தனி
நடிப்பினை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பல்திறன் மிக்க கலைஞரே கே.எஸ்.
பாலச்சந்திரன் என தென்றல் சேவையின் பணிப்பாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
தமிழ்ச் சங்கத்தில் இந்திய கலாசார நிலையத்தின்
ஏற்பாட்டில் இடம்பெற்ற கே.எஸ். பாலச்சந்திரன்
நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஆர். யோகராஜன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ;
அண்ணை றைட் கே.எஸ்.பாலச்சந்திரன் என
எல்லோராலும் அழைக்கப்பட்ட கே.எஸ்.பாலச்சந்திரன் 1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் கரவெட்டி என்ற
கிராமத்தில் பிறந்தார்.
இலங்கையில் பல்துறைக் கலைஞர்கள் என்று ஒரு
சிலர்தான் இருக்கின்றார்கள். நகைச்சுவை, தனிநடிப்பு,
வானொலி நாடகம், மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம், சினிமா, எழுத்துத்துறை, கலை இலக்கியம் எனப் பல்துறைகளில் கால் பதித்தவர்களுள் கே.எஸ்.பாலச்சந்திரனும் ஒருவர் .அதிலும் நகைச்சுவை என்பது அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் என்றுதான் சொல்ல வேண்டும். நகைச்சுவையாகப் பேசுவது, நகைச்சுவையாக நடிப்பது, நகைச்சுவையாக எழுதுவது என்பது எல்லோராலும் முடியாத விடயம். அது அண்ணன் பாலாவிற்கு கைவந்த கலை. நீண்ட காலம் கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன்.
வானொலி நாடகம், மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம், சினிமா, எழுத்துத்துறை, கலை இலக்கியம் எனப் பல்துறைகளில் கால் பதித்தவர்களுள் கே.எஸ்.பாலச்சந்திரனும் ஒருவர் .அதிலும் நகைச்சுவை என்பது அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் என்றுதான் சொல்ல வேண்டும். நகைச்சுவையாகப் பேசுவது, நகைச்சுவையாக நடிப்பது, நகைச்சுவையாக எழுதுவது என்பது எல்லோராலும் முடியாத விடயம். அது அண்ணன் பாலாவிற்கு கைவந்த கலை. நீண்ட காலம் கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன்.
கலை இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடத்தைப்
பெற்று பல்துறைக் கலைஞனாகவும் நல்லதொரு எழுத்தாளனாகவும் வாழ்ந்து, தனது 70 ஆவது வயதில் இவ்வுலகைவிட்டுச் சென்றுள்ளார். கே.எஸ்.பாலச்சந்திரனின் இழப்பு
எமது நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.
அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் தான்
நோய்வாய்ப்பட்டவன் என்பதை வெளிக்காட்டவில்லை. தனது இலக்கியப் படைப்புக்களையும்
தான் ஒரு எழுத்தாளன் என்பதையும், கலைஞன், படைப்பாளன் என்பவற்றை மனதில்
நிலைநிறுத்திக்கொண்டுதான் கலைக்கு தனது சேவையை ஆற்றிக்கொண்டிருந்தார். ஆக்கங்களைப்
படைத்த வண்ணமும் இருந்தார். எப்பொழுதிலும் எனக்கு மரணம் இல்லை என்ற மன வலிமையையும்
எடுத்துக்காட்டினார்.
1967 களில் இலங்கை வானொலியில் இளைஞர் மன்ற
நிகழ்ச்சி மூலம் தன்னை வானொலியோடு இணைத்துக் கொண்டவர்தான் கே.எஸ்.பாலா.
