ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

மைத்திரி-மகிந்தவை அதிரவைத்த ‘உத்தரவு’


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா புதிய பிரதமராக மஹிந்த ராஜ பக்ஷவை நியமித்து ஆரம்பித்து வைத்த அக்டோபர்26 ஆட்சி மாற்றத்தின் பின்னர் மூன்று வாரங்கள் கடந்திருக்கும் நிலையிலும் அந்த ஆட்சியானது நிலைபேறான ஒரு அங்கீகாரத்தை உள்ளூரிலும் சரி சர்வதேச ரீதியாகவும் சரி பெற்றுக்கொள்வதற்கு தவறியுள்ளது.

அக்டோபர் 26 இரவில் இலங்கை அரசியலில் பலவந்தமாகவும் தன்னிச்சையாகவும் மைத்திரிபால சிறிசேனாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றமானது நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதங்கள் நடைபெற வேண்டிய இந்த கால கட்டத்தில் பாராளுமன்றத்தை மூடுவதும் திறப்பதுமாக அரசின் சித்து விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.

கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர் கூட்டணி அரசாங்கத்துடனான பிணைப்பினை முறித்துக்கொண்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதேச்சதிகாரமாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருந்தார்.

இந்த நகர்வினை சற்றிலும் எதிர்பாத்திருக்காத பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானே நாட்டின் சட்ட ரீதியான பிரதமர் என்று கூறி தொடர்ந்தும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து வருகிறார். முன்னர் அவருக்கான பாதுகாப்பினை மிகவும் குறைந்த மட்டத்தில் அரசாங்கம் வழங்கியிருந்தது ஆனால் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினரின் கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு நடவடிக்கைகள் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பரவலாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மேலும் தீவிரமடையச்செய்யும் வகையில் ஜனாதிபதியால் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் கடுமையான அழுத்தத்தின் காரணமாக அதற்கு முன்னதாக பாராளுமன்றை கூட்டுவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் இந்த விடயத்தில் குழப்பமான நிலைப்பாடுகளே காணப்பட்டிருந்தன. சரியான ஒரு திகதி இந்த விடயத்தில் அறிவிக்கப்பட்டிருகவில்லை.

சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதாகக் கூறினார். ஆனால் அதற்கு இடமளிக்கப்போவதில்லையென ஆளும் தரப்பு கடுமையான பிடிவாதத்துடன் காணப்பட்டது. இந்த முரண்பாடுகள் தீவிரமடையும் நிலையில் மைத்திரிபால சிறிசேனா தனது மற்றொரு ஆட்டத்தை காண்பித்திருந்தார். ஆம், ஏற்கனவே அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை தான் கலைப்பதாக நவம்பர் ஒன்பதாம் திகதி மற்றொரு வெள்ளிக்கிழமை இரவு திடீர் அறிவிப்பினை விடுத்திருந்தார்.

இந்த அறிவிப்பு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் சகல தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் மைத்திரி மஹிந்த தரப்பு மிகவும் கடுமையான எதிர்ப்பினை சம்பாதிப்பதற்கு ஏதுவான விடயமாக அது அமைந்து விட்டது.

ஏனென்றால் ஆளும் தரப்பினர் இந்த விடயத்தால் தமது புதிய அமைச்சு பதவிகளை விரைவில் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அத்துடன் இவர்களின் வாக்குறுதிகளை நம்பி ஐக்கிய தேசிய கட்சியின் வசமிருந்து மற்றைய பக்கம் தாவியவர்களுக்கு இரண்டும் கெட்ட நிலைஏற்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் அவர்கள் சார்ந்த ஏனைய கட்சிகளுக்கும் மக்களின் ஆதரவை மேலும் பெறுவதற்கான ஒரு காரணியாக அமைந்திருந்த அதேவேளை மஹிந்த மைத்திரி தரப்பினர் சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டதன் விளைவாகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்பது தான் யதார்த்தம் .

ஏனென்றால் பாராளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. ராஜபக்ஷ, சிறிசேனா கூட்டணிக்கு 104 உறுப்பினர்கள் மாத்திரமே அதுவரை கிடைத்துள்ளனர். மேலும் உறுப்பினர்களை தம் வசம் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடுமையான முயற்சிகளை ஆளும் தரப்பு மேற்கொண்டிருந்தும் அதனை பெறமுடியாததன் விளைவாக பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல்களை நடாத்துவதற்கான திகதியையும் அறிவித்து விடுகிறார் ஜனாதிபதி.

ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக திடீர் நகர்வுகளை மேற்கொன்ட ஜனாதிபதி இங்கு தவறிழைத்துவிடார். அவரது பாராளுமன்றைக் கலைக்கும் அறிவிப்பு அவர்களால் ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்கத்துக்கொள்ள முடியாது என்பதனை மிகவும் வெளிப்படையாகக் காண்பித்திருந்தது.

இங்கு ஆரம்பிக்கின்றது ஐக்கிய தேசிய கட்சியினரின் இராஜதந்திர நகர்வுகள். பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டமைக்கு எதிராக இதுவரையில் நீதிமன்றத்தை நாடியிருக்காத ஐக்கிய தேசிய கட்சி இந்த பாராளுமன்றம் கலைக்கப்படும் முடிவுக்கு எதிராக உயர் நீதி மன்றத்தை நாடுவதற்குத் தீர்மானித்திருந்தது.

அத்துடன் இந்த விடயத்தில் நம்மவர்களின், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் பின்னணியுடன் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனால் கூட்டமைப்பின் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோ , நிரான் அங்கிரெல் ஆகியோர் இணைந்திருந்தனர்.

இதேவேளை ஐக்கியதேசிய கட்சி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பனவால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவர்களுடன் முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ராஜன் கூல் உட்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்படிருந்தன.

அதேவேளை இந்த மனுக்களுக்கு எதிராக அரசுக்குஆதரவான தரப்பினரால் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆக பாராளுமன்றம் கலைப்பு விவகாரம் உயர் பீடமான நீதித்துறையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்கள், அரசியல்தரப்பினர் என சகலரும் உயர் நீதிமன்றின் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்ற விவாதம் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இடம்பெற்றிருந்தது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் அடங்கிய மூவரமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்திருந்தது. 12 ஆம் திகதி திங்கட் கிழமையே இந்த வழக்கினை விசாரணை செய்வதா இல்லையா என்ற முடிவு கிடைக்குமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் சட்டமா அதிபரின் சமர்ப்பணத்துக்கு நேரம் போதாமை காரணமாக மறு நாள் வரையில் விசாரணைகள் நீடிக்கப்பட்டது.

திங்கட்கிழமை இவ்விடயம் குறித்து ஒரு நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சகல தரப்பினருக்கும் இந்த நீடிப்பு ஒரு ஏமாற்றமாகவே இருந்தது. திங்கட்கிழமை அன்று உயர் நீதிமன்றம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது. ஏனென்றால் அன்றைய தினம் வழங்கப்படவிருக்கும் நீதிமன்ற அறிவிப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய விருக்கும் அதேவேளை நாட்டில் காணப்படும் அரசியல் ஸ்தம்பித நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் இந்த அறிவிப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்திருந்தது.

நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் உயர் நீதி மன்ற வளாகத்தில் கூடியிருந்தார்கள். இவர்களுள் பெருமளவில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் காணப்பட்டனர். குறிப்பாக இந்திய ஊடகங்கள் காணப்பட்டிருந்தன. அதேவேளை இரு தரப்பு ஆதரவாளர்களும் நீதி மன்ற வாளாகத்திலும் வெளிப்புறத்திலும் அதிகளவில் காணப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மிகவும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதே வேளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் உயர் நீதிமன்ற அறையில் கிட்டத்தட்ட 600 இற்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்கலாம் . இவர்களில் பெருமளவானவர்கள் சட்டத்தரணிகளாகவே காணப்பட்டனர். 

அத்துடன் கட்சி ஆதரவாளர்கள் சிலர், ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், வெளிநாட்டு தூதுவர்கள், அவதானிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் எனப் பலதரப்பினராலும் அந்த அறை நிரம்பியிருந்தது. அத்துடன் அங்கு போதிய ஆசனங்கள் காணப்படாதமையினால் 90 வீதமானவர்கள் நின்றவண்ணமே காணப்பட்டனர். மிகவும் நெரிசலாக அங்கு அனவரும் நிற்கவேண்டிய நிலை காணப்பட்டது. மேலிருந்து ஒரு சிறுபொருள் போடப்பட்டால் அது கீழே விழமுடியா நெருக்கம் காணப்பட்டது.

