ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

ஆசியாவின் குடியேற்ற நெருக்கடி

ஆசிய நாடுகள் மத்தியில் இன்றைய காலப்பகுதியில் மிகவும் நெருக்கடி நிறைந்த பிரச்சினையாக உருமாறியுள்ளது குடியேற்றவாசிகள் விவகாரம்.
இப்பிரச்சினையில் தொடர்புபட்டிருக்கும் குடியேற்றவாசிகள் எனக் கூறப்படுபவர்கள் மியன்மாரின் ரொஹிங்யா இனத்தவர்களும் பங்களாதேஷியர்களும் ஆவர். இவ்வாறான நிலையில் இம்மக்களை குடியேற்றவாசிகள் என்று கூறுவதை விட படகு அகதிகள் என்றழைப்பதுதான் சந்தர் பத்திற்குப் பொருத்தமானதாக அமையும்.

மேலைத்தேய நாடுகளை நோக்கி பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வதற்காக ஆசிய மக்கள் சென்ற நிலை இன்று மாற்றமடைந்துள்ளது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களே மற்றொரு ஆசிய நாட்டினை நோக்கிச் செல்வதனை குடியேற்றம்
எனக் கூறுவது பூரணமானதல்ல.மியன்மாரை எடுத்துக்கொண்டால் ரொஹிங்யா இன முஸ்லிம்கள் மீதான பாரபட்சமான நடவடிக்கையே அம்மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேவேளை பங்களாதேஷைச் சேர்ந்த மக்கள் பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வதற்காக குடிபெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரு மக்களினதும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இருநாட்டு அரசாங்கங்களும் தவறியுள்ளமையே இந்த அவலம் தொடர்வதற்கான அடிப்படைக் காரணமாகும்.
இவ்வாறான நிலையில் இந்த அகதிகளின் வாழ்வு நடுக்கடலில் அஸ்தமிப்பதற்கு இரு நாடுகளினதும் அசமந்தப்போக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.

 ரொஹிங்யா முஸ்லிம்கள்

மியன்மாரின் (பர்மா) ரஹினே மாநிலத்தைச் சேர்ந்த சுதேசியர்களே ரொஹிங்யா இன முஸ்லிம்கள். இவர்கள் இந்தோஆரியர்கள் என்றும் கூறப்படுகின்றனர்.

அதேவேளை மியன்மாரில் (அன்றைய பர்மா) பிரிட்டிஷ் ஆட்சி நிலவிய காலப்பகுதியில் பங்களாதேஷிலிருந்து இடம்பெயர்ந்து மியன்மாரில் குடியேறியவர்களே ரொஹிங்யா  மக்களென வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதி முதல் அரகன் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர். இக்காலப்பகுதி முதலே ரொஹிங்யா மக்களுக்கும் ரகினேயின் பௌத்தர்களுக்கும் இடையில் இன அடிப்படையிலான வன்முறைகள் ஆரம்பித்தன. இந்த ஆரம்பம்தான் இன்றைய அவலத்திற்கு வித்திட்டுள்ளது.

1942 இல் முதற்தடவையாக ரொஹிங்யா இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பித்திருந்தன. அதன் பின்னர் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினை நீடித்துள்ளது.

இவ்வாறான தசாப்தங்கள் கடந்த நிலையில் 1982 இல் மியன்மார் பிரஜாவுரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், ரொஹிங்யா மக்களுக்கான பிரஜாவுரிமை மறுக்கப்பட்டது.அதன் பின்னரே ரொஹிங்யா என்ற பதம் அச்சமூகத்தவர் மத்தியில் பயன்படுத்தப்பட்டமை அதிகரித்திருந்தது.

2013 வரையான காலப்பகுதிக்குரிய தரவுகளின் அடிப்படையில் 7,35,000 ரொஹிங்யாக்கள் மியன்மாரில் உள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மியன்மாரில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளாகியதுடன், மேலும் பலர் பிராந்திய நாடுகளான தாய்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை மியன்மாரில் ரொஹிங்யா இனத்தவர்கள் வாழும் பகுதிகள் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், அவர்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான நிலைமைகள் தொடர்பாக சர்வதேச அமைப்புகளும் மனித உரிமைக் குழுக்களும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளபோதும் மியன்மார் அரசாங்கம் அதற்கு செவிசாய்த்திருக்கவில்லை.

உலகளவில் மிக மோசமான துன்புறுத்தல்களை சந்தித்துள்ள இனம் ரொஹிங்யா என உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன.
இவ்வாறான நிலைமையிலும் மியன்மார் அரசாங்கம் அம்மக்களை குடிமக்களாக அங்கீகரித்து அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு தயாராக இல்லை.

