ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

திக்கம் வடிசாலை; ஊழியர்கள், நிர்வாகப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்ன?


பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீங்கள் அனைவரும் வேலைக்கு சமுகமளிக்க வேண்டாமென வாய்மூலமாக உயரதிகாரி ஒருவரினால் கூறப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவுற்றிருக்கும் நிலையிலும் தமது எதிர்காலம் குறித்து அறிய முடியாத நிலையிலும் தமது நாளாந்த வாழ்க்கைச் செலவினை கொண்டு செலுத்த முடியாத நிலையிலும் உள்ளனர் வடமராட்சியிலுள்ள திக்கம் வடிசாலையின் ஊழியர்கள்.

மாதாந்த ஊதியத்தினை கிரமமாகப் பெற்றாலும் குடும்பச் செலவுகளை பூரணமாக மேற்கொள்ள முடியாத நிலையில் பிறரிடம் கடனைப் பெற்று வாழ்க்கையினை கொண்டு செலுத்தும் நிலையிலேயே இலங்கையின் நடுத்தர மற்றும் அதன் கீழான வருமானத்தை பெறும் குடும்பங்கள் உள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் திக்கம் வடிசாலையின் ஊழியர்கள் 23பேர் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பங்கள் பிள்ளைகளின் நிலைமையினை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கூட இதனால் பாதிக்கப்பட்டிருக்கும். நாட்டில் போரினால் பல்வேறு இழப்புக்களையும் பொருளாதார பாதிப்புகளையும் கண்டு வந்த தமிழர் பிரதேசங்களில் இன்று அமைதியான சூழ்நிலை திரும்பி இயல்பு வாழ்க்கை திரும்புவதாக கூறப்படும் நிலையில் முறைதவறும் நிர்வாக முகாமைத்துவங்களினால் இதுபோன்ற நிலைமை ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகும்.
வடபகுதியைப் பொறுத்த வரையில் கற்பக தரு எனப்படும் பனைமரமானது அப்பகுதியின் மிக முக்கியமான பயன்தரு மரங்களில் ஒன்றாகும். வழமையில் பனை என்றவுடன் அனைவரும் கூறுவதனைப் போலவே அதன் வேர் முதல் அதன் ஓலைகள் வரை பயன்தரும் என்பது அதிசயிக்கத் தக்கதானாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை ஆகும்.

இதன் காரணமாக பனை உற்பத்தி உணவுப் பொருட்கள் அனைத்தும் வடபகுதி மக்களால் மட்டுமல்லாது தென்பகுதி மக்களாலும் அதேவேளை வெளிநாட்வர்களாலும் அதிகம் விரும்பப்படுகின்றன.

இவ்வாறான பனை உற்பத்தி பொருட்களுடன் கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பனஞ் சாராயத்துக்கும் தேசியளவில் வரவேற்பு காணப்படுகின்றது.



இயற்கையான முறையில் எந்தவிதமான இரசாயனப் பதார்த்தங்களும் கலக்கப்படாமல் இயற்கையான ஸ்பிரிட் மூலம் உருவாக்கப்படுவதே துரித பனஞ்சாராயம்.

யாழ்.குடாநாட்டில் திக்கம், வலிகாமம், வரணி என்ற மூன்று வடிசாலைகளிலும் இயற்கையான முறையில் உருவாக்கப்படுகின்ற இப்பனஞ்சாராயம் குறித்த வடிசாலைகளிலேயே போத்தல்களில் அடைக்கப்பட்டு ஏனைய இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களுக்கு நிகராக உள்ளூர் சந்தைகளில் இவ்வடிசாலைகளின் உற்பத்திகள் இருக்கின்றன.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இவ்வடிசாலைகளின் உற்பத்தியினை வெளிமாவட்டத்தவர்கள் ருசித்துப் பார்ப்பதற்கும் அந்த உற்பத்திகளை வெளிமாவட்டங்களில் விநியோகிப்பதற்கும் முடியாத நிலை காணப்பட்டது. அதேவேளை இவ்வடிசாலைகளின் உற்பத்தி பொறிகளின் உதிரிப்பாகங்கள் சிலவற்றினை மீளப்பெற்றுக் கொள்வதிலும் அக்காலப் பகுதியில் சிக்கல்கள் காணப்பட்டன.
இன்று அமைதி திரும்பியதாக கூறப்படும் நிலையில் இவ்வாறான உற்பத்திச் சாலைகள் வடிசாலைகள் போன்ற அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி அதிகமான இலாபத்தினை எட்டுவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர இவற்றினை மூடுவதற்கோ அல்லது அதன் செயற்பாடுகளை முடக்குவதற்கோ முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறான செயற்பாடுகள், நீண்டதும் ஆழமானதுமான வடுக்களிலிருந்து மீண்டெழும் மக்களின் மீட்சியில் பின்னடைவினை ஏற்படுத்தும்.