இவ்வாறான நெருக்கடிக்குள் ஒருவாறாக முதல் நாள் அமர்வு முடிவடைந்த நிலையில் அமர்வு அடுத்த நாள் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த்து. இந்த முடிவினை யாரும் எதிர்பார்த்திருக்காத நிலையில் பாரிய அதிர்ச்சியினைத் தருவதாக இது அமைந்துவிட்டது.

மறு நாள் நீதிமன்ற அமர்வுகள் ஆரம்பமானபோதும் மேலே குறிப்பிட்ட நெருக்கடியான நிலை மேலும் தீவிரமடைந்திருந்தது. ஆனால் வழமைக்கு மாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படிருந்தன. அதிகளவான பாதுகாப்பு தரப்பினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்கள் உயர் நீதிமன்றத்துக்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

 அத்துடன் இடவசதி போதாமை காரணமாக விசாரணைகள் இடம்பெற்ற மன்றின் உட்புறத்துக்கும் அதிகளவானவர்களை உள்வாங்கமுடியவில்லை. பெருமளவானவர்கள் வெளிப்புறங்களில் காணப்பட்டிருந்தனர். அரச மற்றும் எதிர் தரப்பு எம்பிக்கள் பிரசன்னமாகியிருந்தனர். சட்டத்தரணிகள் இவர்களுக்காக கடுமையான வாதங்களில் ஈடுபடும் நிலையில் இந்த இரு தரப்பு எம்பிக்களும் அருகருகில் இருந்தவர்களாகவும் ஒருசிலர் இருப்பதற்கு இடமற்றவர்களாக சகலபந்தாக்களையும் இழந்து நீதிமன்றில் சகலரும் சமம் என்பதனை நிரூபிக்கும் வகையில் நின்றுகொண்டும் இருந்தனர்.

இவ்வாறாக கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் விசாரணைகள் ஆரம்பமானதுடன் சட்டமா அதிபரின் சமர்ப்பணத்தை அடுத்து இடையீட்டு மனுதாரர்களின் சமர்ப்பணம் அதனை அடுத்து முறைப்பாட்டாளர்களின் தொகுப்புரை என அன்றைய அமர்வு நீண்டு சென்றது. 10 மணிக்கு ஆரம்பமான அமர்வில் 11.30 மணியளவில் 15 நிமிட ஒத்திவைப்பின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னர் அந்த அமர்வு 03.30 மணிவரை சென்றது. அந்த நிலையில் சகலரது சமர்ப்பணங்களும் நிறைவடைந்திருந்த நிலையில் நீதிமன்றின் அறிவிப்பு மாத்திரம் வெளியிட வேண்டிய தேவை காணப்பட்டது.

காலை 10.00 மணி முதல் மாலை 03.30 மணிவரை மிகவும் நெரிசல் மிக்க ஒரு இடமாக அந்த நீதிமன்றம் காணப்பட்டது. பின்னர் 05.00 மணிக்கு மன்று கூடுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 05.50 மணிக்கே மீண்டும் மன்று கூடியது. இந்த நிலையில் நீதிமன்றம் , இந்த வழக்கினை விசாரணை செய்வதற்கு தீர்மானித்ததுடன் பாராளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் 7 ஆம் திகதி வரை இடைநிறுத்தியும் உத்தரவினை பிறப்பித்திருந்தது. அத்துடன் 5 க்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய முழுமையான அமர்வொன்றில் இந்த வழக்கினை விசாரணை செய்யவேண்டுமென மற்றொருமனு நீதிமன்றில் அரசஆதரவு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தரப்பினரின் வாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறி பாராளுமன்றை கலைத்திருப்பதாகவும் 19 ஆவது திருத்தத்தின் பின்னர் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாராளுமன்றத்தினை அவரால் கலைக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டதுடன் அரசியலமைப்பின் ஒரு சில தனி அதிகாரங்களை பயன்படுத்தி முடிவினை எடுக்க முடியாதெனவும் அரசியலமைப்பினை தொகுப்பாகவே நோக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அரசியலமைப்பின் சில சரத்துக்களை தேவையற்ற விதத்தில் தொடர்பு படுத்த முடியாதெனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதேவேளை அரச தரப்பினரின் குறிப்பாக சட்டமா அதிபரின் வாதமாக 33/2/சி அரசியலமைப்பு சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தியே பாராளுமன்றத்தை கலைத்திருக்கும் அதேவேளை இது முழுக்க முழுக்க அரசியலமைப்புக்கு உட்பட்ட விவகாரமாக அமையும் அதே வேளை இந்த விடயங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தான் நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை எனவும் கூறப்பட்டது.