இந்நிலையில் தமது விடுதலைப் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் கடலில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

பங்களாதேஷ் குடியேற்றவாசிகள் 

பங்களாதேஷின் 166 மில்லியன் சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் 15 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர்.

அத்துடன் வேலைவாய்ப்பின்மை வீதம் 13 வீதமாக உள்ளது. பெரும்பான்மை இளைஞர்கள் அங்கு வேலைவாய்ப்பின்றிக் காணப்படுகின்றனர்.
நாட்டின் பொருளாதாரமானது வெளிநாடுகளில் பணியாற்றும் ஏழு மில்லியன்  பங்களாதேஷியர்களில் தங்கியுள்ளது.

2014 தரவுகளின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 533739 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ள நிலையில், தனிநபர் வருமானம் 3373 அமெரிக்க டொலராகக் காணப்படுகின்றது.

பங்களாதேஷைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் பெருமளவில் ஐரோப்பிய நாடுகளை நோக்கியே இதுவரைகாலமும் தமது பயணங்களை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இத்தாலி மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டுள்ளது.
அதேவேளை அமெரிக்க மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் பங்களாதேஷியர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக பங்களாதேஷியர்கள் மற்றொரு ஆசிய நாட்டை நோக்கி குடிபெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நலிவுநிலை மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் காரணமாகவும் அங்குள்ள வாய்ப்பின்மைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்குமே இவர்கள் வேறு நாடுகளைச் சென்றடையும் நிலை உருவாகியுள்ளது.

பங்களாதேஷ் பிரஜை ஒருவரை கடல்மார்க்கமாக மலேசியாவில் கொண்டுசேர்ப்பதற்கு ஆட்கடத்தல்காரர்கள் 2000 அமெரிக்க டொலரை அறவிடுகின்றனர். இத்தொகை கூடிக் குறையும் நிலையும் உள்ளது.

ஆசிய குடியேற்றவாசிகள் நெருக்கடி

பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் குடியேற்றவாசிகள் காரணமாகவே ஆசிய பிராந்தியத்தில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
ஆசிய மக்களைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் இந்தோனேசியா, கிறிஸ்மஸ்தீவு ஆகியவற்றின் ஊடாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைவதனையே இலக்காகக் கொண்டிருந்தனர்.

 ஆனால் அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்காலிகமாக அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது ஆசிய பிராந்தியத்தின் குடியேற்றவாசிகள் விவகாரம் கீழைத்தேய நாடுகளின் சூடான விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

இம்மக்கள் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையிலும் வாழ்வதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையிலுமே இவ்வாறான ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

அந்தமான், அசே மற்றும் மலாக்கா நீரிணை உள்ளிட்ட கடற்பரப்புகளின் ஊடாக இக்குடியேற்றவாசிகள் தமது பயணங்களை  மேற்கொள்கின்றனர்.
கடந்த மாதம் 3,500 குடியேற்றவாசிகள் கடல் மார்க்கமாகப் பயணித்துள்ளனர். இவர்களில் பலர் மலேசியா அல்லது இந்தோனேஷியாவைச் சென்றடைந்துள்ளனர்.

சிலர்  தொடர்ந்து பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் மீட்புப் பணியினரால் மீட்கப்பட்டுள்ளனர். வேறு சிலர் படகு விபத்துகளில் பலியாகியுள்ளனர். அல்லது ஆட்கடத்தல்காரர்களின் துன்புறுத்தல்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை தற்பொழுது ஆட்கடத்தல்காரர்கள் கைவிடப்பட்ட நிலையில் 2,600 பேர் 7 படகுகளில் கடலில் சிக்கியுள்ளனர். இவ்வாறாக பெறுமதியான உயிர்களை இழக்கநேரிடும் அபாயம் நிறைந்த பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நிலை ö தாடர்பாக பிராந்திய நாடுகள் மத்தியில் ஐக்கியமான நிலைப்பாடுகள் காணப்பட்டிருக்கவில்லை.

பிராந்திய நாடுகளின் அசமந்தப்போக்கு தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களும் சர்வதேச அமைப்புகளும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.



நடுக்கடலில் துயரங்கள்




ரொஹிங்யா மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கப்பல்களில் தமது பயணங்களை தொடர்கின்றனர். கரைகளிலிருந்து சிறு படகுகளில் 4 நாட்கள் பயணத்தின் பின்னர் அவர்கள் நடுக்கடலில் பாரிய கப்பலில் ஏற்றப்படுகின்றனர்.