யுத்தத்தின் நிறைவின் பின்னர் இடம்பெறும் இவ்வாறான முடக்கல் செயற்பாடுகளுக்கு அரசாங்கம், எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடக்கின் எழுச்சியில் அக்கறை கொண்டுள்ள அரசு வடக்கின் வசந்தம் போன்ற பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் யாழ்.குடாநாட்டின் மூன்று வடிசாலைகளில் ஒன்றான திக்கம் வடிசாலை இன்று பல்வேறு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் அதன் பணியாளர்கள் பணிக்கு திரும்பவேண்டாமென கடந்த ஜனவரி மாத இறுதியில் உயர்மட்ட நிர்வாகத்தின் அதிகாரி ஒருவரால் வாய்மூலமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை எழுத்து மூலமாக தருமாறு அங்கு பணிபுரிந்த இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழியர்களால் கோரப்பட்ட போதும் அது வழங்கப்படவில்லை.



பனை அபிவிருத்திச் சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவராலேயே இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டன. அந்நேரத்தில் அங்கு பணியாற்றிய 23 பேரில் 13 பேருக்கு மீண்டும் திக்கம் வடிசாலையில் பணி வழங்குவதாகவும் ஏனைய 10 பேருக்குவேறு எங்கு சரி பணி நியமனம் வழங்குதாகவும் கூறப்பட்டதுடன் அதுவரைக்கும் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால், ஜனவரி, பெப்ரவரி மாதத்துக்கான ஊதியம் அவர்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை.
இரண்டு மாதங்களாக தமது ஊதியத்தினை பெறாத நிலையிலும் பணி  இடைநிறுத்தம் செய்யப்பட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையிலும் தமது எதிர்காலத்தினை நிர்ணயிக்க முடியாத நிலையில் நடுவீதியில் இந்த ஊழியர்கள் திசை தெரியாது நிற்கின்றனர்.

அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் 1984ஆம் ஆண்டு வடிசாலை கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் உருவாக்கப்பட்டதே திக்கம் வடிசாலை. அன்றைய பனை, அபிவிருத்திச் சபையின் தலைவரினால் பனை தென்னை வள, கூட்டுறவு சங்கங்களினதும் ஒத்துழைப்பே திக்கம் வடிசாலையின் பிறப்புக்கு வழிகோலியது.

இதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அத்துடன் ஆரம்ப காலத்தில் வெறுமனே மதுசார உற்பத்தியில் மாத்திரம் இவ்வடிசாலை கவனம் செலுத்தியிருக்கவில்லை.


பனைசார் உற்பத்தி பொருட்களை அப்பகுதி மக்களிடம் பெற்று அவற்றை சந்தைப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டது. இதனால் அம்மக்கள் தமது பனைசார் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு கடைகளை ஏறி இறங்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த திக்கம் வடிசாலை 80களின் பிற்பகுதியிலும் 90களின் ஆரம்பப் பகுதியிலும் நாட்டு சூழ்நிலை காரணமாக சில நெருக்கடிகளை எதிர்கொண்டது. ஆனாலும், அதன் பின்னர் சீரான முறையில் இயங்கி வந்தது.

வடமாகாண பனை, தென்னை வள கூட்டுறவு சங்கம் மற்றும் சமாசம் ஆகிய நிறுவனங்கள் பனை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து மிகவும் சீரான முறையில் இதன் நிர்வாகம் இயங்கியது. பொது முகாமையாளர் பதவிகளில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான சூழ்நிலைகளில் பாரியளவிலான இலாபத்துடன் இந்நிறுவனம் இயங்கியது.
இதன் தொடர்ச்சியாக நாட்டில் சிவில் நிர்வாகம் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட நிலையில் குடாநாட்டில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பொறுப்பான அமைச்சுகள் திக்கம் வடிசாலையை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதனை முதற்பணியாக கொண்டிருந்தன.


துறை ரீதியாக நேரடித் தொடர்பினை கொண்டிராத அமைச்சுகள் கூட இந்த வடிசாலையினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. இந்நிறுவனம், உற்பத்தி மற்றும் வர்த்தகத்துறை தொடர்புடைய அமைச்சுகளின் கீழ் சென்றிருக்க வேண்டியதே யதார்த்தமானதாகும்.

ஆனால், துறைரீதியான உறவினை கொண்டிராத அமைச்சுகளும் இந்நிறுவனத்துடன் உறவைப் பேணியமை கவலைக்குரிய விடயம்.

இவ்வாறான அமைச்சுகளின் கீழ் திக்கம் வடிசாலையின் செயற்பாடுகள் நிர்வாகங்கள் எவ்வாறு இருக்கிறதென்பதனை அதன் ஊழியர்களும் பிராந்திய மக்களும் அறிவார்கள்.

