அமெரிக்காவின் தந்திரோபாய சுற்றுக்குள் ஈரானை உள்வாங்குவதற்கான ஒரு முயற்சியாக ஈரானின் அணு உடன்படிக்கையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன் பிரதிபலனாக ஈரான் அமெரிக்காவின் பிடிக்குள் வீழ்ந்துவிட்டால் அமெரிக்காவின் முக்கிய விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் கரங்கள்
வலுப்பெறுமென சர்வதேச அரசியல் வல்லுநர்களும் ஈரான் அணு உடன்படிக்கையின் ஆதரவாளர்களும் கூறியுள்ளனர்.
வலுப்பெறுமென சர்வதேச அரசியல் வல்லுநர்களும் ஈரான் அணு உடன்படிக்கையின் ஆதரவாளர்களும் கூறியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக சர்வதேச அரசியல் அரங்கத்தை இரு உடன்படிக்கைகள் குறித்த பேச்சுகள் ஆக்கிரமித்திருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முதலாவது பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருந்தது.
கிரேக்க நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கான மீட்பு நிதித் திட்டம் தொடர்பாக நீடித்த இழுபறி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ஈரான் அணு உடன்படிக்கை விவகாரம் மீது உலகின் கண்கள் தமது பார்வை வீச்சை செலுத்தியிருந்த நிலையில், ஜூன் 30 ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டிய
ஈரான் அணு நிகழ்ச்சித் திட்டம் குறித்த உடன்படிக்கை விவகாரம் அதன் காலக்கெடு திகதியை தாண்டியும் முடிவுறாத தொடராக நீண்டது.
ஈரான் அணு நிகழ்ச்சித் திட்டம் குறித்த உடன்படிக்கை விவகாரம் அதன் காலக்கெடு திகதியை தாண்டியும் முடிவுறாத தொடராக நீண்டது.
இன்றுவரும், நாளைவரும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த அணு உடன்படிக்கை திங்கட்கிழமையன்று சம்பந்தப்பட்ட தரப்பினரின் இணக்கப்பாட்டினை எட்டியிருந்தது.
இதனையடுத்து சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்தாலும் இதன் பிரதிபலன்கள், எதிர்மறை விளைவுகள் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழாமலில்லை.
இதேவேளை இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. சர்வதேச அரசரங்கில் நீடித்த ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாண பங்களிப்பு வழங்கியதன் மூலம் அமெரிக்க அரசியலில் கெரிக்கான ஆதரவு பெருவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஈரானின் அணு விவகாரம் இவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்டமைக்கு என்ன காரணம்? அதன் அணு நிகழ்ச்சித் திட்டத்தில் எவ்வாறான சர்ச்சைகள் காணப்படுகின்றன, அணுவாயுத வல்லமை உடைய அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஈரான் அணுவாயுத வல்லமையினை பெற்றுவிட்டால் உலகின் ஏனைய பகுதிகளுக்கு ஆபத்து எனக் கருதியதன் விளைவே இதுவாகும்.
இந்த இராஜதந்திரப் போட்டியின் விளைவாகத்தான் ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் சர்ச்சைக்குள் சிக்குண்டது.
ஈரான் அணு ஆயுதம் ஒன்றை தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இக்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்த ஈரான் அமைதித் தேவைகளை இலக்காகக் கொண்டே யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறியது.
2006 ஆம் ஆண்டில் இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்த நிலையில், இவ்வாறான கருத்தினை இருதரப்பினரும் முன்வைத்திருந்தனர். இன்று கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலம் நிறைவுற்றிருக்கும் நிலையிலும் இரு தரப்பினரினதும் நிலைப்பாடு மாறவில்லை. ஆனால் இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுவிட்டது.
இந்த 10 வருட காலப்பகுதிக்குள் பல்வேறு மத்தியஸ்தர்களால் பல இடங்களில் பல கட்டங்களாக பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பல உடன்படிக்கைகள், வரைபுகள் பேச்சு மேடைகளில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அவற்றின் உட்பொதிவுகள் மாறுபடவில்லை.
இவ்வாறாக கடந்த தசாப்தத்தில் தொடர்ந்த பேச்சுகள் ஜூன் 30 என்ற இறுதிக்காலக்கெடுவை அண்மித்த நிலையில், எந்த விலையினைக் கொடுத்தாவது இந்த உடன்படிக்கையினை கைச்சாத்திடவேண்டுமென்ற முனைப்பில் சகல தரப்பினரும் முழுமூச்சுடன் இந்த இணக்கப்பாட்டினை எட்டிய பந்தயத்தில் வேகமாக ஓடியதன் விளைவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு காரணமாயிற்று.
இதற்கிடையில் ஈரானின் இந்த அணு விவகாரத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பது வழமைபோலவே அமெரிக்காதான். உலகின் சகல புறங்களிலும் அதன் கழுகுப் பார்வை செலுத்தப்பட்டுள்ளமை ஏலவே யாமறிந்த விடயம்.