தற்போது இந்த இரு தரப்பு வாதங்களின் பின்னர் இந்த வழக்கினை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் எடுத்துக்கொண்டமையானது, ஐக்கிய தேசிய கட்சியினை பொறுத்தவரையில் சாத்தியமான ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. ஏனென்றால் விளிம்பில் நின்ற அவர்களுக்கு இது முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டதுடன் நீதி தமது பக்கம் இருப்பதாக அவர்களால் கொண்டாடப்பட்ட அதேவேளை இந்த சவால்களில் அவர்களால் வெற்றிகொள்ள முடியும் என்ற உற்சாகம் அவர்கள் மத்தியில் தோன்றியது.

ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டிருப்பதாகவும் நீதியும் மக்களும் அவர்கள் பக்கம் இருப்பதாகவும் இந்த இடைக்கால உத்தரவினை ஐதேக தம்வசம் சாதகமாக ஆக்கியதுடன் மீண்டும் ஆட்சியை தம்பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருந்தனர்.

ஐக்கியதேசிய கட்சியினரின் தற்போதைய இந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வகிபாகம் மிகவும் குறிப்பிடத்தக்களவில் இருந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதி நிதித்துவப்படுத்திய கனக ஈஸ்வரனின் வாதம் இந்த இடைக்கால தீர்வினை அவர்கள் பெறுவதற்கு மிகவும் முக்கியமான பங்களிப்பாக அமைந்துள்ளது.

இந்த விடயத்தில் இன்னொரு விடயத்தினைக் குறிப்பிட்டாக வேன்டிய தேவை உள்ளது . இந்த நீதிமன்ற உத்தரவின் பின்னர் கனக ஈஸ்வரன் மன்றிலிருந்து வெளியே வந்த நிலையில் அவரது காலை வீழ்ந்து வணங்கிய இரு பெரும்பான்மையினத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் உங்கள் ஒருவரால் நாட்டை காப்பாற்ற முடிந்ததாக கூறியமை சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு சம்பவமாகக் காணப்படுகிறது.

நீதிமன்ற அறிவிப்பினை ஐக்கிய தேசிய கட்சி தமக்கு கிடைத்திருக்கும் சாதகமான புள்ளியாக்கி தமது அரசியல் காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்ற உத்தரவானது இந்த வழக்கின் தீர்வல்ல என்ற உண்மையை எத்தனைபேர் அறிந்துள்ளார்கள் ?. டிசம்பர் 7 ஆம் திகதியே இந்த வழக்கின் அடுத்த நிலையை அறிய முடியும்.அதற்கிடையில் ஜனாதிபதியின் முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு வரலாறு காணாத வன்முறைகளின் களமாக அது மாறியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியினர் வென்ற மூன்றுதடவைகள் நடந்த வாக்கெடுப்பையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளமை மற்றும் பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளின் முன்னர் கலைத்தமை ஆகிய செயற்பாடுகள் ஆட்சியை தம்பக்கம் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளாக வரலாற்றுத்தவறாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கப்போகிறது.


நன்றி ஞாயிறு தினக்குரல்

சிறிசேனாவின் பரிகாரம்

ஏரம்பன்-
லங்கையின் அரசியல் களம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மிகவும் சூடானதும் அதிர்ச்சியானதுமான நகர்வுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இந்த அதிர்ச்சியினையும் சடுதியான மாற்றங்களையும் இலங்கையர்கள் மாத்திரமல்ல சர்வதேசம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை
.

கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர் கூட்டணி அரசாங்கத்துடனான பிணைப்பினை முறித்துக்கொண்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதேச்சதிகாரமாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருந்தார்.
இந்த நியமனம் இலங்கை அரசியலில் புதியதொரு நகர்வாகவே அமைந்துள்ளது. முன்னைய வரலாற்றினை நோக்கும் நிலையில் இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் இந்த பிளவு ஏற்படுவதற்கான பின்னணி குறித்து நோக்கினால், நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் முன்னெடுத்திருந்த செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதனைக் காணமுடிந்துள்ளது.
நல்லாட்சி குறித்து பரவலாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதனை சகலரும் அறிவார்கள். இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் 30/1 தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது.
முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச ரீதியாக மிகவும் கடுமையான கேள்விகளை எதிர்கொண்ட நிலையில் அந்த அரசை பிணை எடுப்பதற்காக வந்தாற்போல நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதுடன், தமது கொள்கைகளை முன்வைத்திருந்தார்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் நல்லாட்சி அரசாங்கமும் தளம்பல் நிலையை எதிர்கொண்டிருந்தது.
சர்வதேசத்துக்கும் மக்களுக்கும் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்த அதேவேளை, அரசாங்கமும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மாற்றுத்தரப்பினரால் முன்வைக்கப்பட்ட நிலையில் அமைச்சரவை மாற்றங்கள் எனப் பல சிக்கல்களை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டிருந்தது.
இருந்தபோதிலும் சர்வதேசம் அக்கறை கொண்டிருக்கும் பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் நிலைமாற்று நீதிப்பொறிமுறைகள் உள்ளிட்ட விடயங்களில் சில செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்ததன் விளைவாக காணாமல் போனோர் அலுவலகம் அமைத்தல், நல்லிணக்க செயற்பாடுகள் போன்ற சில முன்னெடுப்புக்கள் காணப்பட்டிருந்தன.
30 வருட காலமாக பாரிய விடுதலைப்போர் ஒன்றினை இலங்கை எதிர்கொண்டிருந்தது, அந்த நிலையில் இருந்து நாடு மாற்றமடைந்து வரும் நிலையில் பல எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை எவ்வாறு முன்வைக்கப் போகின்றது, இனியாவது மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய நிலை ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக சகல தரப்பினரும் மிகவும் கரிசனையுடன் எதிர் பார்த்துக்காத்திருந்த நிலையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பூர்வாங்க செயற்பாடுகள், அரசியலமைப்பு சபை உருவாக்கம், அரசியலைமைப்பு வரைபு என அந்த நடவடிக்கைகள் ஒருபுறம் சென்றுகொண்டிருந்தன.
இந்த அரசியலமைப்பு செயற்பாடுகளில் இரு தரப்பினரிடையேயும் குறிப்பாக ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கூட்டமைப்பு இடையில் போதிய இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையிலும் அந்த செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே இருந்தன. இதனால் ஏதோ ஒரு தீர்வு முன்வைக்கப்படும் என தமிழர் தரப்பு காத்திருக்கும் நிலையும் உருவாகியிருந்தது.
இவ்வாறாக நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது முழுமையாக இல்லாது விடினும் ஓரளவுக்கேனும் சில காத்திரமான நடவடிக்கைகளை முன்வைப்பார்களென்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் பாரிய அதிர்ச்சியை தருவதாக இந்த புதிய ஆட்சி மாற்றம் இரவோடிரவாக அரங்கேறியது.
