பிராந்திய மற்றும் பூகோள அளவில் எதிர்கொள்ளப்படும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் மத்திய கிழக்கு மோதல் விவகாரங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கான பிரகடனங்கள் இம்மாநாட்டின் இறுதியில் வெளியாகலாம் என்ற சர்வதேச ரீதியிலான எதிர்பார்ப்புக்கள் பொய்ப்பிக்கப்பட்ட நிலையில், ஜி 7 மாநாடு நிறைவடைந்துள்ளதென கூறிக்கொள்ளலாம்.
உலகின் செல்வந்த நாடுகளின் தலைவர்கள் வருடத்திற்கு ஒருதடவை ஒன்று சேர்வது வெறுமனே விருந்துபசாரங்களுக்காகவும் குழு புகைப்படங்களுக்காகவும்தான் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் தோன்றுமளவிற்கு அத்தலைவர்களின் செயற்பாடுகள் அமைந்துவிட்டன.
மலையடிவாரத்தினைப் பின்னணியாகக் கொண்டு அதனை நோக்கியவாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மரத்திலான வாங்கிலில் இரு கைகளையும் அகல நீட்டி விரித்தவாறு அமர்ந்திருக்க,
அவரின் முன்னால் ஜேர்மனியின் இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் அஞ்சலா மார்கல் நிற்கும் புகைப்படம் தொடர்பாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்டிருந்தன.
அவரின் முன்னால் ஜேர்மனியின் இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் அஞ்சலா மார்கல் நிற்கும் புகைப்படம் தொடர்பாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்டிருந்தன.
சிலரது விமர்சனங்கள் மிகவும் கடுமையானவையாகக் காணப்பட்டுள்ள அதேவேளை சிலர், நாசூக்காக நக்கலடித்த சந்தர்ப்பங்களும் உண்டு.
ஜி 7 மாநாட்டின் நிறைவின் பின்னர் இவ்வாறான வாதங்கள் தேவையற்றவை. காரணம் வாதத்துக்கான பொருளடக்கம் ஜி 7 மாநாட்டில் பேசப்பட்டவையும் பேசப்படாதவைகளுமாக இருந்திருக்க வேண்டும்.
இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினைகளாக உள்ளவை காலநிலை மாற்றம். நில நடுக்கம் உள்ளிட்ட திடீர் இயற்கை அனர்த்தங்கள், சிரியா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் முடிவிலாது தொடரும் யுத்தம், ஐ.எஸ்.தீவிரவாதம் ( இஸ்லாமிய தீவிரவாதம்)பயங்கரவாதம், சுகாதாரப் பிரச்சினைகளான எபோலா மற்றும் மேர்ஸ் குடியேற்றவாசிகள், பட்டினிமற்றம் வறுமை, வேலைவாய்ப்பும் ஊதியமும், நிதிநெருக்கடி உள்ளிட்டவை காணப்படுகின்றன.
இவ்விடயங்கள் தொடர்பாக சர்வதேச மாநாடொன்றின் மூலம் உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் . ஆனால் இம்மாநாட்டில் தனிநாட்டு அரசியல் மற்றும் வெளியுறவு குறித்த விடயங்களுக்கே முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதனை காணமுடிகின்றது.
பேசப்பட வேண்டியவை நீண்ட பட்டியலாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டியவை உலகளாவிய மக்கள் நேரடியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மோதல்களின் போது சிவிலியன்களின் மரணங்களைத் தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் .
‘ எமது காலப்பகுதியில் காணப்படும் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான சிக்கலான சவால்களை முறியடிப்பதற்காக பகிரப்பட்ட எமது கொள்கைகள் மற்றும் பெறுமானங்களின் வழிகாட்டுதல்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம் ’ என ஜேர்மனியில் எல்மாவில் இடம்பெற்ற இருநாள் மாநாட்டின் நிறைவில் ஜி 7 நாடுகளால் வெளியி“ப்பட்ட கூட்டுப்பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளனர் அல்லது உறுதி பூண்டுள்ளனர்.
‘ சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தினை உலகளாவிய ரீதியில் வியாபிக்கச் செய்தல் , சட்ட ஆட்சி , மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் சமாதானம், பாதுகாப்பினை வலுவாக்குதல் ஆகியவற்றிற்காக நாம் அர்ப்பப்ணிபுடன் செயற்படுகின்றோம் என்றும் அவர்களின் கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் ஜி 7 மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டுப் பிரகடனம் பரந்தளாவிய விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது.
எபோலா முதல் அணுஆயுதம் வரையில் உக்ரைன் போர், சிரிய மோதல்கள் , குடியேற்றவாசிகள் விவகாரம் போன்ற விடயங்கள் இந்த கூட்டுப்பிரகடனத்தில் அடங்கியுள்ளன. ஆனால் அவை எழுத்து வடிவில் மட்டும்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் இம்மாநாட்டில் தலைவர்களான அமெரிக்காவின் பராக் ஒபாமா முதல் ஜப்பானின் பிரதமர் ஷின்ஷோ அபே வரையான அனைவரும் தமது நாடுகள் எதிர்நோக்கும் விவகாரங்கள் அல்லது எதிராளிகள் தொடர்பாகவே கவனம் செலுத்தியிருந்தனர்.
ஒபாமாவை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் பிரதம எதிரியாகக் கருதப்படும் ரஷ்யாவை உக்ரைன் விவகாரத்தை காரணமாகக் கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார்.
ஒபாமா தனது நிறைவுரையில் , புட்டின் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் எதிர்காலத்தில் சோவியத் சாம்ராஜ்யம் உருவாகும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்படும். அதன் பின்னர் அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தினை எதிர்க்க வேண்டிய நிலை உருவாகும் என்ற காரணத்தினாலேயே ஒபாமாவின் எச்சரிக்கை இவ்வாறு அமைந்திருந்தது.
