‘‘சூடானின் பார்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதல்களின் 3 இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளார்களாயின் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, யேமன், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற மோதல்களின் போது எத்தனை இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிரான சர்வதேச பிடியாணைகள் ஒன்றல்ல இரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரை கைது செய்யவேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.) உத்தரவு விடுத்த பின்னர் இணையத்தளமொன்றில் எழுந்த கேள்வியே இது.
இந்த கருத்தினை பதிவு செய்திருந்த வலைத்தள பயனர் சூடான் ஜனாதிபதிக்கு ஆதரவானவரன்றோ அல்லது ஐ.சி.சி.க்கு
எதிரானவரன்றோ தீர்மானித்துவிட முடியாது.
எதிரானவரன்றோ தீர்மானித்துவிட முடியாது.
இந்த பத்தியின் முதற்பந்தியில் கூறப்பட்ட தனிநபர் ஒருவரின் கருத்து ஐ.சி.சி.யின் நடத்தையின் மீது கேள்வி எழுப்பியுள்ளது.
3 இலட்சம் பேர் டார்பூர் பிராந்திய மோதல்களில் கொல்லப்பட்டமைக்காக அக்காலப்பகுதியில் சூடான் ஜனாதிபதியாக இருந்தவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளாரெனில் மேலே குறிப்பிட்ட ஏனைய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றிற்கு பொறுப்புக்கூறுவது யார்? அல்லது யாரை விசாரணைக்கு உட்படுத்துவது என்பதுதான் அந்த பதிவின் அர்த்தமாகும்.
‘‘தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளை எவரும் குறைகூற முடியாது. மியன்மாரில் ரொஹிங்யா இனச் சுத்திகரிப்பு, ஈராக்கில் புஷ்ஷின் படையெடுப்பு மற்றும் அமெரிக்க சி.ஐ.ஏ. துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராக எந்தவொரு ஐ.சி.சி.யும் இல்லை’’ என மற்றொருவர் தனது அதிருப்தியை பதிவுசெய்துள்ளார்.
இந்த இரு பதிவர்களின் மனதில் மட்டுமல்லாது எம்மில் ö பரும்பாலானவர்களில் தோன்றும் கேள்விகளாகவே இவை காணப்படுகின்றன.
போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் என்ற இம்மூன்று சொற்றொடர்களும் இலங்கையர்கள் மத்தியிலும் பிரபலமானவை. புத்தாயிரமாம் ஆண்டின் முதற்தசாப்தத்தின் இறுதி ஆண்டுகளில் இவை இலங்கையுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தன.
அதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இவ்வாறான சொற்பதங்கள் ஊடகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றில் கூட மிகவும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று அவ்வாறு இல்லை.
உலகின் எந்த ஒரு முனையிலும் இடம்பெறும் சம்பவங்கள் அடுத்த நிமிடமே மறுமுனையில் பிரஸ்தாபிக்கப்படும் விடயங்களாக மாறிவிடுகின்றன. சமூக ஊடகங்களின் ஆக்கிரமிப்பின் காரணமாக ஏற்பட்ட நன்மைகளில் இதுவும் ஒன்று.
போர்க்குற்றம், சர்வதேச போர் விதிமுறைகளை மீறுவதனை இவ்வாறு வரையறுக்கப்படுகின்றது. மீறுபவர்கள் போர்க்குற்றவாளிகள் எனப்படுகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், உயிரிழப்புகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுதான் போர்க்குற்றத்துக்கான பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
பூமியிலுள்ள அதிநுட்பம் நிறைந்த உயிரினமான மனித இனம் தம்மைத்தாமே அழிக்கும் நிலை இன்னமும் மாறவில்லை. சுரண்டல்களுக்கு எதிரான யுத்தம், இனவெறிக்கு எதிரான யுத்தம், விடுதலைப்போர், நில ஆக்கிரமிப்பு என்ற பல முகங்களில் இன்னமும் யுத்தங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
இதன் ஒரு எடுத்துக்காட்டாகவே சூடான், டார்பூர் சிவில் யுத்தம் நடைபெற்றிருந்தது.
சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் மிகவும் பாரியளவில் இம்மோதல்கள் இடம்பெற்றிருந்தன. சூடானில் அரபு சமூகமற்றவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நீதி மற்றும் சமத்துவ இயக்கம், சூடான் விடுதலை இயக்கம் ஆகியவை இணைந்து இம்மோதல்களில் ஈடுபட்டிருந்தன.