1971 இல் இலங்கை வானொலியின் தமிழ்த் தேசிய சேவை
நடத்திய வானொலி நாடக கலைஞர் குரல் தேர்வில் சித்தியடைந்தார். அன்று எமது வானொலி
நாடகத் தயாரிப்பாளராகக் கடமையாற்றியவர் சானா. சானாவின் வானொலி நாடகங்கள் பலவற்றில்
பாலா நடித்து வந்தார். வானொலி நாடகங்கள் எழுதுவது, நடிப்பது என்றால் அவருக்கு அதில் ஒரு
பைத்தியம். தானும் நடித்து மற்றவர்களையும் நடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்தான்
பாலா. அதுவும் நகைச்சுவை நாடகங்கள் என்றால் போதும், தன்னுடன் நடிப்பவர்கள் அத்தனைபேரையும்
உருட்டிப் பிரட்டி நல்ல நகைச்சுவை நடிகர்களாக மாற்றிவிடுவார்.
வானொலி நடிப்பில் பல வித்தியாசத்தை
வெளிப்படுத்தியவர் தான் கே.எஸ்.பாலா. இவருக்கு கடவுள் கொடுத்த ஒரேயொரு கொடைதான்
நகைச்சுவை. அந்த நகைச்சுவைதான் இவரை நடிப்பின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
அந்த நகைச்சுவையை வைத்துத்தான் தனிநடிப்பு என்ற
ஒன்றை மக்கள் மத்தியில் கொண்டுவந்தார். தனி நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை
உருவாக்கியவர்.
பாலா
அண்ணனின் தனிநடிப்பு என்பது ஒரு வகையானது. அண்ணை றைற், கோணசீற் கோபாலபிள்ளை, ஓடலி இராசையா ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்ல
முடியும். அவரை மக்கள் மனங்களில் நிலைநிறுத்தியது அவரது நகைச்சுவை கலந்த
தனிநடிப்புத்தான். அவர் எத்தனையோ மேடை நாடகங்கள் நடித்திருக்கலாம், எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருக்கலாம்,
எத்தனையோ தொலைக்காட்சி
நாடகங்கள் நடித்திருக்கலாம். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டித்தான் அவரது தனிநடிப்பில் உருவான அண்ணை றைட் இலங்கையில்
பட்டிதொட்டி எங்கும் அவரைப் பிரபல்யப்படுத்தியது.
அண்ணை றைட் பற்றிப் பேசாத உள்ளங்களே இல்லை. ஒரு
பஸ்ஸுக்குள் நடக்கும் அத்தனை விடயங்களை தனிநடிப்பின் மூலம் மக்கள் மத்தியில்
கொண்டுவந்தார். அதனை நடிப்பென்று சொல்வதைவிட நவரசம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நகைச்சுவை நாடகம் மட்டும் அல்ல, சமூக நாடகங்களாக இருந்தாலும் சரி, இலக்கிய நாடகங்களாக இருந்தாலும் அவரது
நடிப்பாற்றல் என்பது மற்றவர்களையும்விட வித்தியாசமான ஒன்றாகத்தான் இருக்கும்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் ஒலிபரப்பான
தணியாத தாகம் என்ற தொடர் நாடகம் தான் அவரைப் பல உள்ளங்களில் நிலைநிறுத்தியது. அந்த
நாடகத்தில் அண்ணன் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அந்த சோமு என்ற அண்ணன்
பாத்திரம் எத்தனையோ தங்கைகளின் இதயத்தை கீறிச்சென்றது. எத்தனையோ தங்கைகள்
இப்படியோர் அண்ணன் தங்களுக்கு இல்லையே என்ற ஏக்கத்தையும் தூண்டியது.
வர்த்தக சேவையில் ஒலிபரப்பான கிராமத்து கனவுகள்
என்ற நாடகத்தை எழுதி நடித்தவரும் கே.எஸ்.பாலா. இலங்கை வானொலியில் ஒலிபரப்பான
மிகவும் பிரபல்யமான நாடகத் தொடரில் கிராமத்துக் கனவுகளும் ஒன்றாகும். அன்று அதனை
நெறியாள்கை செய்தவர் எமது மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் . அத்துடன்
வாத்தியார் வீட்டில் என்ற நகைச் சுவை நாடகத்தையும் அண்ணன் கே.எஸ்.பாலாவே
எழுதினார்.