6 தட்டுகளை கொண்ட கப்பலில் மூன்று தட்டுகளில் ஆண்களும் எஞ்சிய மூன்று தட்டுகளில் பெண்களும் வெவ்வேறாக அடைக்கப்படுவதாக மலேசியாவை வந்தடைந்திருந்த ரொஹிங்யா இனத்தவர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற கப்பல்களில் பெண்கள் ஆட்கடத்தல்காரர்களினாலும் கப்பல் பணியாளர்களினாலும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுகின்றனர்.
சொந்த நாட்டில் சுதந்திரமான வாழ்வு கிடைக்காத நிலையில் அகதிகளாக மற்றொரு நாட்டை தேடிச் செல்லும் அப்பாவி மக்கள் மீது இவ்வாறான கொடூரங்கள் நிகழ்கின்றமை துயரத்தின் மேல் துயரமாகும்.
நடுக்கடலில் நடைபெறும் இவ்வாறான துஷ்பிரயோகங்களில் சிறுமிகளும் தப்பவில்லை.

கப்பலில் பெண்கள் தனியாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில்  மிருகங்களைப் போல கப்பல் பணியாளர்கள் நடந்துகொள்கின்றனர். 12 வயதுடைய அழகிய சிறுமியை அழைத்துச் சென்றவர்கள் அவளை அறையொன்றில் அழைத்து கூட்டாக வன்புணர்வில் ஈடுபட்டனர் என பெண் ஒருவர் குறிப்பிட்டார்.

அதேவேளை அங்கு போதுமான உணவு, நீர், சுகாதார வசதிகளையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை.உணவுக்காக ஆட்கடத்தல்காரர்களிடம் கோரிய நிலையில் அடி, உதையே வினயமாகக் கிடைத்தது.

இவ்வாறான துயரங்களை அனுபவித்த வண்ணம் இருப்பவர்கள் கரைசேர்வது மற்றொரு சவால். நடுக்கடலில் தடுத்துவைக்கப்படுபவர்கள் கரைகளைச் சென்றடைய வேண்டுமானால் பெருந்தொகை பணம் கேட்கப்படுகிறது.உறவினர்களின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு குறித்த வங்கிக் கணக்கில் அவர்கள் கோரும் பணத்தொகையினை வைப்பிலிடுமாறு கூறப்படும். அவர்கள் பணத்தை வைப்பிலிட்டால் மீண்டும் சிறு படகுகள் மூலம் அவர்கள் செல்ல விரும்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஆட்கடத்தல்காரர்களின் தாக்குதலில் பலியானவர்களும் உயிருடன் கடலில் வீசப்பட்ட சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.
இவ்வாறாக பல்வேறு துயரங்கள் குடியேற்றவாசிகளால் அனுபவிக்கப்பட்டும் அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் இணங்கியிருக்கவில்லை.

சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் பேரில் ஒரு வருடகாலத்திற்கு குடியேற்றவாசிகளை தற்காலிகமாக அனுமதிப்பதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்திருந்தது. அவ்வாறெனில் இக்காலப்பகுதியின் பின்னர் இவர்களுக்கு என்ன நடக்கும்? மீண்டும் இவர்களின் வாழ்வு கடலுடன் போராடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமா? என்பது தொடர்பாக தெளிவான முடிவுகள் இன்னமும் இல்லை.

ஏற்கனவே மியன்மாரைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 1,20,000 பேருக்கு புகலிடம் கொடுத்திருப்பதாக மலேசியா கூறியுள்ளது.
இதேவேளை ரொஹிங்யா மக்களை ஏற்பதற்கு இந்தோனேசியா இணங்கியிருந்ததாகவும் பங்களாதேஷ் குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

யாரையோ நம்பி எவரையோ கைவிட்ட கதையாகிவிட்டது இந்தப் படகு அகதிகள் விவகாரம். இம்மக்களை ஏற்பதா, இல்லலையா என்பது முதலாவது பிரச்சினை அல்ல.

நடுக்கடலில் சிக்குண்டு தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் மடியும் நிலை உருவாகியுள்ளது.இம்மக்களை முதலில் ஆட்கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து மீட்பதே பிராந்திய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் முக்கிய இலக்காக இருக்கவேண்டும். ஆனால் அதனை விடுத்து இம்மக்களை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பாக விவாதிப்பதற்குரிய தருணம் இதுவல்ல.

இவ்வாறான சூழ்நிலையில் ஆசிய குடியேற்றவாசிகள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மாநாடு கடந்தவாரம் பாங்கொக்கில் நடைபெற்றிருந்த போதும் அங்கு உரிய தீர்வுகள் காணப்பட்டிருக்கவில்லை.
தாய்லாந்தின் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் 17 நாடுகள் கலந்துகொண்டிருந்தன மியன்மார் மற்றும் பங்களாதேஷ் குடியேற்றவாசிகள் விவகாரத்தை கையாள்வதற்கான கூட்டு நடவடிக்கைக்கான படிமுறைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களினது பிரதிபலிப்புகள் எவ்வாறிருந்தன. என்பதனை பார்த்தால் பங்களாதேஷை  விட்டு வெளியேறும் மக்களுக்கு மனநோய். அவர்களால் நாட்டின் கீர்த்திக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டார்.

