ஜனநாயக ஆட்சிக்காக ஒன்றிணையுங்கள்

பூமியின் மிகப் பெரிய மனித ஒன்றுகூடல் மஹாகும்பமேளாவில் 3 கோடி பேர் புனித நீராடல்






இந்தியாவின் இருபெரும் நதிகளான கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் அலஹாபாத்தில் புனித நீராடுவதற்கான இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை 30 மில்லியன் யாத்திரிகர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டனர். பூமியில் இடம்பெறும் மிகப் பெரிய மனித ஒன்று கூடல் நிகழ்வான இக்கும்பமேளாவில் உள்ள புனித நீராட்டத்திற்கான  ஆறு  நாட்களில் மிகவும் புனிதநாளாக நேற்றைய தினம் கருதப்படுகின்றது. 

இந்த நிகழ்வின் ஆரம்ப தினமான ஜனவரி 14 ஆம் திகதி 8 மில்லியன் பக்தர்கள் புனித நீராடினர்.   கங்கையும் யமுனையும் சந்திக்கும் இச் சங்கமத்தில் புனித நீராடுவதன் மூலம் தமது பாவங்களை நீக்கி மோட்சம் கிடைக்குமென இந்துக்கள் நம்புகின்றனர். 12 வருடத்துக்கு ஒருமுறை வரும் இந்த கும்பமேளாவில் ஜனவரி முதல் பெப்ரவரி வரையான 55 நாட்களில்100 மில்லியன் பேர் நீராடியதாகக் கூறப்படுகின்றது. இம்முறை கொண்டாடப்படுவது 144 வருடத்தில் ஒருமுறை கொண்டாடப்படும் மஹா கும்பமேளாவாகும். 

அலஹாபாத்தின் வட பகுதி நகரில் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சர்வதேச நாடுகளிலும் இந்தியாவின் சகல பகுதிகளிலிருந்தும் வருகை தந்து கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நேற்று மட்டும் 14 ஆயிரம் பொலிஸார், துணை இராணுவத்தினர் , தளபதிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 
இம்முறை போல் முன்னொரு போதும் மக்கள் கூட்டம் கலந்து கொண்டிருக்கவில்லையென பொலிஸ் தலைமை அதிகாரி ஏ.ஆர்.கே.எஸ். ரத்தோஸ் கூறியிருந்தார். சனிக்கிழமை மட்டும் 12 மில்லியன் பேர் வருகை தந்திருந்ததாக அவர் கூறியிருந்தார். இவர்கள்  அனைவரும் ஞாயிற்றுக்கிழமை நீராடுவதற்காக இங்கேயே தங்கியிருந்தனர். வரலாற்றில் முதற் தடவையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். சனக் கூட்டத்தை மிகவும் தெளிவாகக் காண்பதற்காக குதிரைகளில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பரந்த வெளி எங்கும் மனிதக் கடலையே எம்மால் காணமுடிகின்றதென்றார். 

                 இந்து பாரம்பரியத்தின் படி ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றது. ஆற்றங்கரையோரங்களில் 18 இடங்களில் இப் புனித நீராடல் இடம்பெறுகின்றது. இக்கும்பமேளா தொடர்பாக ராஜ்குமார் சிங் எனும் பஞ்சாப் அரசு பணியாளர் ஒருவர் கூறுகையில் ; இவ் விழாவில் கலந்து கொள்ள ரயில், பஸ் , கால்நடையென மூன்று தினங்கள் பயணித்தேன். இங்கு புனித நீராடுவதன் மூலம் எனது சகல பாவங்களும் நீங்கி எதிர்காலத்தில் எனது குடும்பம் பாதுகாப்பானதும் செழிப்பானதுமான  வாழ்வைப் பெறுமெனத் தெரிவித்தார். 

14 ஜனவரிக்குப் பின்னரான காலப்பகுதியில் இதுவரை 12 மில்லியன் மக்கள் நீராடியதாக விழா குழுவினர் கூறினர். ஆரம்பம் முதல் இதுவரை அங்கு அமைக்கப்பட்ட 14 மருத்துவமனைகளில் 150,000 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். பெரும்பாலானவர்கள் சுவாசம், சளி, மூட்டுவலி மற்றும் தூசு ஒவ்வாமை போன்ற நோய்களுக்கே சிகிச்சை  பெற்றுள்ளனரென பிரதான மருத்துவமனையின் டாக்டர் கலிம் அக்மல் குறிப்பிட்டுள்ளார். 

இந்துக்களின் இதிகாசங்களிலேயே கும்பமேளா குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலமும் அங்கேயே உள்ளது. கடவுளும் பேய்களும் அமிர்தம் நிறைந்த ஜாடிக்காக போரிட்ட போது அமிர்தம் சிந்திய நகரங்களான அலஹாபாத் ,நாசிக் , உஜ்ஜயின் மற்றும் ஹரித்வார் ஆகிய நான்கு நகரங்களிலேயே கும்பமேளா நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான பெருமை நிறைந்த கும்பமேளாவில் கலந்து கொள்ள இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அதிகாலை முதல் நீராட ஆரம்பித்திருந்தனர். நீண்ட முக்கோணக் கொடிகள், அம்பு, வில், பதாகைகள் போன்றவற்றுடன் பலர் ஆடியும் பாடியும் மேளங்களை அடித்தும் பக்தி பரவசமாகக் காணப்பட்டனர். அதேவேளை, வேறு சிலர் அலங்கரிக்கப்பட்ட தேர்களிலும் , சிலர் குதிரைகளிலும் வந்தனர். அநேகமானவர்கள் உடலெங்கும் குங்குமம் பூசிக் காணப்பட்டனர். அல்லது வேட்டி தரித்திருந்தனர். 
சாதுக்களில் அநேகமானவர்கள் நிர்வாணமாக உடலெங்கும்  சாம்பல் பூசி நீண்டு சுருண்ட இறுகிய முடியுடன்  புழுதிகளில் உருண்டும் படுத்தும் அங்குமிங்குமாக ஓடி ஆற்றில் நீராடிய வண்ணம் காணப்பட்டனர். ஆகாயத்தை  கூரையாகக் கொண்டு இக்குளிரான காலநிலைக்குள் பல்லாயிரக்கணக்கான ஏழை குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. 
இங்கு புனித நீராடுவதும் மிக முக்கியமான பிரார்த்தனையென அசுதேஷ் பண்டே என்ற இளம் பக்தர் ஒருவர் கூறியுள்ளார். நான் இப் புனித நீராடும் போது எனது நாட்டினதும் முழு உலகினதும் நன்மைக்காகப் பிரார்த்தித்தேன் என்று அந்த இளைஞர் கூறினார்.