ஆனால் டார்பூர் பிராந்தியத்தில் அரபு சமூகமற்றவர்களை சுத்திகரிக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் சூடான் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.
அத்துடன் இம்மோதல்களின் போது பாரியளவிலான பொருட்சேதங்கள் ஏற்பட்டதுடன் 3 இலட்சம் சிவிலியன்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதுவே இன்றைய நிலைமைக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
ஆயுத மோதல்களில் அப்பாவி மக்கள் உயிரிழந்த அதேசமயம், அரபு சமூகத்தினை சாராதவர்கள் தேடப்பட்டு கொல்லப்பட்டனர்.
சில இடங்களில் கூண்டுகளில் அடைக்கப்பட்டு மக்கள் குழுக்களாõக கொன்று குவிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
சில கொலைகள் மேலதிகாரிகளுக்கு தெரிந்த நிலையிலும் ஏனையவை தெரியாத நிலையிலும் கீழ்மட்ட ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த கொடூர யுத்தத்தில் பலிக்கடாக்களானார்கள்.
இவ்வாறான இருண்ட பக்கங்களைக் கொண்ட சூடான் டார்பூர் மோதல்கள் நடைபெற்ற போது ஜனாதிபதியாக இருந்த ஒமர் அல் பஷீர் தற்பொழுது சர்வதேச பிடியாணையை எதிர்கொண்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இதுவரை 9 சூழ்நிலைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அதில் பெரும்பாலானவை ஆபிரிக்க நாடுகளை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வழக்குகளுக்கு நெதர்லாந்தின் ஹேக்கிலுள்ள நீதிமன்றமான ஐ.சி.சி. தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் சிலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வேறு சிலர் மறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறாக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் ஓமர் அல் பஷீரும் ஒருவர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றான ஐ.சி.சி. யைப் பொறுத்தவரையில் ஆபிரிக்க தலைவர்களையும் ஆபிரிக்கர்களையும் இலக்குவைத்தே விசாரணைகளை முன்னெடுப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் அமெரிக்க சி.ஐ.ஏ.யினரின் தொந்தரவுகள் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் ஆகிவிட முடியாதா? இவ்விடயங்கள் தொடர்பாகவும் ஐ.சி.சி. யினால் ஏன் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என ஆபிரிக்க சமூகம் கேள்வி எழுப்புகின்றது. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யாரென்பதும் இந்த விடயங்களை நிர்மூலமாக்கும் வீட்டோ அதிகாரங்களும்தான் இவ்வாறான நிலைகளில் சிக்கலைத் தோற்றுவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க சூடான் ஒமர் அல் பஷீர் மற்றும் ஐ.சி.சி. இடையிலான விவகாரத்தில் தற்பொழுது சிக்கித் தவிப்பது தென்னாபிரிக்கா. காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போன்று ஏற்கனவே முத்திப் பழுத்த விடயத்தில் அழையா விருந்தாளியாக மாட்டிக் கொண்டுள்ளது தென்னாபிரிக்கா.
இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிகொள்ளப்பட்டமை மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களுக்கு உலகின் தனிநகர் உதாரணமாகக் கூறப்படும் தென்னாபிரிக்கா மீது போர்க் குற்றவாளி ஒருவரை தப்பிக்கவிட்ட குற்றச்சாட்டுகள் சரமாரியாக சுமத்தப்பட்டுள்ளன.
50 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அல்பஷீர் தென்னாபிரிக்காவிற்கு வருகைதந்திருந்தார். ஆனால் இவரது வருகையின் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படாதமையை உறுதிப்படுத்தி தென்னாபிரிக்க சூடான் அரசுகளிடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
முற்கூட்டியே தற்காப்பு நடவடிக்கையை சூடான் ஜனாதிபதி சரியான முறையில் மேற்கொண்டிருந்தார். அதன் பலனாக அவரால் சொந்த நாட்டுக்கு தப்பிக்க முடிந்துள்ளது. தனி விமானம் மூலம் அவர் சூடான் திரும்பியுள்ளார். இதற்கிடையில் தென்னாபிரிக்கா தனது சொந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மதிக்கவில்லை என்பதுதான் இன்னமும் கேலியான விடயம்.
