிக்கொள்ளலாம்.


பிறருக்கு நற்பணி செய்யும் நோக்கில் திருச்சபைகளால் உருவாக்கப்பட்ட தர்ம அமைப்புகள், உதாரணமாக சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், மடாலயங்கள் போன்றவற்றினை கூறிக்கொள்ளலாம்.

அதேவேளை, அருட் சகோதரர்களாகவோ அல்லது பாதிரியார்களாகவோ வரவிரும்பும் சிறுவர்கள் குடும்பங்களை பிரிந்து மதகுருமார்களுடன் தனிமையாகவும் மடாலயங்களிலும் வாழவேண்டிய நீண்டகால சூழல் காணப்படுகின்றது. 

இவ்வாறான சூழல் அமைப்புகள் பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வலுச்சேர்க்கும் சந்தர்ப்பங்களாகும். இவ்வாறான காரணிகளால் ஒரு சில பாதிரியார்கள் அல்லது மதகுருமார் இழைக்கும் தவறுகள் ஒட்டுமொத்த திருச்சபை குடும்பத்துக்கும் மறையாத களங்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால், இவ்வாறான தவறிழைக்கும் பாதிரியார்கள் மீது திருச்சபைகள் எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதிலேயே பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்றன.

அன்று முதல் இன்றுவரை பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது திருப்திகரமான முறையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. என்பது பாதிக்கப்பட்ட தரப்பினரின் வாதமாக உள்ளது.

இவ்வாறான சூழலில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடங்கள் ஏன் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

அல்லாதுவிடில், இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நிகழாதவாறு திருச்சபையின் கட்டமைப்பினை மாற்றும் நடவடிக்கைகளில் சரி அவர்கள் ஈடுபட்டிருக்கவேண்டும்.


பாதிரியார்களின் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மேற்குலக நாடுகளிலேயே அதிகளவில் முன்வைக்கப்பட்டன. கனடா, அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற மீறல்கள், துன்புறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்கள் அவற்றினை பகிரங்கப்படுத்தியிருந்தன.

ஊடகங்கள்  இந்த விவகாரத்தை கையாளும் முறைமை குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், வெறுமனே ஊடகங்களை குற்றஞ்சாட்டுவதில் எந்தவிதமான பலனும் இல்லை.
அதனைத் தவிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்குமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஏராளமான சிறுவர்களின் வாழ்க்கை பாதிரியார்களால் சீரழிக்கப்பட்டமை தொடர்பாக எதுவிதமான சந்தேகமும் இல்லை. இச்சம்பவங்கள் அண்மைக்காலம் வரை உயரிய நிறுவன அதிகாரிங்களால் மறைக்கப்பட்டே வந்துள்ளது.

1950 முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அமெரிக்காவில் 4 வீதமான பாதிரியார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருந்ததற்கான ஆதாரங்கள் ஆய்வொன்றின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் 27வீதமான பெண்களும் 16 வீதமான ஆண்களும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நீண்ட வரலாற்றினைக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் கடந்த வருடம் முதல் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையானது வத்திக்கான் மீதான தனது கிடுக்கிப் பிடியினை மேலும் இறுக்கமாக்கியது.

50 வருட காலப் பகுதியில் கிட்டதட்ட 3000 பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக வத்திக்கான் விளங்கிக்கொண்டிருந்தது.

அதேவேளை, பல்லாயிரக்கணக்கான சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் மதகுருமார்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் வத்திக்கான் திட்டமிட்டு கொள்கைகளை உருவாக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் குற்றஞ் சாட்டியுள்ளது.

திருச்சபையின் அதிஉயர் பீடத்தின் மீது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சர்வதேச நிறுவனமான ஐ.நா. குற்றச்சாட்டினை முன்வைத்திருப்பது வத்திக்கானைப் பொறுத்த வரையில் பாரிய சவால் நிறைந்த செயலாக கருதப்பட்டது.

ஆனால், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முகம் கொடுக்கவேண்டியது திருச்சபையின் நம்பகத்தன்மைக்கும் பொறுப்புக் கூறும் செயற்பாட்டுக்கும் மிகவும் முக்கியமானதென பாப்பரசர் பிரான்சிஸ் கூறியிருந்தார்.

இதுவே திருச்சபை மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கான நீதியின் ஒளிக்கீற்றாக தென்பட்டது.

பாப்பரசர் பிரான்சிஸின் கூற்றின் பின்னர் இந்த விவகாரம் முக்கிய திருப்புமுனையினை கண்டிருந்தது.

கடந்த வருடம் இடம்பெற்ற தேர்வின் மூலம் பிரான்சிஸ் பாப்பரசரான பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஒளியை வீசும் வகையில் திருச்சபைகளில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் மறு அங்கமாக தனது பதவிக்காலத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகப் போராடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் வத்திக்கான் குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. நிபுணர் குழு விசாரணை முன் 2013  ஜனவரியில் முதற்தடவையாக ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் வத்திக்கான் தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்க மறுப்பு தெரிவித்திருந்தனர்.

அதற்குரிய  காரணத்தை அவர்கள் அன்றைய காலப்பகுதியில் முன்வைக்கவில்லை. ஆனால், உண்மையில் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதி நிலை நாட்டப்படுவதனை வத்திக்கான் விரும்புவதாக இருந்தால் வெளிப்படைத் தன்மையுடன் சகல தரவுகளையும் வத்திக்கான் சமர்ப்பிக்கவேண்டும்.