சுதந்திரக்கட்சியினர் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்வதற்கான நகர்வினை மேற்கொள்வார்களென்பதை ஜனாதிபதியினதும் ஏனைய சுதந்திரக்கட்சியினரதும் நகர்வுகளின் மூலம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிந்திருந்தாலும் மிகவும் சர்ச்சைக்குரிய முடிவாக பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் எனச் சுற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஏனெனில், இவ்விடயம் தொடர்பாக அவராலோ அல்லது அவரது ஐக்கிய தேசியக் கட்சி முகாமினராலோ அனுமானிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் இந்த தருணத்தில் பிரதமர் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் என்பதும் இந்தத் திட்டங்கள் தொடர்பாக அவர் எதனையும் அறியாதிருந்துள்ளார் என்பதனை வெளிக்காட்டுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை நிறுத்துவதற்கானச் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டதோ அதேபோல மிகவும் இரகசியமாக இந்த இராஜதந்திர நடவடிக்கைகள் காணப்பட்டிருந்தன.
அதேபோலவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு திடீரென அறிவித்திருந்தாரோ அதே அறிவிப்பும் அதிர்ச்சியாகவுமே இந்த நடவடிக்கையும் உள்ளது. அத்துடன் இந்தக் கருத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரால் பரவலாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்படும் விடயமாக உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ” 2015 இல் ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார். அவர் எவ்வாறு மைத்திரிபால சிறிசேனாவைப் பொது வேட்பாளராக நியமித்திருந்தாரோ அதே போலவே இன்றைய நியமனமும் இடம்பெற்றுள்ளது என நாமல் ராஜபக்ஷ எம்.பி. இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த விடயத்தில் ஒரு விடயம் மிகவும் தெளிவானதாகக் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க மைத்திரியைப் பொதுவேட்பாளராக அறிவித்திருந்தமை அரசியலமைப்புக்கு முரணான ஒரு விடயமென அந்த சந்தர்ப்பத்தில் எந்தவிதமான சர்ச்சையும் எழுந்திருக்கவில்லை. அத்துடன் அது ஏமாற்றுதல் என்ற வகைப்படுத்தலில் உள்வாங்கப்படுவதாக இருந்தால் ரணில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்த ஏமாற்றாக கருத முடியாது. மைத்திரிபால சிறி சேனா மஹிந்த ராஜபக்ஷவுக்குச் செய்த ஏமாற்றாகவே அதை கருத முடியும்.
மாறாக ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக விரோதமாகவோ இல்லாது விடில் அரசியலமைப்புக்கு முரணாகவோ அந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கவில்லை.
இன்று இலங்கையில் காணப்படும் அரசியல் குழப்ப நிலையில் அரசியல் பேதமின்றி நியாயமாக சிந்திக்கும் மக்கள் இந்த உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. யதார்த்தமாகக் கூறுவதாக இருந்தால் பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்திருக்கும் தரப்பினை ஒதுக்கி பெரும்பான்மையற்ற உறுப்பினர்களுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு அரசமைப்பதற்கு ஜனாதிபதி மிகவும் சூட்சுமமான முறையில் தன்னிச்சையாக அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கியமை சகல இலங்கையர்களுக்கும் வெட்கத்தைத் தரும் ஒரு செயலாகவே அமைந்துள்ளதுடன், இது ஒரு அரசியல் நாகரிகமற்ற நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியால், யார் பெரும்பான்மைப் பலத்தினை பாராளுமன்றில் நிரூபிப்பார்களெனக் கருதப்படுகிறதோ அவர்களுக்கு அரசமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என ஜனாதிபதி தரப்பு தமது நிலைப்பாட்டினை நியாயப்படுத்தும் அதேவேளை, 19 ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என பிரதமர் தரப்பு தெரிவித்துள்ளது.
அதாவது 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டிருந்த அரசியல் திருத்தத்திற்கு அமைவாக பிரதமர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டாலோ மாத்திரமே ஜனாதிபதி பிரதமரை நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியுமானாலும் இன்னமும் எந்தவொரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை.
அத்துடன் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வதற்கு எழுத்துமூலம் அறிவிக்க முடியும் என அரசியலமைப்பின் 47 (ஏ) தெரிவிக்கின்றது. இருந்தபோதிலும் இது 19 ஆவது திருத்தம் மூலமாக நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த சட்ட ஒழுங்குகளின் படி தற்போது நாட்டில் காணப்படும் சூழலில் அதாவது சுதந்திரக்கட்சியினர் பிரிந்து சென்றிருக்கும் நிலையில் புதிய பிரதமரை ஜனாதிபதி நியமிக்க வேண்டிய தேவை இல்லை என்றே பிரதமர் தரப்பினரதும் சட்ட வல்லுனர்களினதும் வாதமாக உள்ளது. ஆனால் இந்த சட்ட ரீதியான விளக்கம் குறித்த மயக்கங்களைத் தீர்ப்பதற்கு எவரும் நீதி மன்றங்களை அணுகியிருக்கவில்லை.