இதே எண்ணக்கருவுடன் ஜேர்மனியின் அஞ்சலா மார்கலும் ரஷ்யாவை எச்சரிக்கத்தவறவில்லை. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் மேலதிகத் தடைகளை ரஷ்யா எதிர்கொள்ளும் நிலை உருவாகுமென அவர் எச்சரித்திருந்தார்.
ஆனால் உக்ரைன் மோதல்கள் ஆரம்பமான காலப்பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி அஞ்சலா மார்கல் அடையில் அடிக்கடி தொலைபேசி மூலமான தொடர்புகள் இருந்துள்ளன.இவ்வாறாக ரஷ்யாவை இலக்குவைத்தே இம்முறை நடைபெற்று முடிந்த ஜி 7 மாநாடு இடம்பெற்றுள்ளதெனக் கூறலாம்.
அதேவேளை இம்மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைக் கலைப்பதற்கான முயற்சிகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒருசில வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. உலகமயமாக்கலை எதிர்த்தவர்கள், முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள், காலநலை மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட தரப்பினரே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
செல்வந்த நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் முக்கியத்துவம் கொடுத்துப் பேச வேண்டிய விவகாரங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.காலநிலை மாற்றம், நீதியான வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் செல்வந்த நாடுகள் கவனம் செலுத்தவேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
ஆனால் இந்தக் கோரிக்கைகள் தான் அம்மாநாடு தொடர்பாக சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் ஏதுவான காரணங்களாக அமைந்தன.அணு ஆயுதங்கள், போர்கள்,அரசியல் நகர்வுகள் ஆகியவற்றைக் காட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பல்வேறு விடயங்கள் இன்றைய உலகம் எதிர்நோக்கும் சவால்களாக உள்ளன.
குறிப்பாக பட்டினி மற்றும் வறுமை ஒழிப்பு நாம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகவுள்ளன. முன்னர் ஆபிரிக்காவைச் சேர்ந்த நாடுகளிலேயே பெருமளவில் வறுமை பரவிக் காணப்பட்டுள்ளது. ஆனால் இன்று மேற்குலக நாடுகளிலும் வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அண்மையில் பிரான்ஸிலுள்ள யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வொன்றின் அடிப்படையில் 340,000 சிறுவர்கள் பிரான்ஸில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுவது யாதெனில், வறுமையானது செல்வந்த நாடுகளிலும் தனது வீரியத்தினைக் காட்ட ஆரம்பித்துள்ளது என்பதாகும். இந்த ஆரம்பம் ஏனைய நாடுகளுக்கும் பரவுவதில் காணப்படும் அபாயத்தினை நாம் சிந்தித்துப் பார்க்க முடியும்.
இன்றைய உலகம் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் என்ன நடக்கின்றதென அவதானிக்கும் அதேநேரம், தமது வயிற்றுப் பசிக்காகப் போராடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது.இது ஒருபுறமிருக்க அண்மையில் நேபாள நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட சம்பவத்தினை நாம் வாழ்நாளில் மறந்துவிட முடியாது.
பூமித் தட்டுகளின் நகர்வுகள் காரணமாகவே நிலநடுக்கங்கள் தோன்றுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணங்கள் என்ன? எதிர்காலத்தில் இந்த அனர்த்தங்களிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களை நாம் எதிர்நோக்குகின்றோம்.
ஜீ 8 நாடுகள் குழுமமாக இருந்த இக்கட்டமைப்பு ரஷ்யாவின் வெளியேற்றத்துடன் ஜி 7 ஆக மாறிய அதேவேளை, ரஷ்யாவை இலக்காகக் கொண்டு செயற்படுவதும் அதன் பிரதான பணியாக காணப்படுகின்றது.
இங்கு உரை நிகழ்த்தியிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் இருப்பு தொடர்பாகப் பேசியுள்ளார். அவரும் தன்னலன்சார் விடயங்களையே பேசியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஜி 7 மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆர்வலர்கள் அதிருப்தியான நிலைப்பாட்டினையே வெளியிட்டுள்ளனர்.
உலகின் ஏழை மக்கள் மற்றும் நலிவான சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசி உரிய தீர்மானங்களை மேற்கொள்ள தவறியுள்ளதாக உலகின் முன்னணி உதவி நிறுவனமான ஒக்ஸ்பாம் குற்றஞ்சாட்டியிருந்தது.
அதுதான் உண்மையுயாகும். பேசப்பட வேண்டிய விடயங்களைக் காட்டிலும் வேறு விடயங்களுக்கே ஜி 7 முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மத்திய தரைக் கடலிலும் அந்தமான் கடற் பிராந்தியத்திலும் பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் நாளாந்தம் மடிகின்றனர். இன்றைய உலகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக இது உள்ளது. இவ்வாறான நிலையில் குடியேற்றவாசிகள் விவகாரம் தொடர்பாக ஜி 7 இல் பேசப்பட்டிருந்தும் முக்கிய தீர்மானங்கள் இவ்விடயத்திலும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
ஐ.நா.வின் புத்தாயிரமாம் அபிவிருத்தி இலக்குகள் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் எனக் கருதப்பட்ட நிலையில், அந்த இலக்குகள் எட்டப்படாத நிலையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இவ்வாறாக சர்வதேச அமைப்புகள் கொள்கைகளையும் பிரகடனங்களையும் வகுப்பது வெறுமனே கடதாசிகளில் எழுதப்பட்டவைகளாக அமைந்துவிடக்கூடாது.
நன்றி புதிய பண்பாடு