இதனை விடுத்து, நிராகரிப்பு நிலைப்பாட்டினை கொண்டிருப்பதும் தரவுகளை மறைப்பதும் வத்திக்கான் மீதான ஐயுறவினை அதிகரிப்பதுடன்,  அதன் நம்பகத்தன்மைக்கும் அது களங்கமாக அமையும்.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை ஒடுக்குவதாக 16 ஆம் பெனடிக்ற் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. அவர் அதனை நிராகரித்திருந்தார்.

ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் அதனை ஆராயவேண்டும். அதன் பின்னரே அதற்கு பொறுப்பானவர்கள் பதில் கூறிக்கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறையாகும்.

ஒரு தவறு இடம்பெற்றால் அதனை சரியானதென நியாயப்படுத்தாது,  தவறினை தவறென ஏற்றுக்கொள்ளும் பக்குவமே உயரிய மனித பண்பாகும்.
இப்பண்பினை உயர் அந்தஸ்துக்களில் உள்ளவர்கள் உள்வாங்கிக் கொள்ளவேண்டியது அவசியமானது.

65 அமர்வுகளாக வத்திக்கானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட ஐ.நா. அமர்வு தனது அவதானிப்புக்களை அண்மையில் வெளியிட்டுள்ளது.

அதில் மதகுருமார்களின் பாலியல் துஷ்பிரயோகத்தினை தடுப்பதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள அனைத்து பாதிரியார்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

அதற்கும் மேலதிகமாக கடந்த டிசம்பரில் பாப்பரசர் பிரான்சிஸால் உருவாக்கப்பட்ட வத்திக்கான் ஆணைக்குழுவானது சகல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஐ.நா. கூறியுள்ளது.

பல தரப்பட்ட நிறுவனங்களின் ஆதரவுடன் இந்த விசாரணையினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையானது இவ்விவகாரத்தில் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டினையே கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட ஒருவருட காலப்பகுதிக்குள் வத்திக்கான் இந்த அமர்வின் முன் தனது கருத்துக்களை முன்வைத்தது.

பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை விசாரணைக்கு உட்படுத்தியே ஐ.நா. அமர்வானது தனது அவதானிப்புக்களை வெளியிட்டுள்ளது.
எந்தவொரு தாக்கத்திற்கும் சமமான பிரதிபலிப்பு என்ற அடிப்படையில், சிறந்த நிர்வாக கட்டமைப்பினை கொண்டுள்ள வத்திக்கான் உடனடியாக மறுப்பறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அதில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவின் அறிக்கையின் சில அவதானிப்புகளை ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கும் வத்திக்கான், கத்தோலிக்க திருச்சபையின் மத சுதந்திரம் மற்றும் போதனை விவகாரங்களில் ஐ.நா. தலையிடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
வத்திக்கானின் இந்த கூற்றானது ஐ.நா.வினை முரண்பாட்டுக்கு இழுக்கும் வலிந்து கட்டிய கருத்தாகவே கருதமுடியும்.

வத்திக்கான் பாதிரியார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளகின்றதா இல்லையா என்பதும் அல்லது எதிர்காலத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவான ஒரு நிலைப்பாட்டினை வெளிக்காட்டவில்லை.

இது இவ்வாறிருக்க இந்த விவகாரத்தில் உண்மையில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பவர்கள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தரப்பினர்,
இவர்கள் வத்திக்கானின் எந்தவொரு நகர்விலும் சந்தேகம் கொண்டுள்ளார்கள். கிறிஸ்தவ மதத்தின் உயர் பீடமான வத்திக்கான் மீது அவர்கள் ஏன் சந்தேகம் கொள்ளவேண்டும்?

வத்திக்கான் மீதான அவநம்பிக்கையே இதற்கு காரணமாகும்.
ஐ.நா. அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானமை தொடர்பாக பாதிரியார்களின் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் வலையமைப்பின் தலைவரான பாப்பரா பிளைன் தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.

“சிறுவர்களின் பாதுகாப்பிற்கும் மேலாக பாதிரியார்களின் நற்கீர்த்திக்கு வத்திக்கான் முக்கியத்துவம் கொடுப்பதாக’ அவர் மிகவும் தெளிவாக கூறியுள்ளார். அதுவே உண்மையான நிலைப்பாடும் ஆகும்.

பாப்பரசர் பிரான்சிஸ் மற்றும் ஏனைய வத்திக்கான் அதிகாரிகளின் வாக்குவன்மைக்கு மத்தியில் அவர்கள் (வத்திக்கான் சமூகம்) பாலியல் துன்புறுத்தல்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். என்றும் பப்பராசர் கூறியுள்ளார்.

121 கோடி சனத்தொகையினைக் கொண்டிருக்கும் உலக கத்தோலிக்க சமூகத்தின் தலைமைப் பீடமான வத்திக்கானுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தினை நீக்குவதற்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமே இது.இந்த அரிய சந்தர்ப்பத்தினை வத்திக்கான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதேவேளை, நடைபெற்று முடிந்த குற்றச் செயல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பதிலும் பார்க்க இதுபோன்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து இடம்பெறாமலிருப்பதற்கு ஐ.நா.வும் வத்திக்கானும் இணைந்து காத்திரமானதும் ஸ்திரமானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமானதாகும்.

Courtesy Thinakkural