அத்துடன் பங்களாதேஷில் போதிய வேலைவாய்ப்பு உள்ளதாகவும் இவர்கள் சர்வதேசத்தில் பங்களாதேஷின் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். குடியேற்றவாசிகளுக்கும் ஆட்கடத்தல்காரர்களுக்கும் இவ்விடயத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பொருளாதார நிலைமை காரணமாக வெளியேறும் மக்கள் மீதான ஷேக் ஹசீனாவின் நோக்கு சரியானதாகக் காணப்படவில்லை. அவர் தனது நாட்டின் உண்மை நிலையினைக் கூறி அவர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகளும் வசதிகளும் ஏற்படுத்தித் தருவதாக உறுதி வழங்கியிருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கக்கூடாது.

இதேவேளை எந்தச் சந்தர்ப்பத்திலும் ரொஹிங்யா மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்படமாட்டாதெனவும் அவர்கள் மியன்மார் பிரஜைகள் அல்லர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் உறுதியாக கூறியுள்ளது.

இவ்வாறாக அனைத்துத் தரப்பினராலும் இந்தப் படகு அகதிகள் கைவிடப்பட்டால் இவர்களை அரவணைப்பது யார்?
ஆசிய கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் இக்குடியேற்றவாசிகள் நெருக்கடி நிலையினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பிராந்திய கட்டமைப்புகள் சரியான நடவடிக்கை ஒன்றை எடுக்கவில்லை.

ஆசியான், சார்க் போன்ற பிராந்திய கட்டமைப்புகள் இவ்வாறான நெருக்கடி நிலைகளுக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமலிருப்பது அவற்றின் செயற்றிறன் மீதான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை சர்வதேச அமைப்புகளும் இவ்விடயங்கள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தியிருக்கவில்லை.

சமாதானத்துக்கான நோபல் பரிசினை பெற்றுள்ள மியன்மார் எதிரணி தலைவி ஆங்சான் சூகியும் ரொஹிங்யா மக்கள் விவகாரம் தொடர்பாக மௌனம் சாதிக்கும் நிலையே காணப்படுகின்றது.

ஜனநாயக ஆர்வலர் எனக்கூறப்படும் அதேவேளை, சர்வதேச ரீதியில் குறிப்பாக மேற்குலக நாடுகளின் ஆதரவை கொண்டிருக்கும் ஆங்சான் சூகியின் மௌனம் தொடர்பாக திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா கேள்வி எழுப்பியுள்ளார்.

மியன்மாரில் பௌத்தர்களால் புறக்கணிக்கப்படும் இனம் ஒன்றிற்காக தலாய்லாமா குரல் கொடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதொன்றாகும்.
ஆனாலும் இந்த விவகாரங்களில் சர்வதேச சமூகமும் போதுமான அக்கறையினைக் கொண்டிருக்கவில்லை.

புலம்பெயர்வு அல்லது குடியேற்றமானது மற்றொரு நாட்டில் புகலிடம் வழங்கப்படுவதுடன் நிறைவுறும் விடயமல்ல. இவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அவற்றை இல்லாதொழிப்பதே இப்பிரச்சினைக்கான நிலையான தீர்வாக அமையும்.

ரொஹிங்யா மக்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மியன்மாரில் பிரஜாவுரிமை பெற்றுக்கொடுப்பதுதான் அந்த மக்களின் எதிர்கால அவல வாழ்வையும் அபாயகரமான கடற்பயணங்களையும் முடிவுக்கு கொண்டுவரும். அதேவேளை பங்களாதேஷ் மக்கள் விவகாரத்தில் அந்நாட்டு அரசாங்கம் உரிய கொள்கைகளை வகுத்து சகல மக்களுக்கும் திருப்தியான வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதனை உறுதிப்படுத்தவேண்டும்.

எதிர்காலங்களிலும் நடுக்கடலில் அகதிகளின் அவலங்கள் தொடராமலிருக்க சர்வதேச சமூகம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளாக மேலே குறிப்பிட்ட விடயங்கள் இருக்கின்றன.

அத்துடன் தொடர்புபட்ட அரசுகளான மியன்மாரும் பங்களாதேஷûம் தம் நிலைகளிலிருந்து விலகி குடியேற்றவாசிகளின் அபிலாஷைகளை தீர்ப்பதன் மூலம் அம்மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் வரை ஆட்கடத்தல், கடலில் மரணங்கள், அகதி வாழ்வு ஆகியவை தொடரும் என்பதில் ஐயமில்லை.


நன்றி  புதிய பண்பாடு