இவ்வாறான நிலைகளை கடந்துள்ள நிலையில் பனை, தென்னை வளம் சம்பந்தமான சங்கங்கள் இதனை நிர்வகித்து வந்துள்ளன.

முகவர் ஒருவர் மூலமாக உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் நெருக்கடிகள் பிரச்சினைகள் ஏனைய நிறுவனங்கள் திணைக்களங்களைப் போலவே இடரும் தோன்றி மறைந்துள்ளது.

1990முதல் 2013 வரையான 23 வருடங்களில் 6 வருடங்களே பனை அபிவிருத்தி சபை திக்கம் வடிசாலையை நிர்வகித்துள்ளது. ஏனைய காலப்பகுதிகளில் பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள் சமாசம் மற்றும் கொத்தணி ஆகியன மாறி மாறி நிர்வகித்துள்ளன.

பின்னர் இவர்களின் உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் முகவரை நிறுத்திவிட்டு தாமே விநியோகப்பணியினையும் குறித்த நிர்வாக அமைப்புகள் மேற்கொண்டு வந்துள்ளன.
அதிகமான அளவில் இலாபத்தினைப் பெற முடியும் என்ற நோக்கிலேயே அவர்கள் இவ்வாறு செயற்பட்டிருக்கக்கூடும். ஆனால், அதன் பின்னர் விற்பனையில் விழுக்காடு காணப்பட்டது.

இதன் தொடராக வடிசாலை ஊழியர்களே விநியோகப் பணிகளையும் மேற்கொண்டு தமது ஊதியங்களைப் பெறுவதற்கு தேவையான நிதி கிடைத்தால் போதும் என்ற அளவில் உற்பத்தியினை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பனை அபிவிருத்திச் சபையின் தலையீட்டினால் இதன் பணிகள் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் நடு வீதியில் விடப்பட்டனர். இன்றுவரை தீர்வின்றி தவிக்கின்றனர்.

இதனால் 23 தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. வடிசாலைக்கு கள்ளின வழங்கும் தொழிலாளர்களது வருமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

                                                          Thinakkural E paper
உதாரணமாக  18 போத்தல் கள்ளினை பதப்படுத்தி 1 லீற்றர் ஸ்பிரிட்டை பெற்று அதில் கிட்டத்தட்ட இரண்டு லீற்றர் மதுசாரத்தை பெறமுடியும். சீராக இயங்கும் காலத்தில் ஒரு நாளைக்கு 35 முதல் 40 ஆயிரம் லீற்றர் கள்ளு வழங்கப்பட்டது. அதனால் 2222.22 லீற்றர் ஸ்பிரிட் கிடைக்கும் அதில் 4400இற்கும் அதிகமான போத்தல்களுக்கான (750 மில்லி லீற்றர்) மதுசாரத்தினைப் பெறமுடியும்.

ஜனவரி முதல் ஜூலை வரையான பருவகாலப் பகுதியில் நாள் ஒன்றில் ஆண் பனையில் 3 லீற்றரும் பெண் பனையில் 8 லீற்றர் கள்ளினையும் பெறமுடியும்.



யாழ்.குடாநாட்டின் பாரிய வடிசாலையான திக்கம் வடிசாலை மணித்தியாலத்துக்கு 1350 லீற்றரையும் ஏனையவை (வரணி; வலிகாமம்) ஒருநாளில் 3150 லீற்றர் வடிதிறனையும் கொண்டிருந்தன.

கள் கிடைக்கும் காலத்தில் போதியளவான கள்ளினை ஸ்பிரிட் ஆக மாற்றி வடிகட்டி ஏனைய ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையான காலத்திற்கு மதுசார உற்பத்திக்கு களஞ்சியப்படுத்தும் பாரிய வசதியினை திக்கம் வடிசாலை கொண்டுள்ளது.

பருவ காலங்களில் இதன் ஊழியர்கள் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக பணிபுரிந்த சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

30 வீத செறிவினை உடைய ஒரு போத்தல் பனம் சாராயம் மதுவரியுடன் சேர்த்து 600 முதல் 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. கள்ளினை 8690 வீதமான செறிவுடன் ஸ்பிரிட்டாக மாற்றி பின்னர் அதன் செறிவுகள் குறைக்கப்பட்டு பனம் சாராயம் உற்பத்தி செய்யப்படும். யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று வடிசாலைகளும் 2010 காலப்பகுதிகளில் 150 மில்லியன் லீற்றர் ஸ்பிரிட்டை தம்வசம் கொண்டிருந்தன.