அல் பஷீரை கைது செய்வதற்கு இரட்டை பிடியாணைகளை ஐ.சி.சி. பிறப்பித்திருந்த நிலையில், அதற்கமைவாக தென்னாபிரிக்க நீதிமன்றம் ஒன்றும் அல் பஷீரின் பயணத்திற்கு தடைவிதித்திருந்தது.
அல்பஷீரை தென்னாபிரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு இடமளிக்க வேண்டாமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அவர் தனி விமானம் மூலம் இராணுவ தளம் ஒன்றிலிருந்து புறப்பட்டு சூடானை சென்றடைந்துள்ளார்.
சூடானில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்காகவா அல்லது தனி மனிதரான அல் பஷீருக்காகவா தென்னாபிரிக்கா செயற்படவுள்ளது என நீண்ட யோசனைக்கு இடமளிக்காது தென்னாபிரிக்கா ஒமர் அல் பஷீருக்கு பிரியாவிடை வழங்கியுள்ளது.
இவ்விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நற்கீர்த்திக்கு பாரிய களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் மிகவும் பெரிய வேதனைக்குரிய விடயம். சர்வதேச நீதிக்காக தென்னாபிரிக்கா காண்பித்த சிவப்புக்கொடி அந்நாட்டின் மீது முழு உலகும் கொண்டிருந்த நன்மதிப்பினை பாழாக்கியுள்ளது.
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை எதிர்கொண்ட பதவியில் உள்ள ஒரு தலைவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
பஷீரை தென்னாபிரிக்கா இம்முறை மட்டும் தப்பிக்க விடவில்லை. 2010 ஆம் ஆண்டிலும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
பஷீருக்கு எதிரான குற்றம் 2009 இல் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், முதல் சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் (2010) தென்னாபிரிக்கா பஷீரை அழைத்திருந்தது.
இந்நிலையில் கடந்தவாரம் அல்பஷீர் மீண்டும் ஒருமுறை தென்னாபிரிக்காவுக்கு வந்து திரும்பியுள்ளார். அவர் தனி விமானம் மூலம் நாடு திரும்பியமையை தாம் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் சொப்பிங் சென்றுவிட்டதாக கருதியதாகவும் தென்னாபிரிக்க அரசு கூறுகின்றது.
ஆனால், பஷீரின் வெளியேற்றத்தில் தென்னாபிரிக்கா கண்டும் காணாமலும் இருந்துள்ளது என்பதுதான் உண்மை. பஷீர் சூடானை சென்றடைந்ததன் பின்னர் ஆளும் தேசிய காங்கரஸ் கட்சியினர் விடுத்துள்ள அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
‘ஸ்தாபிக்கப்பட்ட நோக்கங்களிலிருந்து விலகி செயற்படும் அமைப்பாக ஐ.சி.சி. உள்ளது. மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.சி.சி. பயன்தரும் ஒரு கட்டமைப்பாக இல்லை’ என ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கூறியுள்ளது.
ஐ.சி.சி. மீதான ஆபிரிக்காவின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதாக இக்கூற்று அமைந்துவிட்டது. பஷீரை தப்பிக்கவிட்டதன் மூலம் தென்னாபிரிக்கா பகிரங்கமாக தமது பாதிக்கப்பட்ட மக்களை விடுத்து ஆபிரிக்க கொடுங்கோலர்களின் பக்கம் சாய்ந்துள்ளது.
‘போர்க்குற்றம்’ உலகத் தலைவர்கள் பயந்துநிற்கும் ஒரு சொற்பதமாக காணப்பட்ட நிலையில், அல்பஷீரை தப்பிக்க விட்டுள்ள செயற்பாடு இதனை நலிவடையச் செய்துள்ளது.
உலகளவில் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சுதந்திரப் பறவைகளாத் திரியும் உலகத் தலைவர்களுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இந்தச் சம்பவம் ஒரு திறவுகோலாக அமைந்துவிட்டது.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் போர்க்குற்றவாளிகள் ஐ.சி.சி.யில் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நெகிழ்போக்கும் தென்னாபிரிக்காவின் கபடமும் ஏமாற்றத்தைத் தருவதாகவே கருதமுடியும்.
நன்றி புதிய பண்பாடு