இவ்வாறு நீதிமன்றங்களை அணுகாமல் இருப்பது இரு தரப்பும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லையா? என்ற எண்ணப்பாட்டினைத் தோற்றுவிக்கின்றது.
பாராளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. ராஜபக்ஷ, சிறிசேனா கூட்டணிக்கு 104 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் (இந்த பத்தி எழுதப்படும் வரை). ரணிலின் தரப்பில் 99 பேர் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவு இதில் முக்கிய பங்காற்றும் என்று தோன்றுகிறது. கட்சித்தாவல் தடைச் சட்டமும் இங்கு கிடையாது என்பதால், குதிரை பேரத்தின் மூலம் ரணில் கட்சியை உடைக்கும் முயற்சியில் ராஜபக்ஷ கட்சி ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அவரது அணி அதிக ஆசனங்களை பெறும் எனப் பரவலாக நம்பப்படுகிறது.
ஒரு வேளை அந்தத் தரப்பினரே ஆட்சியை அமைக்கலாம். ஆனால் மைத்திரியின் செயற்பாட்டையும் மஹிந்த இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதையும் சர்வதேசமும் மக்களும் எவ்வாறு நோக்குகின்றனர் என்றால் ஆட்சி மாற்றம் நடந்து ஒருவாரத்துக்கும் மேலான காலம் சென்றிருக்கும் நிலையில் சீனா மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளையும் தவிர வேறெந்த நாடுகளும் இந்த அரசை அங்கீகரிக்கவில்லை என்பது வெளிப்படை உண்மையாகும். அமெரிக்கா இந்தியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமது வாழ்த்துக்களை இன்னமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவிக்கவில்லை. மாறாக ஜனநாயக பெறுமான்னங்களுக்கும் அரசியலமைப்புக்கும் மதிப்பளிக்குமாறே தெரிவிக்கின்றனர். இது சர்வதேசம் இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே அர்த்தப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தினை அதிகாரத்துக்கான போட்டியாக அவர்கள் நோக்கவில்லை. ஒரு சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நடவடிக்கையாகவே அது கருதப்படுகிறது.
தற்போது நடைபெறும் குதிரை பேரங்கள் மூலமான கட்சித் தாவல்கள் மூலமாக மஹிந்த தரப்பினர் ஆட்சியமைக்கலாம். அதன் பின்னர் எதிரணியினர் தமது பலத்தினைக் காண்பித்து மீண்டும் ஆட்சி அமைக்கலாம். மகிந்த தரப்பு ஆட்சிக்கு வந்தால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்படுவதற்கும் சாத்தியம் உள்ளது. இவ்வாறான குழப்பங்கள் தொடர்ந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல்.
சுதந்திரக் கட்சி கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாராளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சிஅதிகாரத்தை வழங்கியிருந்தால் அது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக அமைந்திருக்கும் என்பதுடன் சர்வதேச உள்ளூர் வரவேற்பையும் கொள்ளும் ஒரு செயற்பாடாக அது அமைந்திருக்கும்.
சுபீட்சமும் அமைதியும் செழுமையும் நிறைந்த இலங்கையை உருவாக்க சர்வதேசம் அழுத்தங்களையும் கட்டமைப்பு அபிவிருத்திக்கான ஆதரவினையும் வழங்கி வரும் நிலையில் அதுவே சகல இலங்கையர்களினதும் அபிலாஷையாகக் காணப்படும் சூழ்நிலையில், மைத்திரிபால சிறிசேனா, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து நடத்தியிருக்கும் முறையற்ற இந்த ஆட்சிமாற்ற அரங்கேற்றம் இலங்கையின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது.
அத்துடன் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் மாலைதீவு போன்ற பிராந்திய நாடுகளைப் போன்ற நிலை இங்கும் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளது.
இந்த ஆட்சி மாற்றம் இரு விடயங்களை மாத்திரம் மிகவும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதாவது மைத்திரிபாலவும் மஹிந்தவும் சர்வதேச நன்மதிப்பினை மட்டுமல்லாது உள்நாட்டிலும் அதனை இழந்திருக்கின்றார்கள். அத்துடன் 2015 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறான ஒரு ஏமாற்றத்தை மைத்திரிபால சிறிசேன கொடுத்தாரோ அதற்கான பரிகாரத்தை இதன் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.
நன்றி தினக்குரல்