சரியான முறையில் வடிசாலை ஒன்று இயங்கவில்லையாயின் அப்பகுதியில் உள்ள கள்ளிறக்கும் தொழிலாளர்களும் பாரிய நட்டத்தினை எதிர்கொள்வார்கள். மனிதர்களின் நேரடி நுகர்வுக்கு மேலதிகமான கள்ளினை அழிக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் சங்கங்களும் கள் தொழிலாளர்களும் பாரிய நட்டத்தினை எதிர்கொள்வார்கள் திக்கம் வடிசாலையின் இன்றைய நிலைமை காரணமாக அவர்களும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

திக்கம் வடிசாலையின் உற்பத்தியினை ஏன் வெளிமாவட்டங்களுக்கு விநியோகிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு, பழைய இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால் உற்பத்திச் செலவு அதிகமாகவுள்ள நிலையில் ஏனைய உற்பத்திகளுடன் சம விலைக்கு வழங்க முடியவில்லையென மதுவரி ஆணையாளர் நாயகம் வசந்த ஹப்பு ஆராச்சி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அது உண்மையானதே. ஆரம்பித்த காலம் முதல் இதுவரை அதன் பொறிகள் மாற்றப்படவில்லை. அவற்றினை மாற்றி நவீன இயந்திரங்கள் பொருத்தினால் உற்பத்திகளும் அதிகரித்து சந்தையில் கேள்வியும் காணப்படும்.

இதனால் மேலும், பலருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும். அரசின் உள்நாட்டு உற்பத்தி மூலமான வருமானமும் அதிகரிக்கும்.

குடாநாட்டில் வடிசாலை என்ற நிறுவனம் எந்தவிதமான தனிநபருக்கோ நிறுவனங்களுக்கோ சொந்தமானவை அல்ல. அவை குறிப்பிட்ட பிராந்திய மக்களுக்கான சொத்துகள். இதன் மூலம் அப்பகுதி மக்களின் நலன்கள் விடுத்தி அடைந்துள்ளமையினை நாம் ஏற்கவேண்டும். அதனை கருத்தில் கொண்டு திக்கம் வடிசாலையின் இன்றைய நிலையினை நீக்கி வளமான எதிர்காலத்தினை உருவாக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கும் குறிப்பாக பனை அபிவிருத்தி சபைக்கும் உண்டு.

இப்பணியாளர்கள் அனைவரும் மீண்டும் அழைக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கவேண்டும் என்பது இன்றைய உடனடித்தேவை. அதனை காலம் தாழ்த்தாது சம்பந்தப்பட்ட தரப்புகள் நிறைவேற்றவேண்டும்.

ஆனால், அதன் எதிர்கால ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்த, கடந்த காலங்களைப் போன்று பலரும் மாறிமாறி நிர்வாகம் செய்யாது, வலுவான கட்டுக்கோப்புடைய ஒரு அமைப்பின் கீழ் திக்கம் வடிசாலை உள்வாங்கப்பட வேண்டும்.

தற்போது உடனடித் தீர்வாக ஒப்பந்த அடிப்படையில் முகவர்களை நியமிப்பதும் சிறந்த அணுகுமுறையானதாக இருக்கும்.

நீண்டகாலத்தின் பின்னர் வடமாகாணசபை உருவாகியுள்ள நிலையில் வடமாகாணசபை கூட இந்த உற்பத்திச்சாலையை உள்வாங்கி சீரான நிர்வாகத்தை உருவாக்கலாம்.

அட்டவணை ஒன்றில் கூறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வடிசாலைகள் எவ்வாறான வருமானத்தினை கொண்டமைந்துள்ள தென்பதனை  செலுத்திய வரி போன்ற தகவல்கள் மூலம் பெறலாம்.

2009 முதலான நான்கு ஆண்டுகளிலேயே இந்நிறுவனம் நட்டத்தில் இயங்கியதாக கூறப்படுகின்றது. நட்டத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்குரிய தீர்வினை முன்வைத்து இலாபத்துடன் இயங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த உற்பத்திசாலையினை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஊழியர்களுடனான ஆலோனைகள் மூலம் அறிவது அதனை ஆராய்வது அவர்களிடம் நிர்வாகப் பொறுப்பினை ஒப்படைக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளான கரவெட்டி பிரதேச செயலர், மாவட்ட செயலர், வடமாகாணசபையினர் நடவடிக்கைகளை மேற்கொள்வது நிலையான ஒரு தீர்வினை பெற்றுத்தரும்.


குறித்த பிராந்திய மக்களின் பொருளாதார அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் அதன் இலக்கிலிருந்து நழுவிச் செல்லாமல் இருக்கவும் அம்மக்களின் எதிர்காலம் செழிப்பானதாக இருக்கவும் திக்கம் வடிசாலையின் திடமான ஒரு நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்க வேண்டியது அவசியம்.

நன்றி தினக்குரல்