கிராமத்துக் கனவுகள் என்ற நாடகமும் வாத்தியார்
வீட்டில் என்ற நகைச்சுவை நாடகமும் பின்நாட்களில் ஒலிப்பேழையாக வெளியீட்டு
வைக்கப்பட்டன.
அரைமணி நேர நாடகங்கள், 15 நிமிட நேர நாடகங்கள், நகைச் சுவை நாடகங்கள், இலக்கிய நாடகங்கள் எனப் பல நாடகங்களை எழுதியும்
நடித்தும் உள்ளார் அண்ணன் பாலா. இதில் இன்னுமொரு விடயத்தைச் சொல்லியே தீர
வேண்டும். தேசிய சேவை என்றால் அதற்குரிய வடிவில் நாடகங்களை எழுதுவதும் வர்த்தக
சேவை என்றால் அதற்குரிய வடிவில் நாடகங்களை எழுதும் அவரது திறமைகளுள் ஒன்றாகும்.
அதையும் தாண்டி பல்வேறு பரிமாணங்களை நடிப்பில் காட்டிய அற்புதமான நடிப்புப்
பித்தன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவர் நடித்த பிரபல்யமான ஒருசில தேசிய சேவை
நாடகங்களைக் குறிப்பிடலாம். 1982 ஆம் ஆண்டு
ஒலிபரப்பான பாதையில்லாப் பயணங்கள் என்று நாடகம் 1988 ஆம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷல் கதம்பம் நகைச்சுவை
நாடகம் ஒலிபரப்பானது. 1089 ஆம் ஆண்டு அன்பு என்ற நாடகம் பிரபல்யமாக
இருந்தது. 1990 இல் நன்றிக்
கடன் என்ற நாடகம் ஒலிபரப்பானது.
இப்படிப் பல்வேறு வகையான நாடகங்களில் நடித்துப்
பிரபல்யமடைந்தார் அண்ணன் கே.எஸ்.பாலா.
இனி இலங்கை வானொலியில் ஒலிபரப்பான அவரது
இலக்கியப் படைப்புக்கள் பக்கம் பார்ப்போம்.
கலைப்பூங்கா கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி
ஒன்றையும் பல வருடங்களாக தொகுத்து வழங்கி
வந்தார். பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார். கிராமிய
நாடகங்கள் உட்பட கிராமிய நிகழ்ச்சிகள் பலவற்றிலும் தனது பங்களிப்பைச்
செலுத்தினார்.
1990 களில் இலக்கியத் தரம் வாய்ந்த நிகழ்ச்சியாக
அன்று பேராசிரியர்களால் பாராட்டப்பட்ட நிகழ்ச்சிதான் கலைப்பூங்கா என்ற இலக்கிய
சஞ்சிகை நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி மூலம் பல பேராசிரியர்களையும் பிரபல்யமான உலக
எழுத்தாளர்களையும் நம்நாட்டு எழுத்தாளர்களையும் நடிகர்களையும் நம்நாட்டுப்
பாடகர்களையும் வானொலி மூலம் வெளியுலகிற்குக் கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சியை
தயாரித்தவர் ஜோர்ஜ் சந்திரசேகரன். அதன் பின்னர் நான் அந்த நிகழ்ச்சியை தயாரித்து
வந்தேன்.
இவர் இலங்கை உள்நாட்டு வருமான வரித்
திணைக்களத்தில் பணியாற்றினாலும் இவரது முழு மூச்சாக இருந்தது இலங்கை வானொலிதான். 20 ஆண்டுகளுக்கு மேல் வானொலி நாடக நடிகராக
விளங்கியவர் கே.எஸ்.பாலச்சந்திரன்.
வானொலி நாடகமாக இருக்கலாம், மேடை நாடகமாக இருக்கலாம், தொலைக்காட்சி நாடகமாக இருக்கலாம், சினிமாவாக இருக்கலாம். இவரது அத்தனை
படைப்புக்களிலும் நகைச்சுவையே தென்பட்டது எனக் குறிப்பிட்டார்.