அமெரிக்க அரசாங்கம் இப்பேச்சுகள் அதாவது வியன்னாவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் பேச்சுகள் இடம்பெற்ற காலப்பகுதியில் ஈரானை நோக்கி கடுந்தொனியிலான அச்சுறுத்தல்களையும் விடுத்திருந்தன.
அதாவது ஈரான் இந்த உடன்படிக்கை எட்டப்படுவது தொடர்பான முடிவுகளில் சில கடினமான தெரிவுகளை மேற்கொள்ளத் தவறினால் அமெரிக்கா பேச்சுகளிலிருந்து விலகிவிடுமென எச்சரித்திருந்தது.
ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பிரச்சினையை தூண்டியவர்களே இதிலிருந்து விலகுவது சாத்தியமானதா என்பதனை எளிதில் அனுமானிக்க முடியாதவர்கள் நாம் அல்ல.
அணு நிகழ்ச்சித் திட்டத்தில் என்ன உள்ளது என்பதனை விரிவாகப் பார்ப்பதற்கும் அணு ஆயுதம் ஒன்றினை ஈரான் உற்பத்தி செய்துவிடக் கூடாதென்பதிலும் வலு ஆர்வமாக உள்ளது அமெரிக்கா. இவ்வாறான நிலையில் பேச்சுகளிலிருந்து எவ்வாறு வெளிநடப்புச் செய்யமுடியும்?
இன்று ஈரான் அணு உடன்படிக்கையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாரிய வெற்றி என அறைகூவல் விடுத்துள்ளார்.
'அணு ஆயுதம் ஒன்று உருவாக்கப்படுவதற்கான சகலவழிகளும் மூடப்பட்டுள்ளன' என ஒபாமா கூறியிருப்பதன் மூலம் அமெரிக்காவின் திரைமறைவிலான இலக்கு வெளிப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுத வல்லமையுடைய நாடாகிவிடக் கூடாதென்பதே அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் பிரதான இலக்காகும். நான் பெற்றிருக்கும் வல்லமையினை ஏனையோர் பெற்றுவிடக்கூடாது என்ற நிலைப்பாடா அல்லது அணுவாயுத வல்லமை பொருத்தமற்றவரின் இல்லாதுவிடில் அபாயகரமானவர்களின் கரங்களில் சென்றுவிடக்கூடாது என்ற திண்ணமா இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
ஈரானின் அணு உடன்படிக்கையினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இன்னமும் சில தடைக்கற்களை தாண்டவேண்டிய சவால்கள் உள்ளன.
அணு நிகழ்ச்சித் திட்டத்தில் கட்டுப்பாடுகளை ஈரான் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலீடாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கவேண்டுமென அந்நாட்டரசு கோரியுள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு அவர்கள் கொள்கையளவில் இணங்கியுள்ளனர்.
இங்குதான் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை காங்கிரஸ் நீக்கவேண்டும். அதற்கான சட்டபூர்வ, நியாயபூர்வ அதிகாரம் அங்குதான் உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸில் குடியரசுக் கட்சி உள்ளிட்டவைகள் ஈரான் அணு உடன்படிக்கையினை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பொருளாதாரத் தடையினை நீக்கும் பிரேரணைக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளன.
இந்த நிலைப்பாடு இவ்வாறு இறுகினால் தான் வீட்டோ அதிகாரத்தினை
பயன்படுத்தி ஈரான் மீதான தடைகளை நீக்குவாரென ஒபாமா கூறியுள்ளார்.
ஈரானின் அணு விவகாரம் அமெரிக்காவிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலும் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஆதரவளிக்கும் ஒரு விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் எதிர்க்கும் விடயத்துக்கு ஆதரவளிப்பதும் இஸ்ரேலின் வழமையான குணவியல்புதான். ஆனாலும் அமெரிக்கா தனது பிடிக்குள் ஈரானை கொண்டுவர முயற்சிக்கும் நிலையில், அதனை எதிர்ப்பதற்கான காரணம் என்னவென்று வெளிப்படையாக ரஷ்யா கூறவில்லை.இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை 'வரலாற்றுத் தவறென' இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதன் மூலம் ஈரானுக்கான தடைகள் நீக்கப்படும் நிலையில், ஈரானின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து ஆயுத பலம் மேலும் வலுவடையுமென அவர் எச்சரித்துள்ளார்.
அதேசமயம் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை தொடர்பான பிரதிபலிப்புகளை காணமுடிகின்றது.
குறிப்பாக மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் இடம்பெற்று ஓய்ந்திருக்கும் நிலையில், இந்த அணு உடன்படிக்கை விவகாரம் மீண்டும் பிராந்திய கிளர்ச்சிக்கு வழிவகுக்குமாவென அஞ்சப்படுகிறது.
ஆனாலும் ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டத்தின் உண்மையான இலக்கு தொடர்பாக இந்த உலகத்தின் மாயை இன்னமும் அகலவில்லை.
நன்றி புதிய பண்பாடு



